ன்னாங்கோ இவனப்புடிங்கோ! ன்னு துள்ளிக் குதிக்கும் சிறுவனைக்…கலு. அப்துல்லாஹ் ரஹ்மத்துல்லாஹ்

குருதி காயாத விடியல்கள்… கலு. அப்துல்லாஹ் ரஹ்மத்துல்லாஹ்

—————————————————–
IMG-20160813-WA0004

தினமும் இரவுகளில்முற்றத்துச் சாவடியில் தூண்கம்பில் கட்டப்பட்டு கிடக்கும் ஆட்டுக்குட்டி அன்றிரவு மட்டும் கிடுவுகள் வேய்ந்த தோடத்து வீட்டில் காய்மண் போட்டு மெழுகிய மண்தரையில் செங்குத்தாக நிற்கும் உரலின் பக்கவாட்டில் கட்டப்பட்டுக் கிடந்தது.

மூன்று நான்கு மாதங்களாக அந்த வீட்டின் பெரியவருடன் மேய்ச்சலுக்காக அது அட்டக்குளத்து வயற்காட்டிற்கு குதித்துக் குதித்து சென்று மேய்ந்தபின் வீடு வந்து சேரும்.

நிமிர்ந்த நடையோடு அவருடன் எந்தக் கயிற்றுப் பிணைப்பும் இன்றி பின் தொடர்ந்து வருகிறது.

வழியில் யாராவது அவரைக் கூப்பிட்டு வீட்டினுள் அழைத்தாலும், அவருக்காக அந்த அந்நிய வீட்டின் வாசல்படியில் கட்டப்படாமலே காத்துக்கிடக்கிறது.

வருடாவருடம் வழக்கமாக வாங்கும் அதே புதுக்குடி சம்சாரியிடம் சொல்லி இந்தக் கிடாயையும் அவரே நேரில் போய் பார்த்து எழெட்டுமாசப் பூர்த்தியில் தூக்கி வந்து வைத்து வளர்க்கத் தொடங்கினார். நூற்றைம்பது இருநூறுக்குள் பேரம் படிந்துவிடும், வீட்டுக்கு வந்து ஒரு நாலைந்து நாட்களுக்கு கயிற்றோடு அவர் பின்னால் அலையும். கருப்பில் வெண்புள்ளிகள் கொண்ட அந்தப் போர்க்குட்டி அடுத்த ஓரிரு வாரத்தில் கழுத்துக் கயிற்றை வயிற்றில் மாற்றிக்கட்டியபடி அவருடன் சலங்கை குலுங்க ஒரு தேர் போல நடந்துவரும்.

நல்லாப்பா நீன் எங்கட்ட ஒர்க்க தாவன் (என்னிடம் ஒருமுறை தா) என்று அடம்பிடிக்கும் பேரனுக்கு

அல போலியா!, கொர்வாங் குட்டிலோ! எங்கனயாவது முட்டஉட்டு ஒச்சமாக்கிருவல!(மோதவிட்டு காயமுண்டாக்கிவிடுவாய்) ன்னு சொல்லிக் கை மாத்தாமல் அவரே வந்து தண்ணியும் வச்சு வளர்ப்பார்.

“இண்ணைக்கி மட்டும் என்னத்துக்கு தொடத்தூட்ல கெட்டிரிக்கியோ நல்லம்மா” ன்னு கேட்ட பேரனிடம் “நாளைக்கு விடிஞ்சாப் பெர்னா, அறுக்கனும்ன்னு கெட்டிரிக்கி…”

அப்படினா எப்பறைம் போல சாவடில கெட்டலியா?

எ ராசா நாளைக்கி அறுக்கப் போறோம்ன்னு பலாமுசீபத்து செய்த்தான் வராம பாதுகாக்கத் தான் ஊட்டுக்குள்ள கெட்டிக் கெடக்குப்பா. போதும் நீந்தூங்குன்னு சுருங்கச் சொல்லி முடிச்சார் நல்லம்மா…

நாளைக்கு அறுக்கப்படப் போகும் கிடாய்களை ஏக்கத்துடன் அந்தந்த வீட்டின் குட்டிப்பிள்ளைகள் ஆட்டின் முகத்தை ஆதுரத்துடன் தடவி விடுகின்றன. சில நாட்கள் தன்னுடன் வசித்த அந்த ஜீவராசி தங்களின் நலம் வேண்டி இறைவனிடம் பிரார்த்தித்து ஒரு தியாகக் குறியீடாக வானம் நோக்கி செல்ல உள்ளதை அவர்களிடம் பெரியவர்கள் சொல்லக் கேட்கையில் தங்களின் பொங்கி வரும் அழுகையை அடக்கிக் கொள்வார்கள்.

