எரிந்த மசூதி.. ஒரே நாளில் 6 கோடி திரட்டி ட்ரம்புக்கு பதிலடி கொடுத்த அமெரிக்கா!

இஸ்லாமிய மக்களுக்கு எதிராக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நடவடிக்கை எடுத்து வரும் வேளையில், எரிந்து போன மசூதியை சீரமைக்க ரூ. 6 கோடி அளவிற்கு நன்கொடை அளித்து டிரம்புக்கு அமெரிக்க மக்கள் பதிலடி தந்துள்ளனர்.

அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்றுள்ள டொனால்ட்   ட்ரம்ப், இஸ்லாமிய நாடுகளுக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இஸ்லாமியர் அதிகம் வசிக்கும் 7 நாடுகளைச் சேர்ந்த மக்கள், அமெரிக்காவுக்குள் நுழைய 90 நாட்கள் தடை விதித்துள்ளார். இதற்கிடையே அமெரிக்காவில்  ட்ரம்பின் நடவடிக்கைக்கு எதிராக பலத்த போராட்டங்கள் நடந்துவருகிறது. எதிர்ப்புக் கோஷங்களை அமெரிக்க மக்கள் முழங்கிவருகின்றனர். அமெரிக்கர்கள் பலர் இஸ்லாமிய மக்களுக்கு நேசக்கரம் நீட்டியுள்ளனர். “எந்த வேறுபாடுமின்றி எங்கள் நாட்டில் வாழலாம். நாங்கள் உங்களுக்கு எந்தக் காலத்திலும் உதவியாக இருப்போம். உங்கள் மத வழக்கத்தை எங்கள் நாட்டில் பின்பற்றலாம். உங்களுக்கு எந்தப் பிரச்னை என்றாலும் எங்கள் வீட்டின் கதவைத் தட்டலாம்” என இணையங்களிலும்  இஸ்லாமிய மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அதனை உறுதிப்படுத்தும் வகையில், எரிந்துபோன மசூதி ஒன்றை புனரமைக்க, ஒரே நாளில் 7 லட்சத்து 80 ஆயிரம் டாலர்கள் நிதி அளித்து,  ட்ரம்புக்கு அதிர்ச்சி அளித்துள்ளனர். அமெரிக்காவின் ஹீஸ்டன் நகரில் இருந்து 185 கிலோ மீட்டர் தொலைவில் விக்டோரியா சிட்டி என்ற நகரம் உள்ளது. இங்குள்ள இஸ்லாமிக் சென்டரில் கடந்த சனிக்கிழமை மசூதியில் மிகப் பெரிய தீ விபத்து ஏற்பட்டது. தீ பிடித்தபோது மசூதியில் யாரும் இல்லை. இதனால் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. தீயணைப்புத்துறையினர் கடுமையாகப் போராடி தீயை அணைத்தனர்.

மசூதி எரிந்த பின்னர்தான்  ட்ரம்பின் நடவடிக்கைகள் இஸ்லாமிய மக்களுக்கு எதிராகப் பாய்ந்தது. இதையடுத்து, அமெரிக்க மக்கள்  ட்ரம்புக்கு எதிரான  போராட்டத்தைக் கையில் எடுத்தனர். அதில் ஒரு பகுதியாக, விக்டோரியாவில் எரிந்துபோன மசூதியைச் சீரமைக்க ஆன்லைனில் நிதி திரட்ட முடிவெடுக்கப்பட்டது. மசூதி எரிந்த அன்றே gofundme.com என்ற தளத்தில் ஆன்லைனில் நிதி திரட்டுவதாக அறிவிக்கப்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 10.45 மணி வரை 7 லட்சத்து 80 ஆயிரம் டாலர்கள் திரண்டன. கிட்டத்தட்ட ஒரே நாளில் அது, இந்திய மதிப்பில் 6 கோடி ரூபாய். ஒரே நாளில் 8 லட்சத்து 50 ஆயிரம் டாலர்கள் நிதி திரட்ட வேண்டுமென்பது இலக்காக இருந்தது.

இதையடுத்து, அந்த மசூதியில் நேற்று எந்த மத வேறுபாடுமின்றி அனைத்து மக்களும் தொழுகை நடத்தத் திரண்டனர். பல்வேறு மதத்தின் தலைவர்களும் இந்தத் தொழுகை நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இஸ்லாமிய மக்களுக்கு முழு மனதுடன் ஆதரவு இருப்பதைக் காட்டும் வகையில், இந்த சிறப்புத் தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. விக்டோரியா நகரில் உள்ள 4 ஆலயங்கள், மசூதியைச் சீரமைக்கும் வரையில் தங்கள் ஆலயத்தில் இஸ்லாமிய மக்கள் தொழுகையில் ஈடுபடலாம் என அறிவித்துள்ளன. அது தவிர, பல்வேறு ஜெபக் கூடங்களும்கூட இஸ்லாமிய மக்களுக்கு தங்களுடைய கட்டடங்களைத் தருவதாகக் கூறியுள்ளன.

ஒரே நாளில் இவ்வளவு நிதி திரண்டதால் இஸ்லாமிக் சென்டர் மையத் தலைவர் ஷாகீத் ஹாஷ்மியை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது. ” கடந்த 2000-ம் ஆண்டு இந்த மசூதி கட்டி முடிக்கப்பட்டது. அமெரிக்க மக்கள் காட்டும் இந்த நேசத்துக்கு என்ன கைமாறு செய்யப்போகிறோம் என்று தெரியவில்லை. இந்த தருணத்தில் எங்களை அரவணைப்பது, அன்பான வார்த்தைகளால் எங்களுக்கு ஆறுதல் தருவது என்பது மட்டுமின்றி, எதிர்பார்க்காத வகையில் நிதியைக் கொட்டித் தந்துள்ளது,  அமெரிக்க மக்களின்  நல்ல மதைக் காட்டுகிறது. தீ விபத்து குறித்து விசாரணை நடந்துவருகிறது. இதனை வைத்து யாரும் அரசியல் செய்ய வேண்டாம். அமெரிக்கர்களாகத் திரண்டு நிற்போம்” என்றார்.

மதங்களைத் தாண்டியும் உயர்ந்து நிற்கும் மனிதம்!

-எம்.குமரேசன்,vikatan

Add Comment