35 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பரபரப்பில் மீனாட்சிபுரம்

மென்பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமாரின் சொந்த ஊரான மீனாட்சிபுரம் கிராமம், 35 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நாடு முழுவதும் பேசப்படும் கிராமமாக மாறி இருக்கிறது.

 

திருநெல்வேலி மாவட்டத்தின், மேற்கு கரையோரம் அமைந்துள்ள சின்னஞ்சிறிய கிராமம் மீனாட்சிபுரம். செங்கோட்டை ஊராட்சி ஒன்றியம், தேன்பொத்தை ஊராட்சிக்கு உட்பட்ட இந்த கிராமத்தில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றன. மீனாட்சிபுரம் கடந்த 1981-ம் ஆண்டு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இங்கு வசிக்கும் 300 குடும்பங்களில் 210 குடும்பத்தினர், இந்து மதத்தில் இருந்து ஒட்டுமொத்தமாக இஸ்லாம் மார்க்கத்துக்கு மாறியதுதான் அந்த பரபரப்புக்குக் காரணம்.

தீண்டாமை, மேல் வர்க்கத்தினரின் அடக்குமுறை போன்ற காரணங்களால் 1981-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ம் தேதி பல குடும்பங்கள் இஸ்லாம் மதத்துக்கு மாறின. நாடு முழுவதும் இந்த விவகாரம் எதிரொலித்தது. பாஜக தேசிய தலைவராக இருந்த வாஜ்பாய் உள்ளிட்டோர் இந்த கிராமத்துக்கு நேரில் வந்து நிலைமையை ஆராய்ந்தனர். அந்த மீனாட்சிபுரம் தற்போது நாட்டையே உலுக்கிய ஒரு படுகொலை சம்பவத்தின் மூலம் மீண்டும் பரபரப்பு பெற்றிருக்கிறது.

அரசு ஆவணங்களிலும், இந்துக்களிடமும் அந்தக் கிராமத்துக்கு மீனாட்சிபுரம் என்பதுதான் பெயர். ஆனால், உள்ளூர் முஸ்லிம்களுக்கு அது ரஹ்மத் நகர். இங்கு பெயரும் மதமும்தான் வித்தியாசமே தவிர, உள்ளூர் மக்கள் அனைவரும் ஒற்றுமையாகவே வாழ்ந்து வருகின்றனர்.

மரியாதை கிடைத்தது

இதுகுறித்து இந்த கிராமத்தைச் சேர்ந்த மதம் மாறிய சுலைமான் கூறும்போது, “மேல் வர்க்கத்தினரின் அடக்குமுறை காரணமாக ஒட்டுமொத் தமாக மதம் மாறினேம். மதம் மாறிய பிறகு எங்களது மரியாதை உயர்ந்துள்ளது. முன்பு எங்களை மேல்வர்க்கத்தினர் வா, போ என மரியாதை இல்லாமல் நடத்துவார்கள். இப்போது வாங்கள், போங்கள் என மரியாதையாக பேசுகிறார்கள். எங்களது வாழ்க்கைத் தரமும் உயர்ந்துள்ளது. பலர் வெளிநாடுகளுக்கு சென்று நல்ல வருமானம் ஈட்டுகின்றனர்.

அந்த மதமாற்றம் சம்பவத்துக்கு பிறகு, தற்போது ஒரு கொலை மூலம் ராம்குமார் எங்கள் கிராமத்தை நாடு முழுவதும் பேச வைத்துள்ளார். இது எங்களுக்கு வேதனையைத் தருகிறது. ஊருக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தித் தந்துள்ளார்’’ என்றார்.

தலைகுனிவு

மதம் மாறிய நாகூர் மீரான் என்பவர் கூறும்போது, ‘‘மேல் ஜாதியினரின் அடக்குமுறை காரணமாகவே நாங்கள் மொத்தமாக மதம் மாறினோம். எனினும், மதம் மாறாத மற்ற உறவினர்களுடன் தொடர்ந்து அதே உறவு முறையோடு தான் பழகி வருகிறோம். எங்களுக்குள் எந்த வேற்றுமையும் இல்லை.

35 ஆண்டுகளுக்குப் பிறகு எங்கள் கிராமம் மீண்டும் வெளி உலகுக்கு தெரியவந்துள்ளது. ஆனால், இந்த முறை வெட்கித் தலைகுனியும் நிலையில் இருக்கிறோம்’’ என்றார்.

The Hindu

Add Comment