வெளிநாட்டு வாசிகளின் பயண நேர சோக கதை

வெளிநாட்டில் இரண்டு ஆண்டுகள் மூன்று ஆண்டுகள் பணி செய்து விட்டு நாடு திரும்பும் ஒரு சாமானியனுக்கு அது ஒரு பிரசவ நேரம் மாதிரி என்றால் யாராவது நம்புவீர்களா?

தாய்நாட்டிலேயே இருப்பவர்களுக்கு வேண்டுமானால் இது ஆச்சர்யமாக இருக்கலாம். ஆனால் வெளிநாட்டில் வேலை செய்யும் சக தொழிலாளிகளே உங்களால் கூடவா இதை புரிந்துகொள்ள முடியவில்லை?

தன் முதலாளியிடம் கெஞ்சி போராடி விடுமுறைக்கு அனுமதி பெற்று, மாதந்தோறும் சம்பாதித்த பணத்தை அப்படியே தன் குடும்பத்திற்கு அனுப்பியது போக மிச்சம் மீதி சேமித்த பணம் மற்றும் கடனாக வாங்கிய சொற்ப தொகையை கொண்டு சில பொருட்களை பார்த்து பார்த்து வாங்க ஆரம்பிக்கிறான்.

நினைத்ததையெல்லாம் வாங்கி விட முடியாது பல நாட்கள் கடைவீதியில் பார்த்து ஆசைகொண்ட ஒரு பொருளை அவன் தாயகம் புறப்படும்போதாவது எப்படியாவது வாங்க நினைக்கிறான்.

கையில் உள்ள சொற்ப தொகைக்கு உறவினர்களிடமிருந்தும் நன்பர்களிடமிருந்தும் வரும் தேவை பட்டியலோ அவனை தலைசுற்ற வைத்து விடுகிறது.

இது ஒருபுறமிருக்க இவன் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனையே இவனோடு வெளிநாடில் இருக்கும் சக நண்பர்களும் உறவினர்களும் தான்.

எப்படியோ சிறுக சிறுக பொருட்களை வாங்கி முடித்து விட்டு ஒரு அட்டைப் பெட்டியில் கட்டி முடிப்பான்.

ஒரு விமான பயணிக்கு 30 அல்லது 40 கிலோ பொருட்களை மட்டுமே கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவான். (ஒவ்வொரு விமானத்திற்கு 30அல்லது 40 என எடை வித்தியாசப்படும்.)

கட்டிய பெட்டியை எடை போட்டு பார்க்கும்போது மீண்டு ஒருமுறை தலைசுற்றி விழுவான். காரணம் குறைந்தது ஐம்பது கிலோவிற்கு அதிகமாக இருக்கும்.

என்ன செய்வது இவனுடைய பொருள் அதிகபட்சம் இருபத்தைந்து கிலோ கூட இருக்காது. மற்ற அனைத்தும் அனாமத்து பொருட்கள் தான். நண்பர்கள் நண்பரின் நண்பர்கள் உறவினர்கள் உறவினரின் உறவினர்கள் இப்படி வாரி வழங்கி இருப்பார்கள் தங்களது வீட்டில் ஒப்படைக்க சொல்லி.

இதிலும் பயணம் புறப்படுபவன் தன் சகோதரி யாரையாவது மணமுடித்து கொடுத்த சம்பந்தி வீட்டு சொந்தக்காரன் எவனாவது வெளிநாட்டில் இருந்து விட்டால் அவ்வளவு தான். மாப்பிள்ளை வீட்டுக்காரன் என்கிற ஆணவத்தினை அங்கே பொருள் மூட்டையை கொடுத்து அதிகாரம் செலுத்துவான்.

வேறு வழியே இல்லை இவன் பொருளை கொண்டு போகா விட்டாலும் அவன் நம் அக்கா தங்கச்சியோட மாமியார் குடும்பத்துக் காரன் என்பதால் அவன் கொடுத்த பொருளை கொண்டு சென்றே ஆக வேண்டும்.

இதில் இன்னொரு ரகத்தான் இருக்கிறான் இவனுக்கு விசா எடுத்தவன். பணம் வாங்கி விட்டு தான் விசா எடுத்திருப்பான். ஆனாலும் அவனுடைய அழும்பு இவன் வெளிநாட்டு வாழ்க்கையை முடித்து விட்டு போகும் வரை தொடரும். இவனின் ஒவ்வொரு முறை பயண பெட்டியிலும் விசா எடுத்தவனின் ஒரு மூட்டை தவறாமல் இடம் பிடிக்கும்.

மீண்டும் ஒருமுறை கட்டிய பெட்டி பிரிக்கப்பட்டு அறுவை சிகிச்சைக்கு ஆளாக்கப்படும். ஆசையாய் வாங்கிய சில பொருட்கள் அகற்றப்பட்டு மீண்டும் எடை பார்க்கப் படும். மறுபடியும் எடை குறைந்தபாடில்லை. இந்த முறை தலை டவர் இல்லாத போனில் டவுன்லோடு செய்வதை போல் சுற்றும்.

