ராஜ்யசபாவில் மன்மோகனின் முழு பேச்சு

ராஜ்யசபாவில் பிரதமரும் நிதி அமைச்சரும் மிகுந்த கவனத்துடன் மன்மோகன் பேச்சை கேட்டார்கள். பலர் ஆச்சரியமாக பார்த்தார்கள். மன்மோகனின் முழு பேச்சு:

500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்ததை தொடர்ந்து எழுந்துள்ள பிரச்னைகளை இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

கருப்பு பணத்தை கட்டுக்குள் கொண்டு வரவும், கள்ள நோட்டுகள் புழக்கத்துக்கு வருவது அதிகரிக்காமல் தடுக்கவும், பயங்கரவாதிகளுக்கு நிதி கிடைப்பதை கட்டுப்படுத்தவும் இதுதான் வழி என்று பிரதமர் சொல்கிறார்.

அந்த நோக்கங்களோடு எனக்கு எந்த முரண்பாடும் கிடையாது. நான் சுட்டிக் காட்ட விரும்புவது என்ன என்றால், அந்த நோக்கங்களுக்காக நீங்கள் எடுத்த நடவடிக்கை பிரமாண்டமான நிர்வாகக் குளறுபடியில் முடிந்திருக்கிறது என்பதைத்தான். இதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை.

இப்போதைக்கு இந்த நடவடிக்கையால் சில துன்பங்கள் ஏற்படும், பொதுமக்களுக்கு அவதி ஏற்படும் என்றாலும்கூட காலப்போக்கில் இது நாட்டு நலனுக்கு வழி வகுக்கும் என்று சிலர் சொல்கிறார்கள். காலப்போக்கில் என்ற வார்த்தையை கேட்கும்போது எனக்கு (பிரிட்டிஷ் பொருளாதார அறிஞர்) ஜான் கெய்ன்ஸ் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது. ‘காலப்போக்கில் நாமெல்லாம் செத்துப் போவோம்’ என்று சொன்னார்தானே.

ஆகவே, காலப்போக்கில் நீண்ட காலத்தில் என்று பேசிக் கொண்டிருக்காமல், நமது பிரதமர் இரவோடு இரவாக இந்த நாட்டின் மீது தொடுத்த அதிரடியின் விளைவாக இன்று இப்போது சாமானிய மக்கள் படும் துன்பங்களை பாருங்கள் என்கிறேன்.

இந்த நடவடிக்கையின் இறுதி விளைவு என்னவாக இருக்கும் என்று நமக்கு தெரியாது. 50 நாட்கள் காத்திருந்தால் தெரியும் என்று பிரதமர் சொல்கிறார். 50 நாட்கள் என்பது ஒரு நாட்டின் பயணத்தில் பெரிய காலகட்டம் இல்லைதான். ஆனால், ஏழைகளுக்கும் இல்லாதவர்களுக்கும் 50 நாள் சித்ரவதை என்பது பெரிய நாசத்தில் முடியக்கூடும் என்பதை மறந்துவிட கூடாது. ஏற்கனவே 60 65 பேர் உயிரை இழந்திருக்கிறார்கள். அதிகமாக கூட இருக்கலாம்.

துன்பம், சித்ரவதை என்பதோடு இந்த பிரச்னை நின்றுவிட வில்லை. இப்படி திடீரென எடுத்த நடவடிக்கையால் ரூபாய் நோட்டுகள் மீதும் வங்கி அமைப்பின் மீதுமே பொதுமக்களின் நம்பிக்கை சேதப்படும் என்பதை உணர வேண்டும். மக்கள் தங்களுக்கு சொந்தமான பணத்தை வங்கியில் இருந்து எடுக்க முடியாது என்று ஒரு அரசு எவ்வாறு தடுக்க முடியும்? உலகில் எந்த நாட்டிலாவது அப்படி நடந்திருந்தால் அந்த நாட்டின் பெயரை நமது பிரதமர் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். கருப்புப்பண ஒழிப்பு என்ற பெயரால் நடக்கும் செயல்களை கண்டிக்க இந்த ஒரு காரணம் போதும்.

