வெளிநாட்டு பயணங்களில் மறக்க முடியாத விமான நிலையம்

விமான நிலையம்..

மனித உணர்வுகளின் பிரிக்க முடியாத அன்பின்,வேதனையின் வெளிப்பாடுகளின் அடையாளங்களாய் மனதில் என்றென்றும் நிலைத்திருக்கும், திருவனந்தபுர சர்வதேச விமானநிலையத்திற்கு வாழ்க்கையில் ஒருமுறையாவது சென்று இருக்கின்றீர்களா…?

எப்பொழுது சென்றாலும் அது ஒரு வினோதமான உலகமாகவே காட்சி தரும்.

அங்கே
இன்னும் சிறிது நேரத்தில் தனது
பெற்றோரை,
குழந்தைகளை,
மனைவியரை,
நண்பர்களை,
சகோதரர்களை,
உறவுகளைப் பிரிந்து நீண்ட தொலைவுக்குச் செல்ல
வலி நிரம்பிய கண்களில்
வழியும் கண்ணீரை யாருக்கும் தெரியாமல் கைக்குட்டையைக் கொண்டு மறைத்துக்கொண்டு
கண்கள் நிறைய ஏக்கத்தோடு ,
பிரிவு தரும் வலியை மறைத்துச் செயற்கையாகச் சிரித்துக்கொண்டு
கை அசைத்தபடி
மனமேயில்லாமல் பிரிந்து செல்லும் மனிதர்களை பார்த்திருக்கின்றீர்களா…?

விமான நிலைய
வெளி வராண்டா காரிடரில்
இரும்புக் கம்பிகளை பிடித்துக் கொண்டு
கிடைக்கும் இடைவெளிகளில் எல்லாம்
கண்கள் நிறைய ஆனந்த எதிர்ப்பார்ப்புகளோடு
அங்குமிங்கும் அலைந்தபடி,
பார்வைகளால் அளந்தபடி
தன் அப்பாவையோ,
சகோதரனையோ,
கணவனையோ,
எட்டி எட்டிப் பார்த்தபடி
தங்கள்
அன்பைச் பகிரக் காத்திருக்கும் அந்த விமான நிலையத்தை விட்டு வெளியே வரும் வெளிநாட்டு பயணியின் சொந்த, பந்தங்களை கவனித்திருக்கின்றீர்களா…?

நீண்ட காலம் கழித்து உறவுகளைச் சந்திக்கும் அளவில்லா ஆனந்தத்தோடும்,
முதன்முறையாக தன் குழந்தையின் முகம் காணும் ஏக்கத்தோடும்,
தனது பிறந்த மண்ணைப் பார்க்கப் போகும் மட்டற்ற மகிழ்ச்சியோடும், சொந்த மண்ணின் சுதந்திரக் காற்றை சுவாசித்தபடி, லக்கேஜ் நிரம்பிய டிராலி்யோடு வெளியே வரும் மனிதர்களின் கண்களை கூர்ந்து கவனித்திருக்கின்றீர்களா…?

விடைபெறும் போது
மகளுக்கோ…
மகனுக்கோ…
மனைவிக்கோ…
உறவுகளுக்கோ…
கடைசியாகக் கொடுக்கப்படும் முத்தம் தான் எத்தனை வலி மிகுந்தது என்பதை உணர்ந்திருக்கின்றீர்களா…?

சர்வதேச விமான நிலையங்கள் எப்போதுமே மனித உணர்வுகளின் கலவையாகவே காட்சியளிக்கும்.

கடந்த வருடப் பதிவிலிருந்து..

Mohd halid

Add Comment