தங்கி இருக்கும் அறையின் சக நண்பர்களுக்கு நடு சாமம் ஆகி இருக்கும் இவன் மட்டும் தூண்டியின் மிதவையையே உற்று நோக்கும் மீனவனை போல பெட்டியையே வெறித்து பார்த்து கொடிருப்பான்.

திடீரென யோசனை தோன்றும் அந்த பொருளை எடுத்து கைப்பையில் வைத்து கொண்டால் என்ன? யோசித்த மாத்திரத்தில் கட்டிய பெட்டிக்கு அடுத்து ஒரு அறுவை சிகிச்சை ஆரம்பமாகும். இரவு தூக்கம் கெட்டது தான் மிச்சம் எடை என்னவோ பல நாள் தொப்பையை போல் எந்த டயட்டுக்கும் கட்டுப்படாது. அண்டாவிலிருந்து காதுக்கு சொட்டு மருந்து எடுத்ததை போல் குறைந்திருக்கும்.

விடிந்ததும் தொலைப்பேசியில் அங்கங்கே தொடர்பு கொள்வான் நன்பர்களை. ஏர்போர்ட்ல ஏதாவது வாஸ்தா(ரெக்கமண்ட்) இருக்கா மச்சான். வெயிட் அதிகமா இருக்கு..
அப்போ தான் ஏர்போர்ட் முதீர்களாக இருக்கும் அவிங்க ஓனர்கள் எல்லாம் ஸாஃபர் (வெளிநாடு) போயிருப்பாய்ங்கெ..

புறப்படும் நாள் வந்து விடும் அட்டை பெட்டிக்கு இறுதி அறுவை சிகிச்சை செய்தே ஆக வேண்டும். அறை நன்பர்களோடு இறுதிகட்ட சிகிச்சை நடக்கும். மீண்டும் சில பல பொருட்கள் அகற்றப்படும். பெட்டியை மறு சீரமைப்பு செய்யும் சக அறை நண்பன் கண்ணும் கருத்துமாக செயல்படுவான் தான் கொடுத்து விடும் பொருள் பெட்டியின் ஆழப்பகுதியில் பாதுகாப்பாக பயணிக்க வேண்டும் என்பதில்.

ஹலோ… தொலைப்பேசி ஒலிக்கும் தங்கச்சி புருசனோட அக்கா வீட்டுக்காரனோட மச்சினன் பேசுவாரு… இந்த மூன்று வருடத்தில் இரண்டாவது முறையாக பேசுகிறார். முதல் தடவை இவன் ஊரிலிருந்து வந்த போது அவன் வீட்டிலிருந்து வந்த சாமான்களை வாங்குவதற்காக இப்போது வீட்டிற்கு சாமான் கொடுத்து விடுவதற்காக…

சொல்லுங்க மச்சான் ஊருக்கு போரிங்களாமே போன் பன்னினப்ப உங்க தங்கச்சி சொன்னுச்சி (அவன் பொண்டாட்டி இப்ப இவனுக்கு தங்கச்சி.. இப்போ தான் உறவுமுறை எல்லாம் ரினிவல் செய்வாங்கெ) அப்படியா ஒன்னுமில்ல ஒரு டேங்கு டின்னு கேட்டுச்சி…. ஊர்ல ஒரே வெயிலுல்ல… அப்படியா….. நாக்கில் தண்ணி வரண்டு போய் விடும் இவனுக்கு..

வேறு வழியில்லையே முறையில குறை வந்து தொலைக்குமே…சரி சீக்கிரம் எடுத்துட்டு வாங்க பொட்டி கட்டிக்கிட்டு இருக்கேன்.. இதோ உங்க பில்டிங் வாசல் கிட்ட வந்துட்டேன்… (பக்கி ரெடியா தான் இருந்திருக்கும்)

உப்பி போன தொப்பைல இன்னும் கொஞ்சம் குப்பைய கொடினமாறி பார்சல் பெட்டி வீங்கி போயி காட்சியளிக்கும். ஒரு வழியா கட்டி முடிச்சி கனவுகளோடும் பல கடமைகளோடும் பிரசவ நேர பயத்தோடும் பயணம் புறப்படும் விமான நிலையம் நோக்கி…

வரிசையில் அடுத்து இவர் தான் பெட்டியை தூக்கி தராசில் வைத்தவுடன் உதடுகளை பிதுக்கி புருவத்தை உயர்த்தும் ஏர்லைன்ஸ் அதிகாரியின் அதிகார பார்வையில் இவனுக்கு இன்னொரு முறை தலை சுற்றல் மட்டுமல்ல. நெடுந்தூர பயணத்தில் பர்ஸை தொலைத்தவனை போல் அடி வையிற்றில் ஒரு சுனாமி ஏற்பட்டு பாவமாய் நிற்பான்.

