விடுதலை(சிறுகதை) -முடவன் குட்டி

சலூனுக்குப் போய் ஒன்பது மாதங்கள் ஆகிவிட்டன. முடி வெட்டிக் கொள்ள வேண்டும்: மனைவி தினமும் தொண தொணக்கிறாள். ஆபிஸில் ராவ், ‘ஏ முண்டம்..இது என்ன ஆபிஸா.. சந்தை மடமா.. ? ஒழுங்கா ஹேர் பண்ணிட்டு லட்சணமா வா.. திருப்பியும் மொட்டைபோட்டுட்டு வந்தியோ கொண்ணுடுவேன் ‘-னு கத்துகிறார். நான் வேலை பார்க்கும் கம்பெனியில், ராவ் சேல்ஸ் மானேஜர். ஆபிசில், நாலு பெண்கள் மத்தியில் சத்தம் போட்டு ரகளை பண்ணிவிட்டார்.

அது என்னவோ, சலூனுக்குப்போய் ‘கிராப் ‘ வெட்டிக் கொள்வதை நினைத்தாலே மனம் பதறுகிறது. ஏன், எதற்காக என்ற காரணம் தெரியாத பயம். பதட்டமும், பொறியில் மாட்டிக் கொண்ட திணறலும் மனதைக்கவ்வ ’அடுத்த வாரம் முடிவெட்டிக் கொண்டால் போயிற்று’ – என, ‘டக்’- கென ஒத்தி போட்டு விடுகிறேன். அடுத்த வாரம் அடுத்த மாதமாகி, மாதம் மாதங்களாகி, கடைசியில் ஒரு வைராக்கியத்தில், சலூனுக்குப் போனாலும், மொட்டைபோட்டு வந்துவிடுவேன். முடியை அளவாக வெட்டி ‘கிராப் ‘ வைத்துக் கொள்வது- என்பதே கிடையாது. சலூன் கடை முருகேசன் சொல்வான், ‘ கிராப் தான் வெட்ட ஆரம்பிக்கிறேன் சார். ஆனா இடையிலே என்ன ஆகுமோ உங்களுக்கு.. முகமெல்லாம் சிவந்து பல்லைக்கடிச்சுக்கிட்டு ‘முருகேசா..மொட்டை போட்ருப்பா ‘-னு சொல்லிடுவீங்க. அப்படிச் சொல்றப்போ பயந்திடுவேன் சார்.. ரொம்பக் கோவமா அடிக்கிறாப்ல சொல்வீங்க… ‘. முருகேசன் சொல்லியதை மனைவியிடம் சொன்னேன். ஒரு மாதிரியாக என்னைப் பார்த்துச் சிரித்தாள். அவள் சிரித்த விதத்தை இப்போது நிினைத்தாலும் குலை நடுங்குகிறது.

என்ன இருந்தாலும், ஆபீஸில் எல்லார் முன்னாலும் ‘முண்டம் அது இது… ‘ எனவெல்லாம், ராவ் என்னை அவமானப் படுத்தியிருக்கக் கூடாது. டைபிஸ்ட் சுமதி கூட, குனிந்து எளக்காரமாகச் சிரித்தாள். ”இன்று கட்டாயம் முடிவெட்டியே தீருவது”- என சங்கல்பம் செய்து கொண்டேன். ஆபீஸ் முடிந்து வெளியே வரும் போது, சுமதியின் கண்களில் கேலி தெரிந்தது. அவளை செவிட்டில் ஒரு அறை விடலாம் போலிருந்தது.

வீட்டிற்குப்போகும் வழியில்தான் வழக்கமாய் முடி வெட்டிக்கொள்ளும் முருகேசனின் சலூன் இருக்கிறது. முருகேசன் பழக்கமானவன். பழக்கமான எல்லாவற்றிலுமே, ஒரு ‘நிச்சயம் ‘ ‘பாதுகாப்பு ‘ இருக்கிறது. என்னவோ ஏதோ என்ற தயக்கம், சந்தேகம் ஏதுமில்லையல்லவா.. ?

சலூனை ஒட்டிய சந்தில், சைக்கிளை நிறுத்துகிறேன். அதனைப்பூட்டி நிமிர்கையில், எதிரே பஸ்ஸிற்காகக் காத்து நிற்கும் பெண்ணின் பார்வை ‘சுரீர் ‘ என, சாட்டையாய் விளாசுகிறது. நான் அவளைப் பார்த்தபோது, சட்டென வேறுபக்கம் திரும்பிக் கொள்கிறாள்: ‘சைக்கிளில் வரும் நீ எனக்கு அல்பம் ‘ என்கிறாளா.. ? பின் எதற்காகப் பார்க்க வேண்டுமாம்.. ? தன்னை இவன் கவனிக்கிறானா- என்கிற நோட்டம்: கவனிக்க வேண்டுமே -என்கிற கவலை: கவனித்தால், ‘பார்க்கும்படி இருக்கிறேனாக்கும் – என்கிற நிமிர்வு: கூடவே ‘அட நீ எம்மாத்திரம் ‘ என்கிற அலட்சியம்: சைக்கிளில் வருவதாலா இந்த அலட்சியம்.. ? அடுத்த வருடம் ஒருமோப்பட் வாங்கிவிட வேண்டியது தான்.

