கடையநல்லூர் குடிநீர் பிரச்சினை விரைவாக தீர்க்கப்படும்-உள்ளாட்சி துறை அமைச்சர்

கடையநல்லூர் குடிநீர் பிரச்சினை விரைவாக தீர்க்கப்படும்
சட்டமன்றத்தில் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ கேள்விக்கு உள்ளாட்சி துறை அமைச்சர் பதில்

தமிழக சட்டப்ரேவையில் இன்று (23.08.2016) கேள்வி நேரத்தின் போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டமன்ற கட்சி தலைவர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் துணை கேள்வி எழுப்பினார் அப்போது பேசியதாவது:-

மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே,

எனது தொகுதி கடையநல்லூரிலே குடிநீர் பிரச்சினை இன்னும் தீர்ந்ததாக இல்லை.

இப்போது கூட அங்கே, கிருஷ்ணாபுரம் பகுதியில் பிரசித்தபெற்ற கோவில் கும்பாபிஷேகம், அந்த கும்பாபிஷேகத்திற்கு வரக்குடியவர்களுக்கு கூட போதுமான அளவிற்கு தண்ணீர் வசதி இல்லாத காரணத்தினால் வார்டு2, வார்டு 3, வார்டு 32, வார்டு 33ல் வசிக்கும் மக்கள் எல்லோரும் அவதி பட்டுகொண்டிருக்கிறார்கள்.
ஏற்கனவே தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேறக்கூடிய தருவாயில் இருக்கிறது. அது எப்போது நிறைவேற்றி தரப்படும் என்பதை தங்கள் மூலமாக மாண்புமிகு அமைச்சர் அவர்களிடமிருந்து அரிய விரும்புகிறேன்.

இதற்கு பதிலளித்து பேசிய நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி, சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்ததாவது:-

மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே, மாண்புமிகு உறுப்பினர் தாமிரபரணி கூட்டுகுடிநீர் தீட்டத்தை விரைவாக நிறைவேற்றி தரவேண்டுமென கேட்டிருக்கிறார்கள். தமிழகத்தில் மட்டுமல்ல இந்திய வரலாற்றிலேயே குடி தண்ணீருக்காக இன்றைக்கு அதிகமான நிதியை ஒதுக்கி, அதிகமான கூட்டு குடிநீர் திட்டங்களை செயல்படுத்தியவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
கடந்த ஐந்து வருடங்களாக ரூ. 21428 கோடியை மாண்புமிகு முதல்வர் அவர்கள் ஒதுக்கியுள்ளார்கள். கடந்த திமுக ஆட்சியில் ஐந்து வருடங்களாக ஒதுக்கப்பட்ட தொகை ரூ. 7,250 கோடிதான். கிட்டதட்ட ரூபாய் 14 ஆயிரம் கோடிக்கு மேல் முதல்வர் அவர்கள் நிதி ஒதுக்கி இன்றைக்கு பேரூராட்சி, நகராட்சி, ஊராட்சி ,மாநகராட்சி என அனைத்து பகுதிகளுக்கும் சிறப்பான முறையில் கூட்டு குடிநீர் திட்டம் தந்து கொண்டிருக்கிறார்கள். சில பகுதிகளில் பாத்தீர்கள் என்றால் மழை குறைவாக பெய்யும். சில பகுதிகளில் மழை அதிகமாக பெய்யும். அதனால் குடிநீர் பிரச்சினை சில இடங்களில் வரத்தான் செய்யும். ஆனால் மாண்புமிகு அம்மா அவர்களுடைய அரசு எப்படி எதிர்கொள்கிறது என்பதுதான் முக்கியம். இன்றைக்கு புயல் வந்ததாலும் சரி, வறட்சி வந்தாலும் சரி எப்படி எதிர்கொள்கிறது என்பதுதான் முக்கியம். மாண்புமிகு அம்மா அவர்கள் எந்த திட்டத்தை அறிவித்தாலும் சரி அது தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் இருந்தாலும் அது விரைவாக நிறைவேற்றப்படும். மாண்புமிகு உறுப்பினர் அந்த கோவில் கும்பாபிஷேகப் பகுதியில் கூட குடிநீர் பிரச்சினை இருப்பதாக கூறினார்கள். அங்கேயும் எதாவது பிரச்சினை இருந்தால் மாண்புமி தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுடைய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என்பதை மாண்புமிகு பேரவை தலைவர் வாயிலாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ அவர்கள் கேள்விக்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி, சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பதில் அளித்தார்.

Add Comment