கடையநல்லூர் MLA அபூபக்கர் சட்டப்பேரவையில் ஆற்றிய உரை

தமிழக சட்டப்பேரவையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டப்பேரவை கட்சி தலைவரும், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ. அவர்கள் 21.06.2016 ஆற்றிய உரை:

இந்த சட்டமன்றப் பேரவையிலே இந்த எளியவன் பணியாற்றுவதற்காக எனக்கு வாக்களித்து பெருமைப்படுத்தியிருக்கக்கூடிய கடையநல்லூர் தொகுதியினுடைய அனைத்து வாக்காளப் பெருமக்களுக்கும், நான் போட்டியிடுவதற்கு எனக்கு வாய்ப்பளித்த எங்களுடைய தலைவர் பேராசிரியர் காதர் மொகீதின் அவர்களுக்கும் கூட்டணியினுடைய தலைவர், தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கும், மக்களே நமக்கு நாயகன் என்று போற்றக்கூடிய கதாநாயகனாக இருக்கக்கூடிய தளபதி அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த சிறப்புக்குரிய அவையினுடைய முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கும் மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கும், மாண்புமிகு அமைச்சர் பெருமக்களுக்கும், மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் அவர்களுக்கும், சட்டமன்ற உறுப்பினர் அனைவருக்கும் நான் சார்ந்திருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.`
இந்த ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் ஐந்து முக்கியமான அறிவிப்புகளை நிறைவேற்றி இருக்கின்றார்கள். அதற்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அருமையான பெருமக்களே, டாஸ்மாக் கடைகள் 500 மூடப்பட்டிருக்கின்றன. தமிழகம் விரும்புவது, தமிழக மக்கள் விரும்புவது, தாய்மார்கள் விரும்புவது கடைக்கோடியில் இருக்கக்கூடிய அனைவர்களும் இந்த நாட்டில் பூரண மதுவிலக்கு வேண்டும் என்பது தான்.
பூரண மதுவிலக்கு
தேர்தல் பிரச்சாரத்திலும், நன்றி தெரிவிக்ககூடிய நேரங்களிலும், தாய்மார்கள் எல்லாம் என் கையைப்பிடித்துக் கொண்டு, கண்ணீர் விட்டு, என் கணவன் 500 ரூபாய் சம்பாதிக்கின்றார், ஆனால், வீட்டிற்கு வருவது 300 ரூபாய் தான் என்றனர். 800 ரூபாய் சம்பாதித்தால் வீட்டிற்கு வருவது 600 ரூபாய் தான், 200 ரூபாய் சாரயத்தில் போய்விடுகிறது என்று கண்ணீர் விட்டார்கள். கருணை உள்ளத்தோடு பரிசீலித்து பூரண மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்துவதற்கு இந்த அரசு வழிவகை காண வேண்டும் என்பதை தெரிவித்தக் கொள்கிறேன்.
எனது தொகுதிக்குட்பட்ட கடையநல்லூர் பகுதியிலேயே காசிதர்மத்திற்கு போகும் வழியில் பள்ளிக்கூடம் ஒன்றிருக்கின்றது. விஸ்டம் மெட்ரிக்குலேஷன் பள்ளிக்கூடம். அதன் மிக அருகிலேயே ஒரு மதுக்கடை இருக்கின்றது. ஆட்சியரிடத்தில் நான் சொல்லியிருக்கின்றேன் அங்கிருந்து அந்த கடையை அகற்றக்கூடிய முயற்சியிலே இந்த ஆட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மத்திய அரசிடம் போராடி பெற வேண்டும்
அருமையான பெருமக்களே, தமிழ்நாட்டிலே வளர்ச்சிக்காக மத்திய அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுவதை இங்கே குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அதை வரவேற்கின்றோம். அதே போன்று மத்திய அரசாங்கத்தோடு போராடிப் பெற வேண்டிய அனைத்து விசயங்களிலேயும், மாநில அரசாங்கம் போராடிப் பெற வேண்டும். அனைத்து விசயங்களிலேயும் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று பாராமல் இணைந்து பணியாற்றி, அவ்வப்போது பிரதமரைச் சந்திக்கக்கூடிய முயற்சியிலும், அனைத்து கட்சியினுடைய பிரதிநிதிகளும் பங்கேற்ககூடிய ஒரு சூழலை ஏற்படுத்திட வேண்டும். எப்படி சிறிய சிறிய மாநிலங்களில் எல்லாம் பெரிய திட்டங்களைக் கொண்டு வருகின்றார்களோஅதே போன்று சிறப்பிற்குரிய தமிழ்நாட்டிற்கும் பல்வேறு திட்டங்களை மத்திய அரசாங்கத்திலிருந்து போராடிப் பெற வேண்டும் என்பதை நான் இங்கே வலியுறுத்திக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கின்றேன்.
