சட்டமன்றத்தில் பேச அனுமதிக்காததால் அபூபக்கர் MLA வெளிநடப்பு

நெல்லை மாவட்டம் சேர்வலாறு அணையில் அதிகாரிகளின் அலட்சியப்போக்கால் ஒரே நாளில் 14 அடி தண்ணீர் வீணடிப்பு
சட்டமன்றத்தில் பேச அனுமதிக்காததால் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ. வெளிநடப்பு

தமிழக சட்டமன்றத்தில் இன்று (03.07.2017) கேள்வி இல்லா கேள்வி நேரத்தில் ஒரு முக்கிய கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டமன்ற கட்சி தலைவர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் சபாநாயகரிடம் அனுமதி கோரினார். இதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்ததால், இதனை கண்டித்து கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ. வெளிநடப்பு செய்தார்.

பின்பு செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
இன்று நெல்லை மாவட்ட மக்களின் ஒரு முக்கிய பிரச்சினை குறித்து தமிழக சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு எனக்கு அனுமதி மறுத்ததால் நான் வெளிநடப்பு செய்துள்ளேன்.

திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையில் அணைகளுக்கு கூடுதலாக தண்ணீர் வந்து கொண்டிருக்கின்றது. இதில் பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைகளுக்கு வந்த தண்ணீரில் பெரும்பகுதி அப்படியே ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 14 அடி தண்ணீர் குறைந்துள்ளது.

சேர்வலாறு அணையில் மிகவும் காலதாமதமாக பராமரிப்பு பணி துவங்கியதினாலேயே தண்ணீர் வீணடிக்கப்பட்டுள்ளதற்கான காரணமாகும். இந்த ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் கடும் வறட்சியில் சிக்கி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வரும் நிலையில் அதிகாரிகளின் கவனக்குறைவால் குடிதண்ணீர் வீணாக்கப்பட்டுள்ளதை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு வந்து விவசாயிகளின் வேதனையை இன்று சட்டமன்றத்தில் தெரிவிக்க விரும்புகிறேன். அனுமதி மறுக்கப்பட்டதால் நான் வெளிநடப்பு செய்தேன்.
இவ்வாறு கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

Add Comment