பள்ளிவாசல்களில் கூம்பு வடிவிலான ஒலிப்பெருக்கிகளில் பாங்கு அழைப்பு பணி தொடர உத்தரவிட முஸ்லிம் லீக் வேண்டுகோள்

பள்ளிவாசல்களில் கூம்பு வடிவிலான ஒலிப்பெருக்கிகளில் பாங்கு அழைப்பு பணி தொடர உத்தரவிடவும்
தமிழக முதல்வருக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேண்டுகோள்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ தமிழக முதல்வர் அவர்களுக்கு கொடுத்துள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:-

முஸ்லிம்கள் தினமும் ஐந்து வேளை இறைவனை தொழுது வணங்கி வருகின்றனர். இத்தொழுiக்கான அழைப்பு (பாங்கு) பள்ளிவாசல்களில் தினமும் ஐந்து வேளை கூம்பு வடிவிலான ஒலிபெருக்கி மூலம் செய்யப்படுகிறது. ஒரு வேளைக்கு இரண்டு நிமிடங்கள் என்றால் ஐந்து வேளைக்கு பத்து நிமிடங்கள் மட்டுமே தினமும் ஒலிபெருக்கியில் தொழுகைக்கு அழைக்கப்படுகின்றன.

இவ்வொலிபெருக்கிகள் பள்ளிவாசல்களில் உயரமான மினராக்களில் பொருத்தப்பட்டிருப்பதோடு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ள 70 டெசிபல் அளவிலான குறைந்த சப்தத்தில்தான் தொhழுiக்கான அழைப்பு பன்னெடு காலமாக சொல்லப்பட்டு வருகின்றது.

தற்போது பள்ளிவாசல்களில் பொருத்தப்பட்டுள்ள கூம்பு வடிவிலான ஒலி பெருக்கிகளில் தொழுகைக்கான பாங்கு சொல்லக் கூடாது என காவல் துறை அதிகாரிகள் கெடுபிடி செய்து வருவதோடு இந்த ஒலிபெருக்கிகளை உடனடியாக அகற்றிட வேண்டுமென தமிழகத்தில் பல பகுதிகளில் பள்ளிவாசல் ஜமாஅத்தினர்களை வலியுறுத்தி வருவது முஸ்லிம் சமுதாயத்தினருக்கு வேதனை அளிக்கின்றது.

இதுபோன்று கடந்த ரமலான் நோன்பு மாதத்தில் சென்னையில் காவல்துறையினர் கெடுபிடி செய்தபோது தங்களின் மேலான பார்வைக்கு எடுத்துவந்த போது காவல்துறையினரின் நடவடிக்கை நிறுத்தப்பட்டது என்பதை இங்கே நன்றியோடு நினைவு கூறுகின்றேன்.

எனவே தாங்கள் உரிய நடவடிக்கை எடுத்து முஸ்லிம்களின் ஐவேளை தொழுகை சிரமமின்றி நிறைவேற்றிட காவல்துறைக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
இவ்வாறு கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இக்கோரிக்கை வலியுறுத்தி நேற்று (01.09.2016 சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ பேரவை தலைவரிடம் கோரிக்கை வைத்தார். பேரவையில் அலுவல அதிகமாக இருப்பதால் முதல்வர் அவர்களின் நேரடி கவனத்திற்கு எடுத்துச்செல்ல அறிவுறுத்தியதை தொடர்ந்து இத்தகவலை முதல்வரின் தனிச் செயலாளரிடமும், வக்ஃப் வாரிய அமைச்சர் டாக்டர் நிலோபர் கபீல் ஆகியோரை கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ நேரில் சந்தித்து விரிவாக எடுத்து கூறினார்.

ஜமாஅத்தினருக்கு வேண்டுகோள்:-

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமை நிலையத்திற்கு பல்வேறு ஊர்களிலிருந்து ஜமாஅத்தார்கள் நீதிமன்ற உத்தரவு என தெரிவித்த ஆங்காங்கே காவல்துறையினர் கூம்பு வடிவிலான ஒலி பெருக்கிகளை அகற்றிட கெடுபிடி செய்து வருவதாக தகவல் வந்த வண்ணம் உள்ளது.
நீதிமன்ற உத்தரவு என்பது கூம்பு வடிவிலான ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும் என்பதல்ல.நாய்ஸ்பொலிசன் குறித்ததான் நீதிமன்றம் வழிபாட்டு தலங்களில் அதிக சப்தத்தை எழுப்பக்கூடிய ஒலிபெருக்கிகள் வைக்க கூடாது என்பதையும், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் மக்களுக்கு இடையூறாக வெடிகளை வெடிக்கக்கூடாது என்பதுதான் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூம்பு வடிவிலான ஒலிபெருக்கிகளை வைக்கக்கூடாது என்று தெரிவிக்கவில்லை.

கூம்பு ஒலிபெருக்கிகளுக்கு அரசு தடை விதித்திருந்தால் அதை எப்படி தயாரிக்க முடியும்.
சென்னை பள்ளிவாசல்களில் இப்பிரச்சினை வந்தபோது, அனைத்து பள்ளிவாசல்களிலும் 70 டெசிபல் சப்த அளவிலான ஒலிபெருக்கிகளே பயன்படுத்தப்படுகின்றது என்பதை சவுண்ட் இன்ஜினியர் மூலம் உறுதி செய்து அதன் பதிவு ரசீதுடன் காவல் துறையினரிடம் அளிக்கப்பட்டதை தொடர்ந்து கெடுபிடி நடவடிக்கை நிறுத்தப்பட்டது என்பதை அனைத்து ஜமாஅத்தினருக்கும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்நடைமுறையையே அனைத்து பள்ளிவாசல்களிலும் பின்பற்றிட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமை நிலையத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

Add Comment