மாநில நதிகளை இணைக்க வேண்டும்:
அதைபோல, ஆளுநருடைய அறிக்கையிலேயே நதிநீர் பிரச்சனைகளைப் பற்றி தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றது. தேசிய நதிகளையெல்லாம் இணைக்க வேண்டும் என்பது பல்வேறு நிலைகளிலே சொல்லப்பட்டாலும் துவக்கமாக தமிழகத்திலேயே இருக்கக்கூடிய மாநில நதிகளையெல்லாம் இணைக்கக்கூடிய முயற்சியில் தமிழக அரசாங்கம் ஈடுபட வேண்டும். அதன் மூலமாக குடிதண்ணீர் பிரச்சனை, விவசாயிகளுடைய பிரச்சனைகளை தீர்ப்பதற்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.
குடிநீர் பிரச்சினை
எனது தொகுதியான கடையநல்லூர் தொகுதியை பொறுத்தவரையில், மிகப்பெரிய சவாலாக இருப்பது குடிதண்ணீர் பிரச்சனைதான், கடையநல்லூர் தொகுதியிலேயே பல ஊர்களுக்கு பத்து நாட்களுக்கு ஒரு முறை, பன்னிரண்டு நாட்களுக்கு ஒரு முறைதான் குடிதண்ணீர் வருகின்றது. இதற்கு எல்லாம் ஒரு முடிவுகட்ட வேண்டுமென்று சொன்னால் ஏற்கனவே திமுக ஆட்சியிலே தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தை அறிவித்திருந்தார்கள். அத்திட்டம் நிறைவடையக் கூடிய சூழ்நிலையிலேயே இருக்கின்றது. மாண்புமிகு முதல்வர் அவர்கள் இதிலே தனிக்கவனம் செலுத்தி தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தை விரைவாக நிறைவேற்றக்கூடிய ஆணையை பிறப்பிக்க வேண்டும் என்பதை இங்கே தெளிவாக சொல்லக்கடமைப்பட்டிருக்கின்றேன். அதே போல கருப்பாநதி அணையிலேயே 5 கிணறுகள் இருக்கின்றன அவை முறையாகத் தூர்வாரப்படவேண்டும், மேலும், 3 கிணறுகளாவது புதிதாக ஏற்படுத்த வேண்டும் அங்கேயுள்ள மதகுகளையெல்லாம் நீக்கி முறையாக அந்த தண்ணீரை குடிதண்ணீருக்கு முன்னுரிமை கொடுக்கின்ற வகையிலே இந்த ஆட்சி அறிவுறுத்த வேண்டுமென்பதையும், அந்தக்குடிநீரையெல்லாம் தனியாருக்கு முறை தவறி விவசாயத்திற்கு கொடுக்கின்ற சூழ்நிலையிலிருந்து முழுமையான கட்டுப்பாட்டை விதித்து முறையாக குடிதண்ணீருக்கு முன்னுரிமை வழங்க வேண்டுமென்பதையும் இங்கே வலியுறுத்த கடமைப்பட்டிருக்கிறேன்.
