டெங்கு காய்ச்சலுக்கு காரணமே நாம் தான்

டெங்கு காய்ச்சலுக்கு காரணமே நாம் தான். நாம் சுகாதாரம் பேணவில்லை. நம்மிடம் ஒழுக்கமில்லை. நம் வீட்டின் கழிவு நீக்கம் அனுமதிக்கப்பட்ட முறையில் இல்லை. முக்கியமாக நீங்கள் முகநூலிலும் சமூக வலைத்தளங்களிலும் பொங்கி என்ன செய்ய முடியும்? நம்மிடம் தானே குறைகள் உள்ளன.

மேற்கண்ட இந்த வரிகளின் மீது மனசாட்சியுள்ள யாரும் அதில் உண்மை உள்ளதாக ஒப்புக்கொள்ள முடியாது.

நகரமயமாக்கலின் நவநாகரீக கட்டுமான அடிப்படை இன்று சென்றடையாத கிராமங்களே இல்லை. உலகம் முழுமையும் இடங்களை ஆக்கிரமித்து சுகாதாரக் குறைவை உண்டாக்கும் வீடுகளும் வீதிகளும் கட்டப்பட்டு காணப்படுகின்றன.

பக்கத்து ஊரு தென்காசி புளியங்குடி போலதானே நம்மூரும், அங்கு போலத் தானே இங்கும் வீடுகளைக் கட்டி நகராட்சியில் மேற்கொள்ளப்படும் சுகாதார நடவடிக்கைகளை உள்வாங்கி வாழ்ந்து வருகிறோம். ஆயினும் இங்கு மட்டும் டெங்கு தங்கி விட என்ன காரணம்?
நமக்குள் நாமே ஒருவரை ஒருவர் குறை சொல்வதே நமது வேதனைக்கான தீர்வை நோக்கிய நம் தேடலை மட்டுப்படுத்த தானே பயன்படும்.

தண்ணியில்லை என்றாலும் சுகாதார சீர்கேடு என்றாலும் நமக்கான நம் தேர்ந்தெடுத்த மிகப்பெரிய சேவகரான நம் ஊர் சட்டமன்ற உறுப்பினரை தான் நாம் நாட வேண்டும். அவர் தான் தனக்கான பதவியின் அங்கீகாரம் கொண்டு நகரம் தாண்டி மாவட்ட ஆட்சித் தலைவர் வரை சென்று நமதூரின் இன்னல் தீர்க்க போராடுவார்.

சர்வ நிச்சயமாக இது அரசாங்கத்தை தவிர வேறு எவராலும் ஒழிக்க முடியாது. பூச்சியியல் நிபுணர் அடங்கிய முன்னேறிய சுகாதார ஊழியரடங்கிய குழுக்கள் நமதூருக்கு வந்து முகாமிட்டு அதனை முழுமையாக அழித்தொழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கேன் தண்ணி வாங்கிக் குடிச்சாலோ ஜன்னல்களை வலைதட்டி அடித்து நம்மை வீட்டிற்குள் சிறை வைத்துக் கொண்டாலோ தீர்ந்து விடுமா இன்னல்?
ஒரு போதும் தீராது.

முக்கியமா MLA போராடனும். அவர் சொல்லியும் போராடியும் அரசு நிர்வாகம் கேட்கலைன்னா சர்கார் பஸ்ஸை மறிக்க மக்களுடன் சாலையில் அவர் அமரனும். சுதர்சனம் ஆஸ்பத்திரியில் உள்ள வசதிகளை அரசு செலவில் ஊரில் ஏற்படுத்தி நோயாளிகளை செலவில்லாமல் குணமாக்கணும். அடுத்த சாவு விழுறதுக்குள்ள அவர் அரசாங்கத்தை அணுகி அலற வைக்கணும்…

அப்துல்லாஹ்

Add Comment