டொனால்டு டிரம்ப் உத்தரவை நீதிமன்றம் நிறுத்தியது

அமெரிக்க ஜனாதிபதியாக கடந்த 20–ந் தேதி பதவி ஏற்ற நாள் முதல் டொனால்டு டிரம்ப் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

மெக்சிகோவில் இருந்து வந்து சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறுவோரை தடுக்க 2 ஆயிரம் மைல் நீளத்துக்கு எல்லையில் தடுப்புச்சுவர் எழுப்ப உத்தரவிட்டுள்ளார். அதற்கு மெக்சிகோ பணம் தர மறுப்பதால், அந்த நாட்டில் இருந்து இறக்குமதியாகிற பொருட்கள் மீது 20 சதவீத கூடுதல் வரி விதிக்க முடிவு எடுத்துள்ளார். அடுத்த அதிரடி நடவடிக்கையாக எந்தவொரு நாட்டில் இருந்தும் அகதிகள் அமெரிக்காவுக்குள் வர 4 மாத கால தடை உத்தரவை நேற்றுமுன்தினம் பிறப்பித்திருக்கிறார்.

உள்நாட்டுப்போரில் சின்னாபின்னமாகி விட்ட சிரியாவில் இருந்து அகதிகள் அமெரிக்காவுக்கு வர காலவரையற்ற தடை போட்டுள்ளார். அதாவது, அடுத்த அறிவிப்பு வரும் வரையில் சிரியா அகதிகள், அமெரிக்காவில் நுழைய முடியாது. அடுத்து, ஈராக், சிரியா, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் ஆகிய 7 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவதை 3 மாதங்களுக்கு நிறுத்தி வைத்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இந்த நாடுகளைப் பொறுத்தமட்டில் தூதரக ரீதியிலான ‘ராஜ்ய விசா’ மட்டும் தொடர்ந்து வழங்கப்படும். மற்றபடி தனி நபர்களுக்கு விசா வழங்கப்படாது.

இதுகுறித்து டிரம்ப் கூறும்போது, ‘‘மத அடிப்படையிலான பயங்கரவாதிகள் அமெரிக்காவில் நுழைய விடாமல் தடுப்பதே இதன் நோக்கம்’’ என்று குறிப்பிட்டார்.

இதற்கிடையே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள தடை உத்தரவுகளை உடனடியாக அமல்படுத்தும் நடவடிக்கையில் அந்நாட்டின் பாதுகாப்புத்துறை ஈடுபட்டது.

நீதிமன்றம் நிறுத்தியது

டொனால்டு டிரம்பின் அதிரடி உத்தரவுகள் அமெரிக்க மக்கள், உலக நாடுகள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டொனால்டு டிரம்ப் தடை விதித்த 7 நாட்களில் இருந்து முறையாக விசா பெற்று அமெரிக்காவிற்கு பிரவேசிக்க இருந்த பயணிகளையும் பெரிதும் பாதித்தது. இதற்கிடையே அமெரிக்காவில் டிரம்ப் உத்தரவிற்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்த தொடங்கினர். மேற்கு கூறிய நாடுகளில் இருந்து வந்த பயணிகள் விமான நிலையங்களில் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவமும் அரங்கேறியது. இவ்வாறு சுமார் 100-க்கும் மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரியவந்து உள்ளது.

டிரம்பின் அதிரடி உத்தரவு தொடர்பான விவகாரம் அமெரிக்காவின் நியூயார்க் நகரின் கிழக்கு மாவட்ட நீதிமன்றம் முன்னதாக சென்றது. இது தொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதி அன் டொனேலே டொனால்டு டிரம்பின் தடை உத்தரவை நிறுத்தி உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து அமெரிக்காவில் பயணிகள் தரையிறங்க அனுமதி கிடைத்து உள்ளது. அமெரிக்க விமான நிலையங்களில் சிக்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் மற்றும் அகதிகளை வெளியேற்றும் பணியை நிறுத்துமாறு அமெரிக்க அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

dailythanthi

Add Comment