கடையநல்லூர் மஸ்ஜித் முபாரக் கமிட்டி சார்பில் நோன்பு பெருநாள் தொழுகை

கடையநல்லூர் மஸ்ஜித் முபாரக் கமிட்டி சார்பில் நோன்பு பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது.

ரமலான் முழுமையடைந்ததைத் தொடர்ந்து மஸ்ஜித் முபாரக் நிர்வாகக் கமிட்டி சார்பாக கடையநல்லூரில் மூன்று இடங்களில் திடலில் தொழுவதற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதில் காலை 6 மணி முதலே கடையநல்லூரைச் சார்ந்த இஸ்லாமிய பெருமக்கள் ஆண்களும், பெண்களும், சிறுவர்களும் குளித்துவிட்டு புத்தாடைகள் அணிந்து ஆயிரக்கணக்கில் தொழுகைத் திடலை நோக்கி வரத் துவங்கினர்.

கடையநல்லூர் காயிதே மில்லத் ஈத்கா திடலில் சரியாக 6.30 மணி அளவில் கடையநல்லூர் ஜமாஅத்து மஸ்ஜிதில் முபாரக் தலைவர் தலைமை இமாம் எஸ்.எஸ்.யூ. சைபுல்லாஹ் ஹாஜா அவர்கள் நோன்பு பெருநாள் தொழுகை நடத்தினார். அதைத் தொடர்ந்து மக்களுக்கு ஆற்றிய உரையில் …

உலக பொதுமறை அல்குர்ஆன் இறக்கப்பட்ட புனித ரமலான் மாதம் முழுக்க முஸ்லிம்கள் நோன்பு நோற்று நிறைவேற்றி பெருநாள் கொண்டாடுகின்றனர்.
குர்ஆனியக் கட்டளைகளை ஏற்று நடப்பதினால்தான் முழு மனித குலத்திற்கும் வெற்றி இருக்கிறது.
மது,சூது, கொலை,கொள்ளை,கற்பழிப்பு,இலஞ்சம், ஊழல், பித்தலாட்டம் இல்லாத சமூகத்தை உருவாக்க வேண்டுமெனில் குர்ஆனுடைய போதனைகளை நடைமுறைப் படுத்தினால் மட்டுமே சாத்தியம். அப்படித்தான் அன்றைய அரபுலக சமூகத்தை முஹம்மது (ஸல்) அவர்கள் உருவாக்கினார்கள் என்று தனது உரையில் குறிப்பிட்டார்.

நோன்புப் பெருநாளில் கூட இஸ்லாமியர்கள் ஏழைகளின் பசிப் பிணியைப் போக்குவதற்காக ஈகையுடன் பெருநாள் தர்மத்தை நிறைவேற்றுகின்றனர்.இந்த அடிப்படையில் மஸ்ஜித் முபாரக் கமிட்டி சார்பாக 5000 க்கும் மேற்பட்ட ஏழைக் குடும்பங்களுக்கு பெருநாள் தர்மம் வழங்கப்பட்டது.
இத்தகைய ஈகைப் பண்பை ஏற்படுத்துவதுதான் இஸ்லாம் என்று அவர் தன்னுடைய பெருநாள் பேருரையில் எடுத்துரைத்தார்.

கடையநல்லூர் கலந்தர்மஸ்தான் தெரு தென்புறம் அமைந்துள்ள பாத்திமா நகர் தக்வா பள்ளிவாசல் மைதானத்தில் சரியாக 6.30 மணிக்கு முஹிப்புல்லாஹ் உமரி அவர்களும், மேலும் கடையநல்லூர் பேட்டை பகுதியில் அக்ஸா அறக்கட்டளையின் சார்பில் அக்ஸா திடலில் எஸ்.ஏ.பஷீர் அஹ்மத் உமரி அவர்களும் பெருநாள் தொழுகையையும் அதைத் தொடர்ந்து மக்களுக்கு குத்பா பேருரையும் நிகழ்த்தினார்கள்.
அனைவரும் தங்களது உரைகளில் இஸ்லாம் கூறும் மனித நேயத்தைப் பற்றி எடுத்துரைத்தனர். கடையநல்லூர் முழுவதிலும் இருந்து இஸ்லாமியப் பெருமக்கள் ஆர்வமுடன் பெரும் திரளாகக் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மஸ்ஜித் முபாரக் கமிட்டி தலைவர் க.அ. சேகுதுமான், செயலாளர் முஹம்மது காசிம், பொருளாளர் அப்துல் மஜீத் மற்றும் ஜபருல்லாஹ் பத்ரி, முஹம்மது கோரி, பைசல், அபூ ஆயிஷா உட்பட 6000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மஸ்ஜித் முபாரக் கமிட்டி,அக்ஸா அறக்கட்டளை மற்றும் ஆயிஷா பள்ளி நிர்வாகிகள் சிறப்பாகச் செய்திருந்தனர்.

கடையநல்லூர் நகரக் காவல்துறை ஆய்வாளர், உதவி ஆய்வாளர் தலைமையில் பெருநாள் தொழுகை நிகழ்ச்சிக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இப்படிக்கு
எம்.ஏ. முஹம்மது காசிம்
செயலாளர்.

capture1

capture2

capture3

capture5

capture7

Comments

comments

Add Comment