உன்னாலே நான் கெட்டேன்… என்னாலே நீ கெட்டாய்…

தென் மாவட்டங்களில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் ஒரு வழக்கம் உண்டு. மாணவ, மாணவியர் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டாலோ, கூட்டாக ஏதாவது தவறு செய்தாலோ, அவர்களை ஒருவர் காதை மற்றவர் பிடித்துக் கொண்டு தோப்புக்கரணம் போடச் சொல்வார்கள் ஆசிரியர்கள். “”உன்னாலே நான் கெட்டேன், என்னாலே நீ கெட்டாய்” என்று சொல்லிக் கொண்டே தோப்புக்கரணம் போட வேண்டும்.

÷நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி அடைந்தால், தி.மு.க.வும் காங்கிரஸýம், அல்லது அ.தி.மு.க.வும் ம.தி.மு.க.வும் அந்த நிலைக்குத்தான் தள்ளப்படுவார்கள். தி.மு.க., காங்கிரஸýக்கு இது பொருந்துகிறதோ இல்லையோ அ.தி.மு.க. – ம.தி.மு.க.வுக்கு இது நிச்சயமாகப் பொருந்தும்.

÷தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்கிற ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவின் தீர்மானம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. “”கட்சியின் உயர்நிலை மற்றும் மாவட்டச் செயலாளர்களைக் கூட்டித் தீர்மானம் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தாலும், பெருவாரியான மாவட்டச் செயலாளர்களும், கட்சிப் பிரமுகர்களும், மனதிற்குள் வைகோவை சபித்தபடிதான் வெளியேறினார்கள் என்பதுதான் உண்மை.

÷””பொதுச் செயலாளரின் முடிவை அவருக்கு நெருக்கமான மூன்று நான்கு மூத்த மாவட்டச் செயலாளர்களின் மூலம் கட்சித் Ampicillin online தொண்டர்களின் விருப்பம் என்பது போலத் தெரிவித்திருக்கிறார்கள். இது தொண்டர்களின் மனதைப் பிரதிபலிப்பதாக இல்லை. தேர்தலைப் புறக்கணித்து விட்டு வீட்டில் உட்கார்வதற்காகவோ, தனித்துப் போட்டியிட்டு “டெபாசிட்’ இழப்பதற்காகவோ நாம் ஏன் ஒரு அரசியல் கட்சியை நடத்த வேண்டும்? பொதுச் செயலாளர் வேண்டுமானால் கலிங்கப்பட்டியில் விவசாயம் செய்து கொண்டு காலத்தைக் கழிக்கலாம். நாங்கள் என்னதான் செய்வது?” – பெருவாரியான ம.தி.மு.க. தொண்டர்களின் மனக்குமுறல் இதுவாகத்தான் இருக்கிறது.

÷சட்டப்பேரவையில் பிரதிநிதித்துவம் இல்லாத எந்தவொரு அரசியல் கட்சியும் தனது தனித்துவத்தை இழந்து மெல்ல மெல்ல மக்கள் நினைவிலிருந்து அகன்றுவிடும் என்பதுதான் சரித்திரம். 1971 சட்டப்பேரவைத் தேர்தலில் இந்திரா காங்கிரஸ் ஒரு தொகுதியில்கூடப் போட்டியிடாமல் அத்தனை சட்டப்பேரவைத் தொகுதிகளையும் தி.மு.க.வுக்கு விட்டுக் கொடுத்ததன் விளைவுதான் இன்றுவரை காங்கிரஸ் தமிழகத்தில் தலைதூக்க முடியாமல் போனதற்குக் காரணம் என்பதை மூத்த காங்கிரஸ் தலைவர்களிடம் கேட்டால் சொல்வார்கள்.

