வேண்டும் ஒரு மக்கள் தொடர்பு துறை!

“குடி”மகன்களைப் பெருக்கி, இலவசத்துக்காக கையேந்தி அலையும் சோம்பேறிகளை உருவாக்கி தமிழகத்தைக் கடன் எனும் கடலில் தள்ளி படுகொலை செய்த சுயநல குடும்ப ஆட்சியின் ஐந்தாண்டு காலம் நிறைவு பெறுகிறது.

இன்னும் வரும் ஆண்டில் அடுத்த ஆட்சிக் கட்டில் ஏறினால் என்ன செய்ய போகிறோம் என்பதையும் சொல்லிவிட்டார்கள். அதற்குப் பணம் எங்கிருந்து வரும் என்று மக்கள் கேட்கவில்லையே ஏன்? மக்களிடம் தொலைநோக்கு சிந்தனை இல்லை என்பதுதான் காரணம்!

நலத்திட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டால், அந்தத் திட்டம் மக்களைச் சென்றடையும் போது, மக்கள் அத்திட்டத்தால் நலன் பெற்றார்களா? அல்லது தகுதி இருந்தும் ஏமாற்றப்பட்டார்களா? இன்னும் அலைக்கழிக்கப்பட்ட நிலையில் அத்திட்டத்தைப் பெற்றார்களா? என்பதை மக்களே அறிவார்கள். எனவே அத்திட்டத்தின் வெற்றி தோல்வியை மக்களே நிர்ணயம் செய்ய தகுதி பெற்றவர்கள்.

ஆனால் ஆட்சியாளர்கள், “நாங்கள் என்னவெல்லாம் செய்தோம் தெரியுமா?” என்று தனது சொந்த பணத்தைச் செலவு செய்தது போல பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. கேட்டுக்கொண்டிருக்கும் மக்களைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது.

ஒரு துறையை இரண்டாக பிரித்து இரண்டு அமைச்சர்களை நியமித்தால் போதாது; இரண்டு பேர் என்ன செய்தார்கள் என்பதே முக்கியம்.

இன்றைய நிலையில் என்னுடைய கருத்து, முதல்வர் கருணாநிதிக்கு ஒரு வருத்தம் இருக்கிறது! என்ன தெரியுமா? ஆண்டு முடிந்த ஆட்சியில் திரைப்பட வளர்ச்சி துறை ஒன்றை உருவாக்கி அதற்கு அமைச்சராக ஒரு நடிகரைப் போடவில்லையே என்பதுதான். மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அதுவும் நடக்கும்.

மக்கள் பிரதிநிதியாக ஒரு செய்தியாளர் முதல்வரிடம், “வெங்காயம் விலை ஏறுகிறதே?” என்று கேட்க, அதற்கு அவர், “பெரியாரிடம் கேளுங்கள்” என்று பொறுப்பற்ற பதிலைச் சொன்னார்! அந்தச் செய்தியாளர் வாயாடைத்து போனார்.

அந்த அப்பாவி செய்தியாளருக்காக முதல்வரிடம் நான் கேட்கிறேன்: “யார் அந்தப் பெரியார்? எனக்குத் தெரிந்தவரை மண்ணுக்குள் சென்ற பெரியார் ராமசாமி, முதுகெலும்பில்லாத பிரதமர் என்று ஜெயலலிதா புகழ்ந்து(!) கூறிய மன்மோகன்சிங், மூன்றாவதாக தமிழகத்தை ஆளும் கருணாநிதி! ஆக, செய்தியாளர் சரியான நபரிடம்தானே கேட்டார்? பதில் சொல்லுங்கள். இல்லையென்றால் வெங்காய விலையைக் கட்டு படுத்த இயலவில்லை என்று துணிந்து ஒப்புக்கொள்ளுங்கள். அதை வரவேற்கிறேன்.”

தி.மு.க வை இவ்வளவு தாக்கியதால் நான் அ.தி.மு.க. வை ஆதரிக்கின்றேனா? என்று நீங்கள் கேட்கலாம். நிச்சயமாக இல்லை!

ஐந்தாண்டு காலம் தி.மு.க. ஆட்சியைப் பார்த்தேன். அதனால் அதை அதிகம் விமர்சிக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. நான் எந்தக் Buy Levitra கட்சியையும் ஆதரிக்கவில்லை. அதே நேரத்தில் புதிய ஆட்சியாளர்களுக்கு ஒரே ஒரு கோரிக்கையை மட்டும் வைக்கிறேன்:

அதுதான் மக்கள் தொடர்பு துறை என்ற தொலை நோக்கு திட்டம். இப்படி ஒரு துறையை நிறுவி அதற்கு நிர்வாகவியல் படித்த ஒருவரை அமைச்சராக்க வேண்டும். இந்தத் துறையின் நோக்கம் மக்கள் குறை தீர்ப்பு என்பதுதான். இந்தத் துறைக்கு அனைத்து துறையையும் கட்டு படுத்தும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும். எந்தப் பிரச்சனையையும், எந்த நேரமும் மக்கள் இங்கு தெரிவிக்கலாம் என்ற சுதந்திரம் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

தமிழகமெங்கும் இந்தத் துறையின் பிரதிநிதியாக மாவட்ட ஆட்சியர்களையே நியமிக்க வேண்டும் என்பதோடு, புகாரைப் பெற்ற ஐந்து வேலை நாட்களில் மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்ற உத்திரவாதத்தையும் கொடுக்கவேண்டும்.

இந்த முறை தற்போது மாவட்ட ஆட்சியர் மூலமாக நடைமுறையில் உள்ளதே எனலாம்! உண்மைதான். ஆனால், அது போலியான ஒரு கண்துடைப்பு நிர்வாகமாகவே உள்ளது. காரணம், எனது சொந்த அனுபவத்திலேயே, ஒரு பிரச்சனைக்காக இரண்டு முறை மனு கொடுத்து, அலையாய் அலைந்த பின்னர், அந்தக் கோரிக்கை அறுபது நாட்களுக்குப் பிறகு தீர்க்கப்பட்டது.

இப்படி மனுவைத் தூக்கி சாமானியன் அலைந்தால் அவனது செருப்பும் தேயும்; ஆயுளும் தேயும். சரி ஆன்லைனில்(இணையம் வழி) புகார் பதிவு செய்யலாம் என்றால், புகார் பதிவு எண் கிடைப்பதில்லை! அப்படியென்றால் என்னுடைய புகார் ஏற்றுகொள்ளபட்டதா? இல்லையா? என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது.

எனவே தான் நான் மேற்கூறிய திட்டம் வேண்டும் என்கிறேன். இத்துறையால் லஞ்சம் ஒழியும்! அதிகார துஷ்பிரயோகம் நீங்கும்! அரசு அதிகாரிகள் சுயநலமில்லாமல் வேலை செய்வார்கள். தமிழகம் தன்னிறைவடையும்; அன்று மக்களே இலவசங்களை வெறுப்பார்கள்!

வளமான தமிழகம் காண்போம்; தேசமே தமிழகத்தைத் திரும்பிப் பார்க்கும்!!!

– கலீல், வீரசோழன்.

Add Comment