‘வாங்க சார்.. வாங்க.. வாங்க.. ‘ அன்புடன் வரவேற்றான் முருகேசன்.அவன் காட்டிய மரியாதையும், பணிவும் முக்கியமானவானாக, என்னை உணரச் செய்கிறது. அலட்சியப்படுத்திய பெண்ணினால் பட்ட காயம், சற்றே ஆறிப் போகிறது. ‘உக்காருங்க சார் ‘ -நாற்காலியைக் காட்டினான். நாற்காலியில் அமர்கிறேன். பயம்…பயம் .. தக்.. தக்.. கென அடிவயிற்றில் பந்தாய்ச் சுழல ஆரம்பிக்கிறது. மூச்சை ஆழமாய் உள் இழுத்து-நிறுத்தி-வெளியே விடுகிறேன். கால்களை நீட்டி, வசதியாய்ச் சாய்ந்து கொள்கிறேன். எதிரே, கண்ணாடியில், முகம் இருண்டு, இறுகித் தெரிகிறது. கண்ணாடிக்குச் சற்று மேலே, ஜவகர்லால் நேருவின், போட்டோ தொங்குகிறது. அதில், நேருவின் தொப்பியையே கண்கள் வெறித்தவாறிருக்கிறது………

வாப்பாவும் நேரு தொப்பிதான் போடுவார். அப்போது நான் ஒண்ணாம் வகுப்போ..ரண்டாம் வகுப்போ. சலவைசெய்த துணிகளை, ஒவ்வொன்றாக வாப்பாவின் முன்னால் எடுத்து வைக்கிறான்-வண்ணான் பழனி. வாப்பாவின் தொப்பிகளை மட்டும் தனியே, தள்ளி வைக்கிறான். ஒரு தொப்பியை எடுத்து, அதனை மேலும் கீழும் உற்றுஉற்றுப் பார்க்கிறார் வாப்பா. அதில் லேசான சுரிப்பு தெரிய, அவன் மூஞ்சியில் அதனை விசிறியடிக்கிறார். ‘ஏல. .மானங்கெட்ட மூதி..என்னல வெளுக்கிற. . ? மயிர்ல வச்ச வெளுப்பு..இந்தா நீயே பாரு..நீ வெளுத்த லட்சணத்தை ‘-ஆடி இறங்கிவிட்டார். வாப்பாவிடம் 10,15 தொப்பிகள் உண்டு. வாரா வாரம் வெள்ளிக்கிழமை தோறும், தொப்பியை மாத்துவார். எல்லாத் தொப்பிகளும் ஒரே மாதிரியாத்தான் இருக்கும். இருந்தாலும், இது போன வாரம் போட்டது: இது அதுக்கு முந்தின வாரம்: இந்தத் தொப்பி, இந்த வாரத்துக்கு: இது அடுத்த வாரத்துக்கு- என கரெக்டாக எடுத்து வைப்பார். அது எப்படி.. ? தொப்பிக்கு உள்ளே நம்பர் கிம்பர் போட்டு வச்சிருப்பாரோ.. ? அஜீஸிடம் கேட்டால் சிரிப்பான். அவன் எனக்கு மூத்தவன். களவாணிப் பயல். வாப்பாவுக்கு, அவனைத் தான் ரொம்பப் புடிக்கும். நல்லாப் படிக்கிறானாம்.. ரொம்ப ஒழுங்குப் புள்ளையாம். வாப்பா ஓயாம சொல்லிக்கிட்டு இருக்கிற வார்த்தைகள் இரண்டு. 1) சுத்தம் 2) ஒழுங்கு. முதல் வார்த்தைக்கு அர்த்தம் தெரியும். ரண்டாவதுக்கு, கரெக்ட் அர்த்தம், கொஞ்சம் குழம்பும். தமிழ்ப் பாடத்தில், ‘ஒழுக்கம் உயர்வு தரும் ‘-னு வந்தது. சார் வந்தா எழுந்து நிக்கணும்- சார் சேர்ல உக்காரக் கூடாது -காம்பவுண்டு சுவத்தில ஒண்ணுக்கு அடிக்கக் கூடாது-பாடம் நடத்துறபோது, பக்கத்ல இருக்கிற மசூது கிட்ட பேசக் கூடாது- இதெல்லாம் ‘ஒழுக்கம் ‘-னார்- தமிழ்சார். வாப்பா அடிக்கடி சொல்ற ‘ஒழுங்கும் ‘-பாடத்ல வர்ற ‘ஒழுக்கமும் ஒண்ணு தானா-ன்னு சந்தேகம் வரவே, சாரிடம் கேட்டேன். ‘வாயை மூடுல வெளக்குமாறு ‘-ன்னு, புஸ்தகத்தை என் மூஞ்சியில விசிறியடித்தார் தமிழ்சார். இது மட்டும் நல்ல ஒழுக்கமா.. ? வாப்பாவும் இப்படித்தான். உப்பு ஜாஸ்தி-ன்னு, கொதிக்கிற கொழம்பை அம்மா முகத்ல வீசியதில், அவ முகம் வெந்து போயிட்டுது. போன வாரம் மூணு காக்கா முட்டைகளை உடையாம எடுத்து வர்ற போட்டியில, மரத்து மேல ஏறியதுக்கு, என்னை பெல்டா-ல விளாசி எடுத்திட்டார் வாப்பா. ஒழுங்கு, சுத்தம்-னு ஓயாம, ஒங்கி ஓங்கிப் பேசுறவரு, இப்பிடியெல்லாம் அடிக்கலாமா.. ? நீ திருந்தணும்-னு தான்: உன் நன்மைக்குத்தான்-அடிக்கிறேன்-என்பார். எனக்கு, கண்ல அழுகை பொங்கும்: மூச்சு அடைக்கும்: ‘வேய், உம்மை, உங்க வாப்பா இப்படித்தான் அடிச்சாரா.. ? அப்படி அடிச்சும் நீரு ஏன் திருந்தலே.. ? கோபத்தை அடக்க உம்மால ஏன் முடியல்லே.. ? அம்மாவை மாட்டை அடிக்கிற மாதிரி ஏன் அடிக்கீரு.. ?-ன்னு, தொண்டைக்குள்ளேயே கேள்வி ஒண்ணு கெடந்து தெவங்கும்.

