‘ஒசந்தசாதி’ என்பதற்கு பொருள் இருக்கிறதா இல்லையா?

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் பொது இடத்தில் குடும்பத்தினரை தாக்கிய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுலிடம் முறையிட்டார்.

அப்போது பேசிய நீதிபதி எஸ்.கே.கவுல், பத்திரிகையில் வரும் செய்தி மற்றும் வீடியோக்களை எடுத்து வந்து முறையீடு என்ற பெயரில் நீதிமன்ற நேரத்தை வீண்டிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தினார். தேவையெனில் அந்த புகாரை மனுவாக தாக்கல் செய்யலாம் என்றும், பாதிக்கப்பட்டவர்கள் வழக்கு தொடர்ந்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

இதுபோன்ற விவகாரங்களில் நடவடிக்கை எடுக்க மனித உரிமை ஆணையம் உள்ளிட்ட அமைப்புகள் இருப்பதாகவும், இருப்பினும் சிலர் வழக்கு தொடர்ந்து, நீதிமன்றத்தின் நேரத்தை வீண்டிப்பதாகவும் அரசு தலைமை கூடுதல் வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் தெரிவித்தார்.
– செய்தி

ஓகே.. அப்படியே ஒரு பத்து நாள் பின்னோக்கிப் பார்ப்போமா..
சுவாதி கொலையான இரண்டே நாளில் அந்த வழக்கை தாமாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்தது இதே நீதிமன்றம். சுவாதி வெட்டப்பட்டுக் கிடக்கும் காட்சிகளை ஊடகங்களில் பார்க்கும்போது, நெஞ்சம் பதறுவதாக கருத்துச் சென்னது இதே நீதிமன்றம். இதுபோன்ற கொடூரங்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என அரசுக்கு எச்சரித்தது இதே நீதிமன்றம். கொலையாளிகளை விரைந்து பிடிக்க வேண்டும் என காவல்துறைக்கு கெடு விதித்தது இதே நீதிமன்றம்.

சுவாதியின் குடும்பத்தினர் யாரும் மனு அளிக்கவுமில்லை; மனித உரிமை அமைப்புகள் பார்த்துக் கொள்வார்கள் என நீதிமன்றம் அமைதியாக இருக்கவுமில்லை. அதே நீதிமன்றம்தான் இன்று இப்படி நேரம் வீணாவதாக ஆத்திரப்படுகிறது.

இப்போது சொல்லுங்கள்; ஒய்.ஜி.மகேந்திரன் சொன்ன அந்த ‘ஒசந்தசாதி’ என்பதற்கு பொருள் இருக்கிறதா இல்லையா?

Aloor Sha Navas

Add Comment