÷1996-ல் வைகோவின் ம.தி.மு.க. தனது முதல் தேர்தலை சந்தித்தபோது, மார்க்சிஸ்ட் கட்சியுடன் தேர்தல் உடன்பாடு செய்து கொண்டு போட்டியிட்டு ஒரு தொகுதியில்கூட வெற்றி பெற முடியாமல் போனது. போட்டியிட்ட தொகுதிகளில் மூன்று தொகுதிகளில் மட்டுமே டெபாசிட் தொகையைப் பெற முடிந்தது. நல்ல வேளையாக, 1998-ல் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து மக்களவைத் தேர்தலைச் சந்தித்ததால் அந்தக் கட்சிக்கு சின்னமும் அங்கீகாரமும் கிடைக்க நேர்ந்தது.

÷2001 சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. தலைமை 21 இடங்களை ஒதுக்கித்தர முன்வந்தும், ஓரிரு தொகுதிகளுக்காக தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியேறி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட முடிவு செய்தார் வைகோ. அந்த மாபெரும் தவறால்தான் கட்சித் தொண்டர்கள் பலர் ம.தி.மு.க.விலிருந்து விலகி மீண்டும் தி.மு.க.விற்குத் திரும்ப நேர்ந்தது. வைகோவுடன் தி.மு.க.விலிருந்து 1993-ல் வெளியேறிய 9 மாவட்டச் செயலாளர்களில் 8 பேர் தாய்க் கழகத்துக்கே திரும்பிவிட்டனர் என்பதுதான் கசப்பான உண்மை.

÷””தனித்துப் போட்டியிட கட்சிக்காரர்கள் யாரும் தயாராக இல்லை. பணத்தைச் செலவழித்துத் தோல்வியைத் தழுவ யார்தான் தயாராக இருப்பார்கள்? 12 இடங்கள் தருவதாக அ.தி.மு.க. கூறுகிறது என்றால், பொதுச் செயலாளர் வைகோ, ஜெயலலிதாவை நேரில் சந்தித்துப் பேசி 15 தொகுதிகளையும் ஒரு எம்.பி. சீட்டையும் பெற்று வருவதுதானே சாமர்த்தியம்? தேர்தலிலிருந்து ஒதுங்குவது என்று கட்சி முடிவெடுத்தால், நாங்கள் தி.மு.க.வுக்கே திரும்புவதைத் தவிர வேறு வழியில்லை” என்கிறார்கள் ம.தி.மு.க.வில் இருக்கும் பலர்.

÷வைகோவின் இந்த முடிவு உணர்ச்சிபூர்வமானது என்பது ஒருபுறம் இருந்தாலும், திட்டமிட்டு ம.தி.மு.க. வெளியேற்றப்படுகிறது என்று வைகோ கருதுவதிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. நீண்ட நாள் தோழனாக இருக்கும் தன்னிடம் முதலில் பேசித் தொகுதிகளை ஒதுக்காமல், மற்றவர்களிடம் பேசி ஒப்பந்தம் செய்துகொண்டதே வைகோவை எரிச்சலூட்டியது. இத்தனைக்கும் தான் போட்டியிட விரும்பும் 35 தொகுதிகளின் பெயர்களையும், அந்தத் தொகுதிகளில் வேட்பாளர்களாகத் தான் நிறுத்த இருப்பவர்களின் பெயர்களையும் பட்டியலிட்டு ஜெயலலிதாவிடம் நேரில் கொடுத்திருந்தார் வைகோ.

÷35 இல்லாவிட்டாலும், 15 தொகுதிதான் என்றாவது முடிவு செய்து பேச்சுவார்த்தையைத் தொடங்கி இருக்கலாம் அ.தி.மு.க. தலைமை. சிறிய கட்சிகளுக்கான தொகுதி உடன்பாடும், தே.மு.தி.க.வின் தொகுதி உடன்பாடும் முடிந்த பிறகுதான் ம.தி.மு.க.விடம் பேச்சுவார்த்தையே தொடங்கியது அ.தி.மு.க. அதிலும் வெறும் 6 இடங்கள், 7 இடங்கள் என்று பேசத் தொடங்கியது என்ன நியாயம் என்கிற வைகோவின் ஆதங்கத்தில் யார்தான் குற்றம் காண முடியும்?