அணைகள் தூர் வாருதல்
அதைப்போல என்னுடைய தொகுதிக்குட்பட்ட, பண்பொழி, மேக்கரை, அச்சன்புதூர் போன்ற பகுதிகளிலும் குடிநீர்ப் பிரச்சனை இருக்கிறது, அங்கேயெல்லாம் அந்த குடிநீர்ப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு இந்த அரசாங்கம் வழிவகை காண வேண்டுமென்பதையும் தெரிவித்துக் கொள்வதோடு, லாந்தகால், வடகரை செங்குளம் கால்வாயிலும் தூர்வாரக் கூடிய முயற்சியை உடனடி யாக மேற்கொள்ள வேண்டும். செங்கோட்டை பகுதியில் 2000 ஏக்கர் பரப்பளவில் உள்ள குண்டாறு அணை தூர்வாரப்படவேண்டும் அதனுடைய உயரத்தை உயர்த்த வேண்டுமென்பதையும் இங்கே வலியுறுத்தக் கடமைப்பட்டிருக்கின்றேன். மோட்டை அணை சீர் செய்யப்பட்டு அங்கேயும் கால்வாய்கள் தூர்வாரப்படவேண்டும்.
கடையநல்லூர் வட்டம், சொக்கம்பட்டி கிராமத்தில், புண்ணையாபுரம் கால்வாய்பாலம் அமைக்க அரசு ஆவனசெய்ய வேண்டும். ஊர்மேலழகியான், வேலாயுதபுரம், சாம்பவர் வடகரை மற்றும் கண்டுகொண்டான்மாணிக்கம் ஊர்களிலே 950 ஏக்கம் பெரிய குளம் தூர்வாரப்பட்டால் அந்தப் பகுதியினுடைய மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் மேலும், அந்த பகுதியிலே இருக்கக்கூடிய கோவிலுக்குச் செல்வதற்கு விசாலப்படுத்தப்பட்ட சாலையை ஏற்படுத்தி பங்குளித் திருவிழாவிற்கு பக்தர்கள் செல்லக்கூடிய வாய்ப்பினையும் இந்த அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும்.
சுற்றுலா தளம்
அடவி நயினார் அணையை ஒட்டிய பகுதி என்பது இயற்கை எழில் ததும்பும் பகுதியாக இருக்கின்றது. அந்தப் பகுதியை சுற்றுலாத்தலமாக மாற்றுவதற்கு இந்த அரசாங்கம் முயற்சி செய்ய வேண்டும். அருகிலே இருக்கக்கூடிய குற்றாலத்திற்கு வரக்கூடிய அனைத்து சுற்றுலாப் பயணிகளும் அடவி நயினார் அணைப்பகுதிக்கு வரக்கூடிய ஒரு நல்ல சூழ்நிலை ஏற்படும். அதற்குண்டான ஆக்கப்பூர்வமான பணிகளிலும் இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய பேருந்து போக்குவரத்து வசதி ஏற்படுத்தி கொடுத்தால் இங்கேயும் சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு வாய்பாக அமையும்.
ஸ்மார்ட் கார்டு
அம்மா அழைப்பு மையங்கள் அறிவிக்கப்பட்டதை வரவேற்கின்றோம். அதுபோன்று, இ-சேவை மையங்களையும், ஸ்மார்ட் கார்டு போன்ற சிஸ்டங்களையும் தமிழகத்திலே அறிமுகப்படுத்த வேண்டுமென்பதையும் இங்கே வலியுறுத்தக் கடமைப்பட்டிருக்கின்றேன். வேளாண் மேம்பாட்டிற்காக தொடர்ந்து இந்த அரசாங்கம் பாடுபடும் என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றதை வரவேற்கின்றேன்.