இந்த திட்டத்தை செயல்படுத்திய குளறுபடியான முறையால் நமது நாட்டின் வேளாண்மை வளர்ச்சி தடைபடும். சிறு தொழில்கள் முடங்கும். அமைப்புசாரா துறைகளில் பணியாற்றும் அனைவரையும் இது காயப்படுத்தும். நாட்டின் தேசிய வருமானம் 2 சதவீதம் அவரை சரியக்கூடும். நான் குறைத்து மதிப்பிடுகிறேனே தவிர எதையும் மிகைப்படுத்த வில்லை.

எனவே, பிரதமர் ஒரு ஆக்கபூர்வமான யோசனையுடன் வர வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். திட்டத்தையும் அமல்படுத்த வேண்டும்; அதே சமயம் சாதாரண ஜனங்களுக்கு இப்போது நேர்ந்திருக்கும் எந்த தொல்லையும் ஏற்படக்கூடாது; அதற்கு என்ன வழி என்பதை அவர் ஆராய வேண்டும்.

வங்கியில் போட்ட பணத்தை எப்படி எவ்வளவு எப்போது எடுக்கலாம் என்று தினம் தினம் புதிய விதிகளை அறிவிக்கிறார்கள். இது வங்கி நடைமுறைக்கு நல்லதல்ல. இந்த குழப்பம் பிரதம் அலுவலகம், நிதியமைச்சர் அலுவலகம், ரிசர்வ் பேங்க் ஆகியவற்றின் செயல் திறன் குறித்து சந்தேகிக்க வைக்கிறது. ரிசர்வ் பேங்க் இந்த மாதிரி ஒரு கடுமையான விமர்சனத்துக்கு இலக்கானது குறித்து எனக்கு வருத்தமாக இருக்கிறது. விமர்சனம் என்னவோ சரியானதுதான்.

இதற்கு மேல் இந்த பிரச்னையில் நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. நாட்டிலுள்ல பெரும்பான்மையான மக்கள் படும் கஷ்டங்களை போக்க பிரதமர் புதிய, உருப்படியான வழிகளை கணடரிய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

நாட்டின் தொழிலாளர்களில் 90 சதவீதம் பேர் அமைப்பு சாரா துறைகளில் உழைப்பவர்களாக இருக்கிறார்கள். அவர்களில் 55 சதவீதம் பேர் விவசாய தொழிலில் பிழைக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் சிரமத்துக்கு ஆளாகி இருக்கிறார்கள். கிராம மக்களின் பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்வதில் பெரும் பங்கு வகிக்கும் கூட்டுறவு வங்கிகள் இந்த நடவ்டிக்கையின் விளைவாக செயலற்று போய்விட்டன.

நடப்பதை எல்லாம் பார்க்கும்போது இந்த திட்டத்தை அமல்படுத்திய முறை பிரமாண்டமான நிர்வாக குளறுபடி என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை. உண்மையில் இது திட்டமிட்டு நடத்தப்பட்ட கொள்ளை, சட்டபூர்வமாக நடந்த சூறையாடல் என்றே சொல்ல வேண்டும்.

இத்துடன் என் உரையை நிறைவு செய்கிறேன். இவர்கள் என்ன செய்கிறார்கள், அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று கவனித்து குற்றம் கண்டுபிடிக்கும் நோக்கம் எனக்கு கிடையாது. குறைந்தபட்சம் இப்போதாவது நமது பிரதமர் இதில் முழு கவனம் செலுத்தி, துன்பப்படும் இந்த நாட்டு மக்களுக்கு விரைவாக நிவாரணம் கிடைக்க உருப்படியான வழிகளை கண்டுபிடிக்க நமக்கு உதவுவார் என்று மனப்பூர்வமாக நம்புகிறேன்.

Add Comment