நாம் பாத்தெம்பா எங்கூட்டுக் குட்டி கண்ணுல கத்தி தெரியிதுடே! ன்னு சொல்லி ஒவ்வொரு வருடமும் திகிலுடன் கலைந்து போவார்கள்.

முதல் நாளே ஓலைப்பாய் வாங்கி வைத்துக் கொள்வதோடு மறக்காமல் தங்களின் கட்சி மோதியாருக்கும் தகவல் சொல்லி, சின்னாப்பா பெரியாப்பா சம்பந்த வீடுகள் உடன் பிறந்தாரைக் கட்டிய மச்சான்மார் என வீடுகளுக்குப் போய் தகவல் சொல்லி “நாளை கொர்வாங் குடுக்கப் போறோம்ன்னு விடிக்காலம் ஊட்டுக்கு வரச்சொல்லி வாப்பா ஒங்கள்ட்ட சொல்லச் சொல்லுச்சு”ன்னு ஒவ்வொருவரையும் வரும்படி கேட்டுக் கொள்வார்கள்.

மறுநாள் காலையில் ஆளுக்கு ஒரு புறம் பிடித்துக்கொள்ள, கிண்ணத்தில் தயாராக அரைத்து வைத்த மஞ்சளை கை நிறைய அள்ளி, நிரம்பிய கொப்பரை நீரில் ஏனம் வைத்து அள்ளி நடு வீதியல் நிப்பாட்டி ஆடு மேல் ஆளாளுக்கு தேய்த்துக் குளிப்பாட்டி அது திமிரும்போதெல்லாம் சிக்கெனப் பற்றி அதன் துள்ளலைக் குறைத்து அலங்கரிப்பார்கள்.

வீட்டினுள் இருந்து கனத்த மனதுடன் வந்து வாசலில் நிற்கும் பெரியவரின் காலடி தேடி தஞ்சம் அடையும் குட்டியை பிடிக்க வருபவர்களிடம் நீ விடப்ப! அது ஒரு பக்கமும் போவாதுன்னு சொல்லி மூனாசெய்யது எடுத்துப் பற்ற வைத்து திண்ணையில் அமர்கையில், அவர் அருகே மேனியைச் சிலுப்பும் குட்டியின் நீர் திவலைகள் பெரியாப்பாவின் காயாத கண்ணீர் துளிகளுடன் சங்கமமாகும். தடவிக்கொடுத்தபடி, கேட்பவர்களிடம் அவர் சொல்வார் எங்க வாப்பா காலத்துல இருந்து குடுக்குறோம். நாங்க அண்ணன்தம்பி பிரிஞ்சாலும் பூரியத்து வூட்ல நான் இருக்கதால தொடர்ந்து குடுக்கறன் நாளை எம்மக்களும் தொடர்ந்து குடுப்பாங்கோ ன்னு சொல்லிக் கிட்டார்.

மோதியார் வரவும் பரபரப்பு கூட, மச்சான் வர்லியப்பான்னு தேடி கடேசியில் அவரும் வெளியே வந்து எட்டிப் பார்க்க, அடே கடுமையாத் துள்ளுண்டே, நீ நவளுன்னு அங்கே வாட்ட சாட்டமா கொஞ்சம் வெட்கத்துடன் நின்று கொண்டிருந்த மருமகனைக் காட்டி, மருமவன் படிக்கட்டும் ன்னு அவர் சொல்ல, மருமவனும் சென்று அதனை கால்களை மடக்கிப் பிடிக்க பீறிட்டடித்த குருதியுடன் தக்பீரும் முழங்க, சட்டென அமைதியுடன் தலையில் முட்டாக்குடன் பெண்களும், தலை கவிழ்ந்தபடி பக்தியுடன் ஆண்களுமாய்… இறைப் பொருத்தத்துக்காக ஒரு குர்பானி அங்கே இனிதே நிறைவேறியது. அல்லாஹு அக்பர் வலில்லாஹில் ஹம்து…

ன்னாங்கோ இவனப்புடிங்கோ! ன்னு துள்ளிக் குதிக்கும் சிறுவனைக் கையில் பிடித்தபடி வரும் இளம் மனைவியிடம் அவனை வாங்கி என்னளா ன்னு அவர் கேக்க, குட்டிய அறுக்கக் கூடாதுன்னு கூட்டம் போடுறான் இம்புடு நேரமும் என்னபாடு படுத்துறான் ன்னு சொல்ல ஏங்கி அழும் அவனிடம் பெரியாப்பா சொன்னார், வாப்பா அடுத்த வருசம் நாமோ செவலைக்குட்டி வேங்கி அதை நீனே வளத்துக்கொப்பா..


அப்துல்லாஹ்

Add Comment