கடையநல்லூர் சட்டமன்றக் குரல்

கடையநல்லூர் சட்டமன்றக் குரல்
கடையநல்லூர், பண்பொழிசார் பதிவாளர் அலுவலகங்கள் சொந்த கட்டிடத்தில் புதிய பொழியுடன் உருவாக ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்
சட்டமன்றத்தில் இ.யூ மு லீக் சட்டமன்ற கட்சித் தலைவர் கே.ஏ.எம்.மு அபூ கேள்விக்கு அமைச்சர் வீரமணி பதில்

தமிழக சட்டமன்றத்தில் (11.07.2017) கேள்வி நேரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டமன்ற கட்சித் தலைவர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் பேசியதாவது

கடையநல்லூர் தொகுதி கடையநல்லூரில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்ட அரசு முன் வருமா? ஆம் எனில் எப்போது என மாண்புமிகு பேரவைத் தலைவர் வாயிலாக அமைச்சர் அவர்களிடம் அறிய விரும்புகின்றேன்.

கே.சி.வீரமணி வணிக வரித்துறை அமைச்சர்:

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே.

(அ) மற்றும் (ஆ) தென்காசி பதிவு மாவட்டம் கடையநல்லூர் சார் பதிவாளர் அலுவலகம் தற்போது அரசுக் கட்டடத்தில் இயங்கி வருகிறது. இக்கட்டடம் மிகவும் பழமை வாய்ந்ததாக இருப்பின் அதனை ஆய்வு செய்து புதிய கட்டடம் கட்டுவதற்கு அரசு முன் வரும் என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் வாயிலாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் :

மாண்புமிகு உறுப்பினர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர்

கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் :

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

கடையநல்லூர் சார் பதிவாளர் அலுவலகம் பிரிட்டிஷ் சார் ஆட்சியிலே 1890 ஆம் ஆண்டு கிட்டத்தட்ட 128 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். அந்த சார் பதிவாளர் அலுவலகத்தில் வருடத்திற்கு சராசரியாக 720 கோடி ரூபாய் அளவிற்கு வருமானம் வருவதாகவும் தகவல் தெரிவிக்கின்றனர். தற்போது அது மிகவும் பழுதடைந்த நிலையிலே அங்கேயிருக்கக் கூடிய மரங்களெல்லாம் படர்ந்த நிலையில் பறவைகளெல்லாம் உள்ளே சென்று அங்கே ரிக்கார்டு ரூமில் இருக்கின்ற ஆவணங்களை எல்லாம் அழிக்கக்கூடிய அளவிற்கு இருக்கின்றது. சுகாதாரக்கேடும் இருக்கின்றது. இந்த ஆவணங்களைப் பாதுகாக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கின்றது. அதைப் போல தரைத்தளம் முழுமையாக நீருற்று அதிகமாக இருப்பதன் காரணமாக அங்கே அமர முடியாத அளவிற்கு மிகவும் பழுதடைந்த நிலையிலே இருக்கின்றது. எந்த வசதியும் இல்லாமல் இருக்கை வசதிகள் இல்லாமல் சார் பதிவாளர் அவர்கள் இருக்கைக் கூட மிகவும் நெருக்கடியான சூழ்நிலையிலே கணிணிகளை எல்லாம் வைக்க முடியாத அளவிற்கு இருக்கின்றது. வாகனங்கள் நிறுத்துவதற்குண்டான இடங்களும் இல்லாத காரணத்தினாலே அதை முழுமையாக ஒரு நல்ல கட்டடமாக மாடிக் கட்டடமாகக் கட்டினால் அனைத்து வசதிகளையும் அங்கே செய்ய முடியும் எனவே மிகவும் பழமையான 128 வருடங்களான அந்தக் கட்டடத்தை முழுமையாகப் புரன மைத்து இந்த அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனத் தங்கள் வாயிலாக
மாண்புமிகு அமைச்சர் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்

மாண்புமிகு பேரவைத் தலைவர் :

மாண்புமிகு வணிக வரித்துறை அமைச்சர்

மாண்புமிகு கே.சி வீரமணி :

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

கடையநல்லூர் சார் பதிவாளர் அலுவலகமானது கடந்த 2016- 2017 ஆம் ஆண்டிலே கிட்டதட்ட 4500 பதிவுகளையும், 1 கோடியே 75 லட்சம் வருவாயையும் ஈட்டித் தந்திருக்கக் கூடிய அதிக வருவாயை ஈட்டித்தரக் கூடிய சார் பதிவாளர் அலுவலக மாக இருக்கின்ற காரணத்தினால் அதற்கு முன்னுரிமை அளிக்கப்படும். அது பழைய கட்டடம் என்றும், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது என்றும், அங்கே பல்வேறு குறைபாடுகள் இருக்கின்றன என்றும் உறுப்பினர் கூறுகிறார். அது Traditional building ஆக இருந்தால் அக் கட்டத்தின் பழுதினை நீக்கி சீர் செய்வதற்கு அரசு முயற்சி எடுக்கும். அப்படி அது சரியாக அமையாத பட்சத்தில் புதிய கட்டடத்தைக் கட்டுவதற்கு அரசு முன் வரும் என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் வாயிலாக உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்

மாண்புமிகு பேரவைத் தலைவர் :

மாண்புமிகு உறுப்பினர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர்

கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் :

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

முன்னுரிமை அளிக்கப்படும் என்று சொல்லியிருக்கின்றார்கள் உடனடியாக அந்தக் கட்டத்தை புரணமைக்ககூடிய பணிகளை இந்த அரசு செய்ய வேண்டும்.

அதே போல எனது கடையநல்லூர் தொகுதிக்குட்பட்ட பண்பொழிசார் பதிவாளர் அலுவலகம் தற்போது வாடகைக் கட்டடத்திலே இயங்கி வருகின்றது வெளிநாட்டிலே வாழக்கூடிய ஒரு பொது நல ஆர்வலர் ஜமால் முகைதீன் என்பவர் தென்காசி பிரதான சாலையில் பெட்ரோல் பங்க் அருகில் இருக்கக் கூடிய அவருடைய சொந்தமான 20 சென்ட் நிலத்தை தானமாக அர்ப்பணம் செய்துள்ளார். அர்ப்பணம் செய்து இரண்டு வருடங்களாகியும் உரிய உத்தரவு பிறப்பிக்காததன் காரணமாக அந்த வாடகைக் கட்டடத்திலேயே இயங்கி வருகின்றது அதையும் சொந்தக் கட்டடத்திற்கு மாற்றியமைக்கக் கூடிய ஒரு நடவடிக்கையை பண்பொழிசார் பதிவாளர் அலுவலகத்தை சொந்தக் கட்டடத்தில் இயங்குவதற்குண்டான நடவடிக்கையை மாண்புமிகு அமைச்சர் எடுக்க வேண்டுமென்று தங்கள் வாயிலாக நான் கேட்க விரும்புகிறேன்.

மாண்புமிகு கே.சி.வீரமணி :

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

பண்பொழிசார் பதிவாளர் அலுவலகமானது புதிய கட்டடம் கட்டுவதற்கு இடம் வழங்கப்பட்டிருக்கின்றது என்பதை இங்கே தெரிவித்திருக்கின்றார்கள் அங்கே பத்திர பதிவு எவ்வளவு நடைபெறுகிறது என்பதை அறிந்து அதற்கு எந்த அளவிலே உரிமைகள் வழங்கப்படும் என்பதை ஆய்ந்து அதற்கு தேவையான புதிய கட்டடம் கட்டுவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்பதை தங்களின் வாயிலாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்

Add Comment