÷ம.தி.மு.க.வைக் கூட்டணியிலிருந்து விலக்கி நிறுத்துவதில் அ.தி.மு.க. தலைமைக்கு நெருக்கமானவர்கள் ஆரம்பம் முதலே முனைப்புக் காட்டினார்கள் என்று கூறப்படுகிறது. இது ஒருவேளை ஜெயலலிதாவின் ஆசியுடனும் அனுமதியுடனும்கூட நடந்திருக்கக்கூடும் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.

÷வைகோவால் பாதிக்கப்பட்ட ஒரு பன்னாட்டுத் தொழில் நிறுவனத்தின் பங்கு இதில் இருக்கிறது என்கிறார்கள். வைகோவையும் ம.தி.மு.க.வையும் கூட்டணியிலிருந்து வெளியேற்றினால் தி.மு.க.வின் பண பலத்தை எதிர்கொள்வதற்கான சக்தியை அவர்கள் அ.தி.மு.க.வுக்குத் தர முன்வந்ததாகவும், திட்டமிட்டுத்தான் வைகோ வெளியேற்றப்பட்டார் என்றும் ஒரு சாரார் கருத்துத் தெரிவிக்கிறார்கள். “”ஆறு இடங்கள், ஏழு இடங்கள் என்றெல்லாம் கூறினால், உணர்ச்சிவசப்பட்டு வைகோ கூட்டணியிலிருந்து வெளியேறி விடுவார் என்று தெரிந்துதான் அ.தி.மு.க. தலைமை அவரை அவமானப்படுத்த முற்பட்டது. அந்த வலையில் வைகோவும் விழுந்து விட்டார்” என்கிறார் விவரம் தெரிந்த ஒருவர்.

÷வைகோவின் முடிவு அரசியல் தற்கொலைக்கு நிகரானது என்பது உண்மை என்றாலும், இந்த முடிவினால் அ.தி.மு.க.வும் பெரிய அளவில் பாதிக்கப்படும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். “”அ.தி.மு.க.வினர் மத்தியிலேயே வைகோ மீது அனுதாபம் பிறந்திருக்கிறது. தங்கள் கட்சிக்காக கடந்த 5 ஆண்டுகள் உழைத்த தோழமைக் கட்சியை இப்படி உதாசீனப்படுத்துவது தவறு” என்று மூத்த தலைவர்களேகூட அங்கலாய்க்கிறார்கள்.

÷””தமிழகத்திலுள்ள 234 தொகுதிகளையும் உள்ளங்கை நெல்லிக்கனி போலத் தெரிந்து வைத்திருப்பவர் அண்ணன் வைகோ. தேர்தல் பிரசாரத்துக்கு இருக்கும் கால அவகாசம் மிகமிகக் குறைவு. அம்மாவைத் தவிர எங்கள் கட்சியில் பிரசாரம் செய்ய யார் இருக்கிறார்கள்? விஜயகாந்த் அவரது கட்சியினர் போட்டியிடும் தொகுதிகளில்தான் கவனம் செலுத்திப் பிரசாரம் செய்வார். எங்கள் வேட்பாளர்களில் பலர் தொகுதியில் அறிமுகம் இல்லாதவர்களும்கூட. தி.மு.க.வின் பிரசாரத்தை முறியடிக்க நமக்கு இருந்த ஒரே ஆயுதத்தையும் இப்போது இழந்துவிட்டோம்” என்று கூறி வருத்தப்பட்டார் மூத்த அ.தி.மு.க. தலைவர் ஒருவர்.

