சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அரணாக இருந்தது திமுக ஆட்சிதான் – கடையநல்லூர் MLA

சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி உறுப்பினர் முகமது அபுபக்கர் பேசியது: வன விலங்குகள் மக்கள் வசிக்கும் பகுதிக்குள் வராமல் தடுக்க, திமுக ஆட்சியில் மின் வேலிகள் அமைக்கப்பட்டன. கடையநல்லூர் பகுதியில் இப்போது அவை செயல்படாமலே உள்ளன.

தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம் திமுக ஆட்சியில்தான் கொண்டு வரப்பட்டது என்று அவர் பேசினார்.

சிறுபான்மையினருக்கான அரசு திமுகவா, அதிமுகவா என்பது தொடர்பாக அதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி உறுப்பினர்களுக்கு இடையே பேரவையில் புதன்கிழமை காரசார விவாதம் நடைபெற்றது.

அப்போது, உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறுக்கிட்டு, “மைனாரிட்டி திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களையே உறுப்பினர் குறிப்பிட்டுப் பேசுகிறார்’ என்று கூறி, கடையநல்லூர் தொகுதிக்கு அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களைப் பட்டியலிட்டார்.

அதற்கு அபுபக்கர், “மைனாரிட்டி ஆட்சி என்று திமுக ஆட்சியைக் குறிப்பிடுகிறீர்கள்; அது உண்மைதான். சிறுபான்மை சமுதாயமான முஸ்லிம், கிறிஸ்துவ மக்களுக்கான பாதுகாப்பு அரணாக திமுக ஆட்சி இருந்தது என்பது உண்மைதான்’ என்றார்.

அமைச்சர் தங்கமணி:

சிறுபான்மை மக்களுக்கு அரணான அதிமுக ஆட்சிதான் இருந்து வருகிறது என்பதை மறந்துவிடக்கூடாது. 1992-இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, தமிழகத்தில் உள்ள முஸ்லிம்களுக்கு எந்தவிதப் பிரச்னையும் இல்லாமல் பாதுகாத்தது அதிமுக அரசுதான் என்பதை மறந்துவிடக் கூடாது. ரமலான் மாதத்துக்கு நோன்புக் கஞ்சிக்காக அரிசி கொடுத்தது அதிமுகதான் என்பதையும், உலமாக்களுக்கான ஓய்வூதியத்தை ரூ.1,000-த்திலிருந்து 1,500-ஆக உயர்த்தியது அதிமுக ஆட்சிதான் என்பதையும் மறந்துவிடக்கூடாது என்றார் அவர்.

Add Comment