மோடியின் திட்டம் “எடுத்தேன் கவிழ்த்தேன்” என்ற ரீதியில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

பிரதமர் மோடி அவர்கள் அண்மையில் ஆற்றிய இந்தி சொற்பொழிவின் சாராம்சம் இது:

//பெண்களின் பெயரில் டெபாஸிட் செய்யப்படும் 2.5 லட்சம் ரூபாய்க்கு அரசிடமிருந்து எந்தவித கணக்கு வழக்கும் கேட்கப்படமாட்டாது.//

//தாயை முதியோர் இல்லத்தில் சேர்க்கும் பாசமிலா பிள்ளைகள் இனி அவர்கள் பெயரில் பணம் டெபாஸிட் செய்வார்கள்//.

//இனி அம்மாமார்கள் எனக்கு ஆசிர்வாதம் அளிப்பார்கள்//.

//கணக்கு காட்டப்படாத பணம் ஏதாவது கண்டுபிடிக்கப்பட்டால் நான் சும்மா இருக்க மாட்டேன். நாடு சுதந்திரம் அடைந்த காலந்தொட்டு இன்றுவரை அவர்களின் கணக்கு வழக்கை நான் சோதிக்கப் போகிறேன்//,

//இதற்காக எத்தனைப் பேரை இப்பணிக்காக ஈடுபடுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டாலும் அதற்காக நான் ஈடுபடுத்துவேன்//.

//கறுப்பு பணமுதலைகள் யாரும் இனி தப்பவே முடியாது//.

//என்னை முழுவதுமாக அறிந்தவர்கள் புத்திசாலிகளும் கூட//.

//நேர்மையானவர்களுக்கு துணைநிற்பவர்களுக்கு என்னுடைய அரசு எல்லா உதவிகளும் செய்யும்//

//நேர்மையற்றவர்கள் அதற்கான தண்டனை அனுபவத்தே தீர வேண்டும்//.

இதுதான் பிரதமர் அவர்கள் ஆற்றிய இந்திமொழி உரையின் சாராம்சம்.

கறுப்புப்பணத்தை ஒழிப்பதற்கு அவர் மேற்கொண்டிருக்கும் முயற்சியை ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் பாராட்டியே ஆகவேண்டும். இதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்கவே முடியாது.

இந்த திட்டத்துக்கு எதிர்த்து நிற்பவர்களும் இதை எதிர்த்து குரல் கொடுப்பவர்களும் தேச பக்தர்கள் அல்ல என்று முடிவுக்கு வரமுடியாது

காரணம், இதனை எதிர்த்து புலம்புபவர்கள் அனைவரும் நிச்சயமாக தேச துரோகிகள் அல்ல. எல்லோரும் அன்றாட தேவைக்கு அவதிப்படுபவர்களும், பிரயாணத்திற்கிடையே சிக்கியவர்களும், திருமணம் அல்லது மருத்துவ சிகிச்சை செய்ய முடியாமல் கடைசி நேர அறிவிப்பால் பாதிக்கப்பட்டவர்களும்தான்.

அன்றாடம் பிழைப்பை நடத்தி வயிற்றைக் கழுவும் ஏழைகள் எப்படி நாள் முழுக்க வங்கியின் முன் போய் நிற்க இயலும்?.

அர்ஜுன் சம்பத் அவர்களின் செல்வப்புதல்வர் ஓம்கார் பாலாஜி சொல்லுகிறார்

//“ரெண்டு நாள் கஷ்டப்படுரதால உங்க உயிரு போயிரும்னா தாராளமா செத்துருங்க.. அப்படி ஒரு உயிரு பாரத மண்ணுக்கு தேவையில்லை// என்று சபிக்கிறார்.

இலங்கையில் தமிழர்கள் கொத்துக் கொத்தாக இறந்தபோது கவிஞர் தாமரை ஒட்டு மொத்த இந்தியர்களும் நாசமாக போகட்டும் என்று சாபம் விடுத்தார்.