ஈத்தல் தொழில்
கடையநல்லூர் தொகுதியைப் பொறுத்தவரை விவாசயம் நிறைந்த தொகுதியாகும். கடையநல்லூர் தொகுதிக்குட்பட்ட 10000 ஹெக்டேருக்கு மேலே தென்னை சாகுபடி செய்யப்படுகின்றது. தேங்காய்க்கு அதிக விலை கிடைக்க கொப்பரை உற்பத்தி நிலையங்களை தென்னை கூட்டுறவுச் சங்கங்கள் மூலமாக ஏற்படுத்தி, அரசு தரப்பில் கொப்பரை உலர்கலன்கள் ஏற்படுத்தி தென்னை விவசாயிகளுக்கு பயனளிக்ககூடிய வகையிலே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் இங்கே வலியுறுத்த கடமைப்பட்டிருக்கின்றேன். செங்கோட்டை ஒன்றியத்திலே ஈத்தல் தொழில் இருந்தது. இப்பொழுது அந்தத் ஈத்தல் தொழில் முழுமையாக தடைசெய்யப்பட்டதன் காரணமாக 3000 பேர் வாழ்வாதராத்தை இழந்திருக்கின்றார்கள். எனவே, மீண்டும் அந்த ஈத்தல் தொழிலை நிறுவ முடியுமா? இல்லையென்று சொன்னால் 3000 பேருடைய வாழ்வாதாரத்திற்கு மாற்றத் தொழிலை ஏற்படுத்த முடியுமா? என்பதையும் தயவுகூர்ந்து அரசாங்கம் பரிசீலிக்க வேண்டுமென்பதையும் இங்கே வலியுறுத்துகிறேன்.
வேளாண் மேம்பாட்டு கவுன்சில்
கடையநல்லூர் தொகுதி விவசாயிகளுடைய பிரச்சினைகளையெல்லாம் போக்குவதற்கு வேளாண் துறையின் மூலமாக நியாயம் கிடைப்பதற்கு தமிழ்நாடு அரசு வேளாண் மேம்பாட்டுக் கவுன்சில்
உருவாக்க வேண்டும் என்பதையும் இங்கே வலியுறுத்துகிறேன்.
தென்னை நார் கயிறு உற்பத்தித் தொழிற்சாலை அங்கு இல்லை, அதையும்கூட ஏற்படுத்தி தொழிற்சாலையே இல்லாத ஒரு தொகுதியாக கடையநல்லூர் தொகுதியிருக்கின்றது எனவே இதையும் பரிசீலனை செய்ய வேண்டும்.
கால்நடை மருத்துவமனை
அதேபோல, ஆளுநருடைய உரையிலே கால்நடை பராமரிப்புத்துறைக்காக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டிருப்பதை நான் வரவேற்கின்றேன். கடையநல்லூர் தொகுதியிலே கண்ணுபுள்ளி கிராமத்திலே அதிக கால்நடைகள் உள்ளன. மழைக்காலங்களிலே அவற்றிற்கெல்லாம் நோய் பரவி மிகப்பெரிய சிரமங்களுக்கு ஆளாகின்றன. எனவே, கண்ணுபுள்ளி பகுதிலே கால்நடை மருத்துவமனை ஏற்படுத்த வேண்டும் என்பதையும் இங்கே வலியுறுத்துகின்றேன். கறவை மாடுகள் வாங்குவதற்குண்டான கடனை காலம் தாழ்த்தாமல் வழங்கவேண்டும் என்பதையும் இங்கே வலியுறுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன்.
கச்சத்தீவு
கச்சத்தீவு மீட்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது ஒரு நல்ல செய்தி, இலங்கை அரசோடு நிரந்தரத் தீர்வு காண்பதற்கு கச்சத்தீவு பிரச்சினையை பொறுத்தவரைக்கும், 1974 -1976 வருடங்களிலேயே பாராளுமன்றத்திலேயே எங்களுடைய இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கினுடைய உறுப்பினர் திரு.எஸ்.எம்.ஷெரீப் அவர்கள் ஆணித்தரமாக அங்கே வாதிட்டிருக்கிறார்கள். அந்த வகையில் எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள்கூட நமக்கு மத்தியிலே எந்தக் கருத்து வேறுபாடும் இல்லையென்று சொல்லியிருக்கிறார்கள். அந்த அடிப்படையில் கச்சத்தீவை மீட்பதற்குரிய அனைத்து முயற்சிகளுக்கும் தமிழக அரசோடு இணைந்து எங்களுடைய முழுமையான ஒத்துழைப்பை தருவோம் என்பதையும் இங்கே அறிவிக்கின்றோம்.
