இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் இ.அஹ்மது சாஹிப் மரணம்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் முன்னாள் மத்திய அமைச்சர் அல்ஹாஜ் இ.அஹ்மது சாஹிப் அவர்கள் இன்று (01/02/2017) அதிகாலை மரணம் அடைந்த செய்தி நமக்கு அதிர்ச்சியளிக்கின்றது இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.தனது இளம் வயதுமுதல் மரணம் வரையிலுமே தொடர் சமுதாய சேவையிலே தன்னை முழுமையாக அர்பணித்து கொண்டவர்கள் சமுதாய முன்னேற்றத்திற்கு அதிகம் உழைத்தவர்கள்.

ஐந்து முறை கேரள சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இ. அஹ்மது கேரளா மாநில தொழில் துறை அமைச்சராகவும் சேவையாற்றியுள்ளார்.
ஏழு முறை நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இ அஹ்மது 2004ல் டாக்டர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமைச்சரவையில் வெளியுறவுத் துறை இணை அமைச்சராக பணியாற்றினார்.
சிறிது காலம் ரயில் துறை மற்றும் மனிதவள மேம்பாட்டு துறையின் இணை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
1991 முதல் 2014 வரை ஐ.நா அவையில் 10 முறை இந்தியாவின் பிரதிநிதியாக பங்குக் பெற்றவர். இ. அஹ்மது . முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வளைகுடா (ஜிசிசி) நாடுகளுக்கு இவரை தனது சிறப்பு பிரதிநிதியாக அனுப்பி வைத்தார்.
இந்த வாய்ப்புகளையெல்லாம் சிறப்பான முறையில் பயன்படுத்தி பல்வேறு உலக நாடுகள் குறிப்பாக அரபு நாடுகளுக்கும் இந்தியாவிற்குமிடையான உறவுகள் மேம்பட இவர் திறம்பட பாடுபட்டவர் என்ற பெருமை இவருக்கு உண்டு.
மறைந்த குலாம் முஹம்மது பனாத்வாலா அவர்களுக்கு பிறகு இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவராக சிறப்பாக பணியாற்றி சிறுபான்மை மக்களின் நலனுக்காக சீரிய முறையில் பணியாற்றியவர் இ.அஹமது.

Add Comment