சுவாதி ரம்ஜானுக்கு நோன்பு இருந்தவர்.. முஸ்லிமாக மாற முடிவு செய்திருந்தார்.. திருமாவளவன்

கொலை செய்யப்பட்ட இன்போசிஸ் ஊழியர் சுவாதி, ரம்ஜானுக்கு நோன்பு இருந்தவர் என்றும், விரைவில் அவர் முஸ்லிமாக மாற திட்டமிட்டிருந்ததாகவும், இந்த கோணத்தில் விசாரணை நடைபெற வேண்டும் எனவும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கோரிக்கைவிடுத்து பரபரப்பை கிளப்பியுள்ளார்.

சுவாதி கொலை வழக்கில் தினம் ஒரு திருப்பம் ஏற்பட்டுக் கொண்டுள்ளது. ராம்குமார் மட்டுமே குற்றவாளி என்று போலீசார் கூறியிருந்த நிலையில், திடீரென, சுவாதிக்கு நெருக்கமான நண்பர், முகமது பிலால் சித்திக் என்பவரிடம் போலீசார் 10 மணி நேரத்துக்கும் அதிகமாக விசாரணை நடத்தினர்.

பிலால் செல்போன் நம்பருக்கு சுவாதி அதிக மெசேஜ்கள் அனுப்பியிருந்ததாகவும், அதில் தன்னை ஒரு நபர் பின் தொடர்வதாக சுவாதி கூறியிருந்ததாகவும், அதுபற்றி முகமது பிலால் சித்திக்கிடம் போலீசார் விசாரணை நடத்தியதாகவும் கூறப்பட்டது. மேலும், ராம்குமாரை, பிலால் அடையாளம் காட்டியதாகவும் கூறப்பட்டது.

திருமாவளவன் பேட்டி

இந்நிலையில், செய்தி சேனல் ஒன்றுக்கு சிறப்பு பேட்டியளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் புது தகவல் ஒன்றை கூறியுள்ளார்.

யார் இந்த பிலால் மாலிக்

திருமாவளவன் கூறியதாவது: சுவாதி கொலை வழக்கில் காவல்துறையினர் புலனாய்வைத் தொடங்கும் முன்பே பிலால் மாலிக் மற்றும் ராம்குமார் பெயர்கள் வெளிவரத் தொடங்கிவிட்டது. ஆனால், காவல்துறைக்கே பிலால் மாலிக் யார் என்பது தெரியவில்லை கொலை வழக்கில் பிலால் பெயர்.

ஒய்.ஜி. மகேந்திரன் பேஸ்புக்கில் ஒரு முஸ்லிம் என்றும், பிலால் மாலிக் என்றும் பெயர்களை வெளியிட்டார். இந்த பிலால் மாலிக் என்பவர் யார், அவரைப் பற்றிய தகவல்கள் ஏன் வெளியாகவில்லை. அதோடு, சமீபமாக, சித்திக் பிலால் அல்லது மாலிக் என்பவர் சுவாதி கொலை வழக்கில் அடிபடும் பெயராக மாறியுள்ளது.

முஸ்லிமாக மாற சுவாதி திட்டம்?

ரம்ஜான் பண்டிகையின் போது சுவாதி நோன்பு இருந்ததாகவும், அவர் விரைவில் இஸ்லாமுக்கு மாறிவிடுவார் என்ற தகவல் ஆர்எஸ்எஸ் அமைப்புக்குத் தெரிந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

சட்டை கண்டெடுக்கப்பட்டதா?

விசாரணையின் போது, ரத்தக் கரை படிந்த சட்டை ராம்குமார் தங்கியிருந்த அறையில் இருந்து கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் அது தற்போது மறுக்கப்படுகிறது. இதில் எது உண்மை?

ஏன் சர்ச் செய்தார்?

ராம்குமாரும் சுவாதியும் பேஸ்புக்கில் நட்பாகி, ராம்குமார் நெல்லையில் இருந்து சென்னை வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், ராம்குமாரின் பேஸ்புக்கில் 2014ம் ஆண்டுக்குப் பிறகு எதுவுமே பதிவாகவில்லை. சுவாதி பற்றிய பதிவு எதுவும் இல்லை. சுவாதி கொல்லப்பட்டவுடன் சுவாதி என்று ராம்குமார் தனது பேஸ்புக்கில் சர்ச் செய்திருக்கிறார் என்று தெரியவந்துள்ளது. நன்கு அறிந்த ஒருவரைப் பற்றி அவர் ஏன் சர்ச் செய்ய வேண்டும்?

பேஸ்புக் தகவல்

சுவாதிக்கும் ராம்குமாருக்கும் காதல் இருந்ததாக பேஸ்புக்கில் எந்த தகவலும் இல்லை. சுவாதிக்கும் பிலாலுக்கும் நட்பு இருந்தது என்றும், சுவாதி கொலைக்குப் பின்னால் பிலால் மாலிக் என்பவர் இருப்பதாகவும் தகவல்கள் வெளியானதன் பின்னணி என்ன? உடனடியாக பிலால் மாலிக்கை காவல்துறை கைது செய்து விசாரணை நடத்தாதது ஏன்?

மேன்சனிலும் குளறுபடி

காவல்துறை எங்கள் மேன்ஷனில் வந்து விசாரிக்கவில்லை. அப்பகுதியில் இருக்கும் அனைத்து மேன்ஷன் மேலார்களையும் காவல்நிலையத்துக்கு வரவழைத்துத்தான் விசாரித்தார்கள் என்றுதான், ராம்குமார் தங்கியிருந்ததாக கூறப்படும் மேன்சன் மேனேஜர் அல்லது உதவியாளர்கள் கூறுகிறார்கள்.

சிபிஐ விசாரணை

இத்தனை விஷயங்களையும் எவ்வாறு புறந்தள்ள முடியும்? இதில் உண்மையை வெளிக்கொண்டுவர வேண்டும் என்பதால்தான், சுவாதி கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

புது குண்டு

திருமாவளவன் வெளியிட்டுள்ள இந்த பரபரப்பு விவகாரங்கள் தீப்பிடித்து எரியுமா, அல்லது புஸ்வானமாகுமா என்பதை அடுத்தகட்ட போலீஸ் விசாரணைகள் உலகுக்கு காண்பிக்கும்.

Source: tamil.oneindia.com

Add Comment