அதுபோல இப்போது ஓம்கார் பாலாஜி, வங்கி வரிசையில் நின்று புலம்புபவர்களுக்கு “செத்து தொலை” என்று சாபம் விடுக்கிறார்.

வங்கி மேலாளர்கள் “எங்களுக்கு போதிய அளவில் பணம் பட்டுவாடா செய்யப்படவில்லை” என்கிறார்கள். ATM – மெஷினுக்குள் 2000 ரூபாய் பணம் இருப்பில் வைக்க அதற்குரிய அளவில் பெட்டியின் அமைப்பு இல்லை என்கிறார்கள். இதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு தயார் நிலையில் வைத்திருந்தால் இந்த அவல நிலை ஏற்பட்டிருக்காது.

உதாரணத்திற்கு US டாலர் ஒன்றிலிருந்து நூறு டாலர் வரை ஒரே அளவுதான். புதிதாக வெளியிடப்பட்டிருக்கும் 2000 ரூபாய் நோட்டு புழக்கத்திலிருந்த 500 அல்லது 1000 ரூபாய் சைஸில் அச்சடித்திருந்தாலாவது ஒரளவு இந்த நிலையை சமாளித்திருக்கலாம்.

//இதற்காக எத்தனைப் பேரை இப்பணிக்காக ஈடுபடுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டாலும் அதற்காக நான் ஈடுபடுத்துவேன்// என்று இப்போது உறுதியளிக்கும் பிரதமர், அனைத்து வங்கிகளிலும் அதற்கான முன்னேற்பாடுகள்: அதாவது ஆட்கள் வசதி,, போதுமான அளவு பணப்பட்டுவாடா, ATM-ல் 2000 ரூபாய் பணம் எடுக்கக்கூடிய வசதி இவைகள் அனைத்தும் செய்திருக்கக்கூடாதா?

இதிலிருந்து நாம் விளங்கிக் கொள்வது என்னவென்றால் “எடுத்தேன் கவிழ்த்தேன்” என்ற ரீதியில் இத்திட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

ஒரு நாட்டின் பிரதமருக்கு ஆலோசகர்களாக இருப்பவர்களுக்கு இதனால் ஏற்படும் பின்விளைவுகளை அவர்களால் ஊகிக்க முடியவில்லை என்றால் அவர்கள் வெறும் கூழ்முட்டைகள் என்பது புலனாகிறது.

இப்படியெல்லாம் நடக்கும் என்பதை கருத்தில் கொண்டு அதற்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்வது அரசின் கடமையல்லவா..?

பொதுமக்களை இந்த அளவுக்கு அவதிக்குள்ளாக்கி, வியாபாரங்களை முடக்கி, வங்கி அலுவலர்களையும் சிரமத்திற்கு ஆட்படுத்தி, நாட்டையே ஸ்தம்பிக்க வைத்திருக்கும் இச்செயலுக்கு பொதுமக்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தினால் அவர்களை தேச துரோகிகள் என்று சித்தரிப்பது எவ்வகையில் நியாயம்?

மக்கள் படும் அவதிகளுக்கு ரஜினியோ, கமலோ அல்லது சினிமா நட்சத்திரங்களோ நிச்சயமாக நமக்காக கேள்வி எழுப்ப மாட்டார்கள். காரணம் பொங்கி எழும் அவர்களிடம் கறுப்புப்பணம் இருக்கிறது என்ற சந்தேகம் வரும். இரண்டாவது அவர்கள் தேசபக்தர்கள் அல்ல என்று முத்திரையை குத்தி விடுவார்கள். (மன்சூர் அலிகான் போன்று அறிக்கைவிடும் ஒன்றிரண்டு பேர்கள் இதற்கு விதிவிலக்கு)

இப்படியெல்லாம் கேள்வி எழுப்பியதற்கு நானும் “டேஷ்-பக்த்” அல்ல என்று முத்திரை குத்தப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

அப்துல் கையூம்

Add Comment