÷அ.தி.மு.க., தே.மு.தி.க. தொண்டர்களைப் பொறுத்தவரை தேர்தல் களப் பணிகளைச் செய்வார்களே தவிர, முறையாக வாக்குச்சாவடி நிர்வாகம் செய்வதில் தேர்ந்தவர்கள் ம.தி.மு.க.வினரும், இடதுசாரிகளும்தான். இவர்கள் இல்லாமல் போனால், தி.மு.க. அணியினரிடம் அ.தி.மு.க., தே.மு.தி.க.வைச் சேர்ந்த வாக்குச்சாவடி ஏஜன்டுகள் சுலபமாக விலை போய்விடுவார்கள். இல்லையென்றால் மிரட்டப்பட்டு, விரட்டப்பட்டு விடுவார்கள் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

÷””அவர்களிடம் ஆட்சி இருக்கிறது. அதிகாரம் இருக்கிறது. பணம் இருக்கிறது. ம.தி.மு.க.வுக்கு மட்டும்தான் தி.மு.க.வின் வியூகங்களை முறியடிக்கும் உத்திகள் அத்துப்படி. பாம்பின் கால் பாம்பறியும் என்பதுபோல, அ.தி.மு.க., தே.மு.தி.க. தொண்டர்களுக்குப் பாதுகாப்பாக இருக்கவும், ஆளும் கட்சி அராஜகத்தை அதிகாரபூர்வமாக எதிர்கொள்ளவும் ம.தி.மு.க. கூட்டணியில் இருப்பது அவசியம்” – இப்படிக் கூறுபவர் மூத்த இடதுசாரித் தலைவர் ஒருவர்.

÷1999-ல் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துக் கொண்ட போதே, ம.தி.மு.க.விலிருந்து பல தொண்டர்கள் தி.மு.க.வுக்குப் போகத் தொடங்கிவிட்டனர். அ.தி.மு.க.வால் அவமானப்படுத்தப்பட்ட வேதனையும், தேர்தலில் போட்டியில்லை என்கிற வைகோவின் அறிவிப்பும் மிச்சம் மீதி இருக்கும் தொண்டர்களையும் தி.மு.க.வுக்குத் திரும்ப வைத்துவிடும். ம.தி.மு.க. கூடாரம் காலியாவதுதான் மிச்சம் என்று பலர் அடித்துச் சொல்கிறார்கள்.

÷மக்கள் மத்தியிலும் ம.தி.மு.க. மீது அனுதாபம் ஏற்பட்டிருக்கிறது. அ.தி.மு.க. தலைமையின் சந்தர்ப்பவாத அரசியல் பல நடுநிலையான வாக்காளர்களை முகம் சுளிக்க வைத்திருக்கிறது. எல்லோரையும் அரவணைத்துக் கொண்டு போகும் முதல்வர் கருணாநிதியே இதற்கு பரவாயில்லை என்று பொதுமக்கள் கருதி தி.மு.க.வுக்கு வாக்களிக்கவும் வாய்ப்பிருக்கிறது.

÷அ.தி.மு.க. தலைமை திட்டமிட்டு ம.தி.மு.க.வை வெளியேற்றியது என்பதை நம்பாமல் இருக்க முடியவில்லை. ஜெயலலிதாவோ, அவரைச் சூழ்ந்திருப்பவர்களோ, தேர்தலை சந்திப்பதற்காக விலை போயிருந்தால்கூட ஆச்சரியமில்லை. ஆனால், அதுவே அந்தக் கூட்டணிக்கு ஏற்பட்டிருக்கும் மிகப் பெரிய பலவீனமாக மாறி, முறையாக வேட்பாளர் தேர்வும் இல்லாது போனால், தனித்து ஆட்சி அமைக்கும் சக்தியை இழந்துவிடக் கூடிய நிலைமை ஏற்பட்டால்? தனிப்பெரும்பான்மை இல்லாமல் தனிப்பெரும் கட்சியாக அ.தி.மு.க. வெற்றி பெற்றால் அமையப் போவது ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியாக இருக்காது என்பது உறுதி.

÷ஜெயலலிதாவுக்கு ஆட்சியைக் கைப்பற்றியாக வேண்டிய நிர்பந்தம். வைகோவுக்குக் கட்சியைக் காப்பாற்றியாக வேண்டிய நிர்பந்தம். இருவரும் இதைப் புரிந்து கொள்ளாமல் பிடிவாதம் பிடித்தால்? மீண்டும் முதல் பாராவைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். அதுதான் நடக்கும்!

Add Comment