ஜியோவில் நான் பெற்ற ‘ஐயோ அனுபவம்

ஜியோவில் நான் பெற்ற ‘ஐயோ அனுபவம்‘
+++++++++++++++++++++++++++++

ஜியோ பற்றி சற்று விரிவாக எழுத யோசித்திருந்தேன்.தொழில்நுட்பம்- பிஜேபி- ரிலையன்ஸ் என்று நிறைய எழுத நினைத்தேன். இப்போது வாய்ப்பில்லை. நேரமில்லை. ஒரு அனுபவத்தை மட்டும் இப்போது பதிவிடுகிறேன்.

சில வாரங்களுக்கு முன்னால், மலிவான விலையில் நான் வாங்கிய ‘புத்திசாலி‘ போன் செத்துப்போனது. தொடர்பெண்கள் உள்ளிட்ட விவரங்கள் இல்லாமல் நான் செத்து சுண்ணாம்பு ஆகிப் போனபோது என் நண்பர் ஒருவர் ஜியோ LYF WIND போன் கொடுத்து “வாய்ப்பிருக்கும்போது காசு கொடுங்கள்“, என்றார். இருந்த நெருக்கடிக்கு பயந்து சரியென்று ஒப்புக்கொண்டேன்.

அது ரிலையன்ஸ் போன் என்பதுதான் என் தயக்கத்துக்கான முதல் காரணம். ரிலையன்ஸ் என்றால் பிராடு என்று பொருள் என நான் அனுபவத்தில் நன்கு தெரிந்தவன். ரிலையன்ஸ் போன் எண் வைத்தருப்பவர் என்றாலே எனக்குள் எச்சரிக்கை மணி அடிக்கும்.

உதாரணமாக, இந்தியாவில் செல்போன் வந்தபோது தனியாருக்குத்தான் உரிமம் கொடுக்கப்பட்டது. BSNLக்கு உரிமம் கொடுக்கப்படவில்லை. அப்போது ஒரு பிளாஸ்டிக் டப்பா போனை 36 ஆயிரம் ரூபாய்க்கு ரிலையன்ஸ் விற்றது. அப்புறம் படிப்படியாக விலையைக் குறைத்தது. கடைசியில், சில வருடங்கள் கழித்து அதே போனை 500 ரூபாய்க்கு இரண்டு போன் என்று கூவி கூவி விற்றார்கள். அப்படியென்றால், அந்த போனின் விலை என்ன? ரிலையன்ஸ் அடித்த கொள்ளை என்ன?

அது துவங்கி நிறைய அனுபவம் எனக்கிருக்கிறது என்பதால் சற்று தயக்கம்தான். இருந்தாலும் பிரச்சனைகள் கருதி அந்த ஜியோ LYF Wind போனை கடனாகப் பெற்று லேப்டாப்பில் மாட்டி தொடர்பு முகவரிகளை மீட்டு ….. என்று வேலை. அதனால், அந்த போன் செயல் திறன் பற்றி நிறைய யோசிக்க வில்லை.

ஆனால் சோதனை முறையில் வழங்கப்பட்டிருந்த அந்த போனில் ஜியோ வேலை செய்யவில்லை. என்னுடைய BSNL சிம் மட்டும் வேலை செய்தது. ஜியோ சிம்மில் அழைத்தால் பல இடங்களில் கால் போவதில், போன கால் தொடர்வதில் பிரச்சனை. அதனால், அருகில் உள்ள ரிலையன்ஸ் ஆபீஸ் சென்றேன்.

புதிய அலுவலகம். திப்ருபாய் அம்பானி படத்துக்கு மாலை. அத்துடன் ஏதோ உளறல் வாசகம். போனைக் கொடுத்துவிட்டு காத்திருந்தேன்.

போனைத் திருப்பிக் கொடுத்த சர்வீஸ் என்ஜினியர் சொன்ன செய்திகள்:
1. இந்த டெக்னாலஜி CDMAவில் இயங்குவது. டவரிலிருந்து 400 மீட்டர் வரைக்கும்தான் எடுக்கும். அந்த அளவுக்கு நாங்கள் டவர் அமைக்கவில்லை. அமைத்துக்கொண்டிருக்கிறோம். விரைவில் முடித்துவிடுவோம். (நான் மிரண்டுபோனேன். இந்தியா முழுமைக்கும் 400 மீ சுற்றளவில் ஒரு டவர் அமைக்க எத்தனை வருடம் ஆகும்?)
2. அத்துடன் இது இன்டர்நெட் வழியே அழைப்பை அனுப்பும் முறை. வழக்கமான சுவிட்சிங் முறை அல்ல. எனவே, சிக்னல் சரியில்லை என்றால் கால் போகாது. போனால் தொடராது. இந்தியா முழுக்க டவர் அமைத்த பின்னர் சரியாகிவிடும்.
3. இந்த விவரத்தை நான் உங்களிடம் சொன்னதாக யாரிடமும் சொல்லாதீர்கள். ஒரு க‘ஷ்‘டமரிடம் பொய் சொல்ல மனசில்லை. அதனால் சொன்னேன். கம்பெனி பாதிக்கப்படும்.

இவை மூன்றும் அந்த இளைய பொறியாளர் சொன்ன செய்திகள். அப்புறம் எனது Wind, hang ஆகிறது என்று சொன்னதால் மென்பொருள் update செய்து கொடுத்தார்.

அப்புறம் மற்றொரு அதிர்ச்சி எதிர்கொள்ள வேண்டி வந்தது. அனைத்தும் நெட் மூலம் என்பதால் அதிக வலுவான பேட்டரி வேண்டும். ஆனால், விலையைக் குறைப்பதற்காக குறைவான mAh ஆற்றலுள்ள பேட்டரியைப் பொறுத்தியிருந்தார்கள். அப்புறம், எப்போதும் மின்சாரத்தை ஸ்டாக் வைத்திருக்கும் இரும்புக் கை மாயாவியாக இருந்தால் மட்டும்தான், அலைந்து திரிந்து கொண்டிருந்த நான் அந்த போனுடன் குடித்தனம் நடத்த முடியும். எனவே….

ஒரு நண்பரின் பண உதவியோடு சாதாரணமான Smart phone வாங்கி நிம்மதியாக வேலையைப் பார்க்கிறேன். அந்த ஜியோவை கொடுத்த நண்பரின் தலையில் கட்டிவிட்டேன்.

நான் நிம்மதியாக இருக்கிறேன்.

நீங்கள் எப்படி? ஜியோவிற்குப் போனதால் ‘ஐய்யோ‘ வா?

(இரண்டாவது படம்: துவக்கத்தில் ஒரு போன் 36 ஆயிரம். பின்னர் 2 போன் 500 என்று விற்கப்பட்ட ரிலையன்ஸ் போன்)

14222265_10208998799341586_2695405156905848928_n14237608_10208998799781597_6229805865326332310_n

Add Comment