எக்ஸ்ட்ரா வெயிட்டுக்கு பணம் கட்டுரிங்களா இல்ல வெளிய எடுத்துட்டு போயி எடைய குறைச்சிட்டு வரிங்களா? ஏர்லைன்ஸ் அதிகாரியின் ஆங்கில கேள்விக்கு இவனிடம் என்ன பதில் இருக்கும்?? மன்றாடுவதை தவிர. எந்த பலனும் இருக்காது அவ்வளவு காசுக்கு எங்கே போவது? இரண்டு மாத சம்பளத்தை அள்ளவா கட்ட சொல்கிறான்..

பெட்டியை வெளியே எடுத்து வந்து விமானநிலையத்திலேயே வழியனுப்ப வந்தவர்கள் புடைசூழ இன்னுமோர் அறுவை சிகிச்சை ஆரம்பமாகும்….

இந்த காட்சியை தான் நாங்கள் தினம் தினம் குவைத் விமானநிலையத்தில் பார்த்து நொந்து போகிறோம்.

விமான நிலையத்தில் அனைவர் முன்னிலையிலும் பெட்டியை பிரித்து.. எடை குறைவாக எடுத்து செல்லும் வேறு பயணிகளிடம் இதை கொஞ்சம் உள்ளே கொண்டு வந்து கொடுத்து விடுங்கள் என கெஞ்சுவதும்.

பெட்டியில் வைத்திருந்த பெண்களின் உள்ளாடை வரைக்கும் அனைவர் முன்னிலையிலும் கடைவிரிக்கப்படும். நமக்கு பிடித்தமான பொருளாக இருக்கும் ஆனால் சிலருக்கு முகம் சுழிக்க வைக்கும் அப்படியான பொருளும் அங்கே பார்வையாக்கப்படும்..

ஆசையாய் அம்மாவுக்கு மனைவிக்கு குழந்தைக்கு என வாங்கிய பொருட்கள் எல்லாம் திருப்பி வழியனுப்ப வந்தவர்களிடம் திருப்பி அனுப்ப படும். கட்டியது பாதி கட்டாதது பாதி விழுந்தது சிந்தியது என அள்ளி முடிந்து கொண்டு மீண்டும் ஒரு வரிசையில் மரண பயத்தில் எடைப் போடப்படும் அதிகாரியின் முகம் சுழித்தாலும் கொஞ்சூண்டு ஈர மனசும் கைக்காடிகாரத்தின் புறப்பாட்டு சமிக்ஞையும் இவன் அவஸ்தையை முடிவுக்கு கொண்டு வரும்..

எப்படியோ ஒரு வழியாக உள்ளே சென்று கழிவறைக்குள் போய் முகத்தை கழுவி விட்டு ஒரு செல்ஃபி எடுத்து முகநூலில் “ஒறவுகளே தாயகம் நோக்கி புறப்படுகிறேன்” அப்படின்னு ஒரு ஸ்டேட்டஸ் போட்டுவிட்டு ஒர் ஓரமாய் அமர்ந்து லைக்குகளை எண்ணிக் கொண்டிருக்கும் அந்த சாமானியனின் நிலை பிரசவ நிலையா இல்லையா?

இதுபோன்றவர்களை நான் தினம் தினம் விமானநிலையத்தில் பார்க்கிறேன் எந்த உதவியும் செய்ய முடியாது. ஊரிலேயே மழிவாக கிடைக்கும் பொருட்களை ஏன் வாங்குகிறீர்கள் என உபதேசமும் செய்ய முடியாத நேரம் அது.

நீண்ட நாட்களாக எழுத வேண்டும் என எண்ணி இருந்தேன்.. இதில் நிறைய விசயங்கள் விடுபட்டிருக்கிறது. நீண்ட பதிவாய் போனால் படிக்க ஆர்வம் இருக்காது என்பதால் சுருக்கி கொண்டேன்.

உறவோ நட்போ உங்களுக்குள் இந்த விசயத்தில் உள்ள புரிதல் அல்லது ஒப்பந்தத்தின் அடிப்படையில் கொண்டு செல்வது கொடுத்து விடுவது விதிவிலக்கு.

தயவுசெய்து மற்ற உறவினர்களும் நண்பர்களும் இதுபோன்ற செயலை செய்யாதீர்கள். யாரிடமும் எந்த பொருட்களையும் கொடுத்து விடவும் மாட்டோம் யார் பொருளையும் கொண்டு செல்லவும் மாட்டோம் என்கிற முடிவிற்கு வாருங்கள்.

பயணக்காரன் பாதி பயித்தியக்காரன் என்பார்கள் உங்களின் இதுபோன்ற செயலால் முழு பைத்தியக்காரனாகி விடுவான்.

“பிறர் நலம் நாடுவதே இஸ்லாம்” நபிகள் நாயகம்.

தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள்.

கூத்தாநல்லூர் ஜின்னா

Add Comment