கடையநல்லூர் எம் எல் ஏ யின் சர்வகட்சிக் கூட்டமும் நகராட்சி அதிகாரிகளுடன் சந்திப்பும்

கடையநல்லூர் எம் எல் ஏ யின் சர்வகட்சிக் கூட்டமும் நகராட்சி அதிகாரிகளுடன் சந்திப்பும்

கடந்த 25-௦8-2016 வியாழக்கிழமையன்று பிற்பகல் 5 மணிக்கு எம் எல் ஏ அபூபக்கர் அவர்கள் கடையநல்லூர் சட்டமன்ற அலுவலகத்தில் சர்வகட்சியினரையும் அழைத்து கடையநல்லூரில் நிலவிவரும் தண்ணீர்த்தட்டுப்பாடு பற்றிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார் .

அனைத்துக்கட்சிப் பிரதிநிதிகளும் ஆர்வத்தோடு வந்து கலந்துகொண்டனர்.

கடையநல்லூரில் நிலவும் தண்ணீர்த் தட்டுப்பாடு செயற்கையாது என்றும், நகராட்சி நிர்வாகத்தின் அக்கறையின்மையும், பொடுபோக்குத்தனமும் தான் தண்ணீர்த் தட்டுப்பாட்டிற்குக் காரணம் என்றும் ஒருமித்த குரலில் அனைவரும் தெரிவித்தனர். குடிநீருக்குப் பயன்படுத்தவேண்டிய நீர் விவசாயத்திற்கு திருப்பிவிடப்படுவதாகவும், மேலக்காட்டிலுள்ள மற்றக் கிணறுகளில் தண்ணீர் ஊற்று பொங்கி வரும் நிலையில் நகராட்சிக்கு சொந்தமான கிணறுகளில் மட்டும் வறட்சி நிலவுவதற்கு அந்தக் கிணறுகள் தூர் வாரப்படாமல் கிடப்பதும் ஒரு முக்கியக் காரணமென்றும் பலரும் கருத்துத் தெரிவித்தனர். இப்போது இருக்கும் நகராட்சி ஆணையர் செயல்படாமல் முடங்கிக் கிடப்பதாகவும் கடையநல்லூர் நிலவரங்களை கீழே இறங்கி ஆய்வு மேற்கொள்வதில்லை என்றும் குற்றச்சாட்டுக்களை அடுக்கினார்கள்.

மறுநாள் வெள்ளிக் கிழமை நகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகளைச் சந்தித்து விபரங்களைக் கேட்டறிவதாகச் சொன்ன எம் எல் ஏ நகராட்சி ஆணையரைத் தொடர்புகொண்டு நாளை நடைபெற விருக்கும் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு வேண்டிக் கொண்டார். உடனே நகராட்சி ஆணையர் தனக்கு வேறொரு முக்கியக் கூட்டம் இருப்பதாகச் சொல்லி நழுவினார். உடனே எம் எல் ஏ “ நான் இந்தக் கூட்டத்தை மந்திரிரியின் அறிவுறுத்தலின்படி கூட்டியுள்ளேன். ஒரு மக்கள் பிரதி நிதி கூட்டும் கூட்டத்திலிருந்து நீங்கள் நழுவினால் நான் நேரடியாக மந்திரியிடம் உங்களைப் பற்றி புகார் தெரிவிப்பேன் “ என்று சற்றுக் காட்டமாக தெரிவித்தார். இதற்கு முன்பும் இது போன்ற கூட்டத்தைக் கூட்ட நினைத்தபோது கமிஷனர் இப்படித்தான் நழுவினார் .

அதையும் நினைவூட்டி அவரை மிகக்கடுமையாக கடிந்து கொண்டதால் கூட்டத்திற்கு வர சம்மதித்தார். (கூட்டம் கூட்டி தன்னை நார் நாராக கிழித்துவிடுவார் இந்த எம் எல் ஏ என்ற அச்சத்தால் நழுவுகிறார் என்று பொது மக்கள் பேசிக்கொள்கிறார்கள்) மறுநாள் வெள்ளிகிழமை காலை 11 மணிக்கு நகர சபையில் அனைத்து அதிகாரிகளையும் அமர வைத்து கடையநல்லூரில் தண்ணீர்த் தட்டுப்பாடு வர என்னதான் காரணம் ? என்று எம் எல் ஏ கேட்டதற்கு அதிகாரிகள் தங்கள் தரப்பு விளக்கத்தையளித்தனர். இங்கே நிலைமை இப்படி இருக்க நகராட்சி ஆணையர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கடையநல்லூரில் தண்ணீர்த்தட்டுபாடே இல்லை என்று தவறான தகவலைத் தந்துள்ளார் என்று ஆணையர் முன்னிலையில் எம் எல் ஏ சொன்னபோது நகராட்சி ஆணையரின் தலை தொங்கிப் போயிருந்தது. அவரால் எந்தப் பதிலும் சொல்ல முடியவில்லை.

விவசாயத்திற்கு சட்டத்திற்குப் புறம்பாக நீர் வழங்கப்படுவதும், கருப்பாநதி டேம் அருகில் சட்டத்திற்குப் புறம்பாக பாட்டில் நீர்த் தொழிற்சாலை அமைத்து லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் உறிஞ்சப்படுவதாலும் நீர்வளம் அபரிமிதமாக இருந்தும் கடையநல்லூர் தண்ணீர்த் தட்டுப்பாட்டில் தத்தளிக்கிறது என்று அக்கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுநல ஆர்வலர்கள் குற்றம் சாட்டினார்கள். அரசு அதிகாரிகளின் தரப்பிலிருந்து சரியான பதில் கிடைக்கவில்லை. இறுதியாக இந்த தண்ணீர்த் தட்டுப்பாட்டை நீக்குவதற்கு என்னால் ஆன எல்லா ஒத்துழைப்பையும் நான் தரத் தயாராக இருக்கிறேன்.

அமைச்சரையும் , மேலதிகாரிகளையும் சந்தித்து ஏற்கெனவே பேசியுள்ளேன். இப்போது நீங்கள் எந்தக் கோரிக்கை வைத்தாலும் அதனை ஏற்று செயல்பட நான் தயாராக இருக்கிறேன் என்று அதிகாரிகளிடம் எம் எல் ஏ தெரிவித்தார் எதிர்வரும் அக்டோபர் மாதத்திற்குள் தண்ணீர்ப் பிரச்சினையை தீர்த்துவிடுவோம் என்று அதிகாரிகள் தரப்பில் உறுதி கூறப்பட்டுள்ளது.

Add Comment