கடையநல்லூரைச் சேர்ந்த மசூத் காவல் நிலையச் சாவு : ஒரு அருமையான தீர்ப்பு

காவல் நிலையச் சாவு : ஒரு அருமையான தீர்ப்பு
*************************************************************************
கடையநல்லூரைச் சேர்ந்த மசூத் எனும் முஸ்லிம் இளைஞர் ஒருவர் விசாரணக்கு என அழைத்துச் செல்லப்பட்டு சட்ட விரோதக் காவலில் வைத்து சித்திரவதை செய்து கொல்லப்பட்டார். இது நடந்தது 2005 ல். காவல்துறை கண்காணிப்பாளர் முதல் அடிப்படிக் காவலர் வரை 12 காவல்துறையினர் இந்தக் கொலைக்குக் காரணமாயிருந்தனர்.

மசூதின் மனைவி ஹஸனம்மாளும் இரு குழந்தைகளும் நீதி கோரி நின்றனர். அக்கறையுள்ள நண்பர்கள் சிலர் இவ்வழக்கைக் கையிலெடுத்தனர் (2007). உயர்நீதி மன்றத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்காக மதுரை வழக்குரைஞர் டி.லஜபதிராய் வாதிட்டார்.
·
தொடர்ந்த முயற்சிகளின் ஊடாக திருநெல்வேலி விசாரணை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட காவல்துறையினர் மீது இ.த.ச 302 பிரிவின் கீழ் சி.பி.சி.ஐ.டி போலீஸ் வழக்குப் பதிவு செய்தது.

மூத்த வழக்குரைஞர் ரத்தினம் அவர்கள் வாதிட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 8.52 இலட்ச ரூ இழப்பீடைப் பெற்றுத் தந்தார்.

வாதிட்ட வழக்குரைஞர்கள் யாரும் ஒரு பைசா கூட ‘ஃபீஸ்’ எடுத்துக் கொள்ளாமல் முழுத் தொகையையும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வழங்கினர்.

நமது வழக்குரைஞர்கள் ஓயவில்லை. மீண்டும் உயர்நீதிமன்றத்தை அணுகி, இது உயர் போலீஸ் அதிகாரிகள் எல்லாம் தொடர்புடைய வழக்கு ஆகையால் அவர்கள் தலையிட்டு வழக்கை ஊத்தி மூட முயற்சிப்பார்கள் என்பதால், ஸ்பெஷல் பப்ளிக் பிராசிகியூட்டர் ஒருவரை நியமித்து இவ்வழக்கு விசாரிக்கப்பட வேண்டும் என வேண்டினர். நேர்மையும் திறமையும் ம்மிக்க வழக்குரைஞர் பட்டியல் ஒன்றையும் தந்தனர். உயர் நீதி மன்றம் அதை ஏற்று வழக்குரைஞர் ஆறுமுகம் அவர்களை சிறப்பு அரசு வழக்குரைஞராக நியமித்தது. ஒவ்வொரு விசாரணைக்கும் (hearing) அவருக்கு ரூ 2500 ஊதியம் வழங்க வேண்டும் எனவும் ஆணையிட்டது.

குற்றம் சுமத்தப்பட்ட 12 காவல் அதிகாரிகளும் பீதியடைந்தனர். சித்திரவதைக் கொலையின்போது துணைக் கண்காணிப்பாளராக இருந்தவரும் தற்போது கோவை நகர துணை ஆணையராகவும் உள்ள ஈஸ்வரன் என்பவர் தம் மீதான இ.த.ச. 302 குற்றச் சாட்டை இல்லாமல் (quash) செய்ய ஆணையிடுமாறு மதுரை உயர் நீதிமன்றக் கிளையை அணுகினார்,

இதற்கு எதிராக பாதிக்கப்பட்ட ஹஸனம்மாள் சார்பாக மதுரை வழக்குரைஞர் எஸ்.எம்.ஏ.ஜின்னா வாதிட்டார்.

ஜின்னாவின் வாதங்களை ஏற்ற உயர்நீதிமன்றக் கிளை ஈஸ்வரனின் மனுவைத் தள்ளுபடி செய்ததோடு இவ்வழக்கை 9 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் எனவும் சென்ற வாரம் ஆணையிட்டுள்ளது.

இதுபோன்ற பிரச்சினைகளில் அப்போதைக்கு ஓர் ஆர்பாட்டத்தை நடத்திவிட்டு ஓய்ந்துவிடாமல் தொடர்ந்து விழிப்புணர்வுடன் போராடினால் நீதி கிடைக்க அதிக வாய்ப்புள்ளது என்பதற்கு இந்த வழக்கு எஸ்.பி.பட்டணம் வழக்கு போலவே ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

தொடர்ந்து நீதி கேட்டு வழக்கை நடத்திய NCHRO வழக்குரைஞர்களுக்கும் நீதிமன்றத்தில் வாதிட்ட மூத்த வழக்குரைஞர் ரத்தினம், மற்றும் லஜபதிராய் ஜின்னா ஆகியோருக்கும் வாழ்த்துக்களைச் சொல்வோம்…
·
·Marx Anthonisamy

Add Comment