வேற்றுமண்ணில் பிரம்மச்சாரிகளாய்…

வேற்றுமண்ணில் பிரம்மச்சாரிகளாய்…
———————————————————–
விடுமுறைகளில் அதிகாலை இரண்டு மூன்று மணிக்கு கூட நித்திரையில் மூழ்குவதும் இடையிடையே விழிப்பு வந்தாலும் இன்னும் கொஞ்சம் கிடப்போம் என அசதியில் மறுநாள் பகலில் இரண்டு மூண்டு மணிக்கு கூட கண் விழிப்பதும்…

அலுவலக நாட்களில் அறியாமலே அசதியுடன் உடைகளைக் கூட களையாமல் முன்னிரவில் ஏழு எட்டு மணிக்கு கூட தூங்கிப் போவதும், காலை ஃபஜ்ரில் வழக்கம் போல எழுப்பும் அலாரத்தில் கண்விழிப்பதும் பின்னர் அடிவயிற்றின் கோரமான பசியறிந்து அடடா இரவில் எதையும் சாப்பிட மறந்து விட்டோம் என உணர்ந்து ஒரு பாதி குடுவைத் தண்ணியைக் குடித்து தொழுகைக்கு கிளம்புவதும்…

மதிக்கப்படாத சொந்தப் படுக்கையின் மடிக்கப்படாத கம்பளியை மலை போலக் குவித்து படுக்கையை தன ஸ்டைலில் அப்படியே ரஜினியின் முன்மண்டை முடி போல பராமரிப்பதும்…

வழக்கமாக ஊருக்கு தொடர்பு கொண்டு மனைவி மக்களிடம் பேசும் நேரத்தில், அன்று மட்டும் வேறு வேலை காரணமாக நாம் அவர்களை அழைக்க மறந்தாலும், சற்று நேரம் கடந்தபின் ஒரு நப்பாசையில் அவர்களிடமிருந்து ஏதாவது மிஸ்ட் கால் கிடக்கிறதா? அவர்கள் நம்மை நினைவில் வைத்து அழைத்திருக்கிறார்களா என ஆர்வமுடன் கைபேசியை நோண்டுவதும்…

தன் மகனை அல்லது சின்னஞ்சிறு மகளை ஒத்த அதே சாயலில் உள்ள பாலரை அவன் வசிக்கும் வேற்று மண்ணில் காணும் போது தான் பெற்ற மக்களை நினைவு கொண்டு உடனே வீட்டிற்கு தொடர்பு கொண்டு, என்ன இந்நேரம் போல? எனக் கேட்கும் கேள்வியையும் புறந் தள்ளி சிறிது நேரம் மின்காந்த அலையில் உற்றாருடன் உறவுறுவதும்…

தனக்கு உடல் நலமில்லை என சொல்லாமலேயே சமாளித்துக் கழித்துவிட்டு, ஊரில் யாருக்காவது உடல் நலிவு ஏற்பட்டால் அதையே எண்ணியவாறு பணி நேரத்திலும் பள்ளிவாசலில் தங்கியுள்ள நேரத்திலும் பயந்தபடி நேரம் எடுத்து இறைஞ்சுவதும்….
ஊருக்குக் கிளம்ப இரண்டு மூன்று மாதங்கள் கிடக்கும் போதே சன்னஞ்சன்னமாக சாமான்களை வாங்குவதும், அப்பவே ஊருக்கு கிளம்புவதாக ஒரு மனநிலை ஓட்டத்தில் தன்னை உட்படுத்தி மகிழ்ந்து களிப்பதும்…
எப்ப கேட்டாலும் யாரைக் கேட்டாலும் இன்னும் ஒன்னு அல்லது ரண்டு சஃபரில் முடிச்சிட்டு வீட்டில் தங்கிரலாம்ன்னு இருக்கேன். போதும் ப்பா ன்னு சலித்துக் கொள்வதும்…

கிச்சனில் காதுகளில் மாட்டப்பட்ட இயர் போன் வழியாகக் கேட்டபடி கருவாட்டுக் குழம்பு வைக்க அகப்பையும் கையுமாக அலைவதும், மறக்காமல் அதனை சொல்லி நல்லா வந்திருச்சு அடுத்த முறை கருவாடு கரையாமல் பாத்துக்கணும் ன்னு ஃபீட்பேக் கொடுத்துக் கொள்வதும்.
தொழுகை நேரத்தில் கூட மொபைலில் நோண்டிக்கொண்டு, பொழுது போக்காக இருப்பதும், அதே டென்சனில் மறக்காமல் ஜாகிர் நாயக்குக்காக கடுமையாக பொங்குவதும்…

தனஅறைக்கதவுகளில் ரத்ததான முகாம் வாழவுரிமை மாநாடு, உணர்வு, விடியல் படியுங்கள்… உங்களுக்கு தொழவைக்கு முன் நீங்கள்தொழுது கொள்ளுங்கள் என பயங்காட்டி ஸ்டிக்கர் ஒட்டி “இதுநம்மாளு ரூம்” தான்ன்னு மற்றவர்களுக்கு அடையாளமிட்டுக் காட்ட உறுத்திப்படுதுறதும்….

குர்ஆன், ஹதீஸ் சம்பந்தமான விவாதங்களில் சில நேரம் ஏதாவது பிரச்னை ஏற்பட்ட இயக்கப்போர்க் களத்தில் தன் சைடு ஆட்களின் கருத்தை மட்டுமே உள்வாங்கி, அரை மணிநேரத்தில் அலசி ஆராய்ந்து, சும்மா சகட்டுமேனிக்கு நாக்க புடுங்கற மாதிரி கேட்டு, இஸ்லாத்தைக் காப்பாற்றி விட்டோம் என மனசில் ஆறுதல் கொள்வதும்…

முக்கியமாக, தான் ஒரு ஆள்மட்டும் தங்கும் அறையின் கதவை, உள்-தாழ்ப்பாள் போடாமலே உஷாராக உறங்குவதும், எப்பவாவது யாராவது கேட்டால், ஏதாவது நடக்கக் கூடாதது நடந்து விட்டால், கதவை உடைக்காமல், இலேசாக நம்மை அப்புறப்படுத்த அது வாகாக அமையட்டும் என பதிலளிப்பதும்…
இன்னும் நிறைய….வே இருக்குங்க பாலை மண்ணின் பேச்சலர் வாழ்வில்…

கலு. அப்துல்லாஹ் ரஹ்மத்துல்லாஹ்

Add Comment