சாலைகள் பராமரிப்பு
அதேபோல சாலைகளுடைய மேம்பாட்டிற்காக வேண்டி பல்வேறு விசயங்கள் இங்கே அறிவிக்கப்பட்டிருக்கின்றன, கடையநல்லூர் நகரிலே பல்வேறு சாலைகள் பழுதடைந்திருக்கின்றன. செங்கோட்டை- மேலூர் பம்பு ஹவுஸ் பகுதியில் கற்குடி தவணைச்சாலையும் அமைக்க வேண்டும். செங்கோட்டை – புனலூர் அகல இரயில் பாதைக்கு தமிழக அரசு மத்திய அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும்.
பாதாள சாக்கடை திட்டம்
தூய்மைக் காவலர் திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன அந்தடிப்படையிலே 25ஆயிரம் குடியிருப்புகளைக் கொண்ட கடையநல்லூரிலேயே கழிவுநீர் முழுமையாக செல்வதற்கு வசதியில்லை. பாதாள சாக்கடைத்திட்டத்தை விரைவாக நிறைவேற்றுவதற்கு இந்த அரசாங்கம் முயற்சிக்க வேண்டும்.
அதே போல கொசுத் தொல்லை, டெங்கு காய்ச்சல் போன்றவை வருடா வருடம் செப்டம்பர் மாதத்திலேயே கடையநல்லூரில் ஏற்படுகின்றது. எனவே இப்போதிலிருந்து கவனம் செலுத்தி நம்முடைய மருத்துவ குழுவினர் அங்கு சென்று வருடா வருடம் காய்ச்சல், மர்மக் காய்ச்சல் ஏற்பட்டு உயிர்ப் பலிகளெல்லாம் ஏற்படுவதை இப்போதே ஆய்வு செய்து தடுக்க வேண்டும் என்பதையும் நான் இங்கே வலியுறுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன்.
மருத்துவ வசதிகள்
ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த அளவில் கடையநல்லூர் இக்பால் நகரிலும், பொய்கை பகுதியிலும் ஆரம்ப சுகாதார நிலையங்களை ஏற்படுத்த வேண்டும். கடையநல்லூரிலே இருக்கக்கூடிய மருத்துவமனையில் அடிப்படை வசதிகளே இல்லாமல் இருக்கின்றது. சிகிச்சைக்கு கூட தென்காசிக்கோ, திருநெல்வேலிக்கோ செல்லக்கூடிய சூழ்நிலை இருக்கின்றது. எனவே கடையநல்லூரிலே இருக்கக்கூடிய அந்த மருத்துவமனையிலே அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவரையும், எலும்புமுறிவு சிகிச்சை நிபுணர் ஒருவரையும், அதே போல கூடுதலாக நர்சுகளையும் அங்கே நியமிக்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால் அந்த மருத்துவமனையிலேயே ஒரு காவலர் கூட இல்லை. இரவு நேரங்களிலே யாராவது வந்து தாக்கிவிட்டுச் சென்றால் அவர்களை பார்ப்பதற்குகூட காவலர்கள் இல்லாத சூழ்நிலை இருக்கிறது. அங்கே காவலர்களை நியமிக்க வேண்டும் என்பதையும் சொல்லிக் கொள்கின்றேன்.
சிறுபான்மையினர் பாதுகாப்பு
தமிழ்நாடு அரசு, சிறுபான்மை மக்களுடைய பாதுகாப்பிற்காக வேண்டி, வளர்ச்சிக்காக வேண்டி பாடுபடும் என்று அறிவித்திருக்கின்றீர்கள் எனவே, சிறுபான்மை சமுதாயத்தினுடைய, இயக்கத்தினுடைய பிரதிநிதியாக நான் ஒருவன்தான் இருக்கின்றேன். இதிலே மாண்புமிகு முதல்வர் அவர்கள் இட ஒதுக்கீட்டை 3.5 சதவீதம், தி.மு.க ஆட்சியிலே அமல்படுத்தப்பட்டது. இடஓதுக்கீட்டை உயர்த்தித் தருவோம் என்று சொன்னார்கள் தேர்தல் நேரத்திலும், இப்போதும் அறிவித்திருக்கிறார்கள். கண்டிப்பாக முஸ்லீம்களுடைய இடஒதுக்கீடு 3.5 சதவீதத்திலிருந்து உயர்த்தித் தரப்பட வேண்டும்.
வக்ஃப் தீர்ப்பாயம்
அதே போல, வக்ஃப் சொத்துக்களை யெல்லாம் பராமரிப்பதற்காக வேண்டி வக்ஃப் தீர்ப்பாயத்தை அமைக்க வேண்டும் என்பது உச்சநீதிமன்றத்தினுடைய ஆணையாகும் , அதை ஏற்று தமிழகத்திலே தீர்ப்பாயத்தைஅமைக்கவேண்டும்.இப்போது நோன்புகாலம், எல்லோரும் நோன்பு முடித்துக் கொண்டு பள்ளிவாசலிலேயே வணக்க வழிபாடுகளில் ஈடுபடும் நேரம். இப்போது ஒலி மாசுக் கட்டுப்பாடு என்று சொல்லிக் கொண்டு காவல் துறையினர் முப்பது பள்ளிவாசல்களுக்கு (ஒலி பெருக்கி)குழாய்களை அகற்ற வேண்டும் என்று அறிவித்திருக்கின்றார்கள். அதன்பிறகு மாண்புமிகு முதல்வர் அவர்களுடைய கவனத்திற்கும், வக்ஃபு வாரிய அமைச்சர் அவர்களிடமும் சொன்னதற்குப் பிறகு தற்போது அங்கு கெடுபிடிகள் நிறுத்தப்பட்டிருக்கிறது. இருந்தாலும் தொடர்ந்து அந்தக் காவலருடைய கெடிபிடியிலிருந்து நிம்மதியாக நோன்பு காலங்களில் நாங்கள் வழிபாடுகளை செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முஸ்லிம் சிறைவாசிகள்
நீண்ட காலமாக சிறைச்சாலைகளிலே – 15 வருடங்களுக்கு மேலாக 49 முஸ்லிம் சிறைவாசிகள் இருக்கிறார்கள். பல்வேறு சூழ்நிலைகளிலே பலரும் சிறைச்சாலைகளிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். அறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாவிலே 1400 பேர் விடுதலை செய்யப்பட்டார்கள். இவர்களில் பலர் நோய்வாய்ப் பட்டவர்கள் இந்திய தண்டனை சட்டத்திலே 14 வருடத்திற்கு மேல் இருந்தால் அவர்களையெல்லாம் விடுதலை செய்யலாம் என்று இருக்கின்றது. நோய்வாய் பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருப்பவர்கள் இரண்டு பேர் இருக்கிறார்கள். பல்வேறு சமயத்தை சார்ந்தவர்கள் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.ஆனால் 49 பேர் மட்டும் 15 வருடங்களாக சிறைச்சாலைகளிலேயே இருக்கிறார்கள். இவர்களை கருணை அடிப்படையில் விடுதலை செய்யலாம்.
கடையநல்லூரில் மனோன்மணியம் சுந்தரனார் உருப்பு கல்லூரி வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது . அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளிக்கு சொந்தமாக 8 ஏக்கர் இருக்கிறது. அதிலேயே இந்தக் கல்லூரியை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாண்புமிகு முதல்வர் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.
அதே போல தாலுகா அலுவலகத்தை ஊருக்குள் கொண்டுவர வேண்டும். மேலும் மேற்கு தொடர்ச்சி மலையிலே உள்ள விவசாயிகளுக்கும், விளை நிலங்களுக்கும் பாதுகாப்பு அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு சட்டமன்றத்தில் சமுதாயத்தின் பிரதிநிதி கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ., அவர்கள் உரையாற்றினார்……

Add Comment