வாப்பா வீட்டில் இருக்கையில், எனக்கு மூச்சு முட்டினாற்போல இருக்கும். சொகமா, ராகத்தா இருக்கவே முடியாது. ‘…ஆடாம அசையாம இருந்து படிச்சா என்னல மூதி.. ? அங்க என்னல சத்தம்.. ? வாயை மூடிக்கிட்டு இருக்க முடியலியால.. ? ஏம்ல நெளிஞ்சுக்கிட்டே இருக்கே.. ? கொட்டாவி விடும்போது ஏம்ல சத்தம்.. ? எடுத்த பொருளை எடுத்த இடத்தில வைக்கத் துப்புக்கெட்ட கழுதை… கண்ட கண்ட இடத்ல ஒண்ணுக்குப்போக நீ என்ன நாயா-ல.. ? கக்கூசுல ஒண்ணுக்குப் போ-ன்னு எத்தனை தடவை சொல்றது… ? தெருவுல தறுதலைப் பசங்களோட சேந்தன்னா, உன்னை தொலச்சுக் கட்டிடுவேன்.. ‘ வாப்பா இல்லாத போதும் அவரின் உறுமல்கள், டிடும் டிடும்-னு பாறை உருள்றாப்ல, தலைக்குள்ள கேக்குது. சாயங்கலம் ஆறு மணிக்கு, டாண்-னு படிக்க உக்காரணும். ”மஃரிப்” (சாயங்கால) தொழுகை முடிச்சு, சரக் சரக்-னு வாப்பா, தெருவுல நடந்துவர்ற செருப்புச் சத்தத்தை நாங்க படிக்கிற சத்தம் அமுக்கணும். எனக்குஆழமான தொண்டை. சத்தம் போட்டு, ராகம் இழுத்துப் படிப்பேன். அஜீஸ் ஓரக்கண் சிமிட்டி, நமுட்டுச் சிரிப்பாணி சிரிப்பான். அல்லாஹூ-ன்னு, திண்ணையில உக்காருவார் வாப்பா. டக்-னு, நாங்க படிக்கிற சத்தம் நிண்ணுடும்: நிக்கணும்: (வாப்பா இருக்கையில் சத்தம் வரக்கூடாதே..). நேத்து வாப்பா வர்ற சத்தம் காதில விழல. புஸ்தகத்ல ஒரு எறும்பைப் பார்த்தவாறு இருந்திட்டேன். அந்த எறும்பு, ஒரு ஈசல் இறகை, முக்கி முனகி இழுத்துக்கிட்டு போனது. நான் முட்டி போட்டவாறு, அதன் பின்னாலேயே போனேன். பளார்-னு முதுகில அடி விழ, துள்ளித் துடித்து குப்புற விழுந்தேன். வயத்ல, கன்னத்ல, முதுவுல மாறி மாறி அறைஞ்சார் வாப்பா. ‘ஒரேயடியா தொடர்ந்து அடிக்காதீங்கப்பா..மூச்சு முட்டுது. என்னால் அழ முடியல.. கொஞ்சம் நிறுத்தி நிப்பாட்டி அடிங்கப்பா..பெரியவங்க நீங்க.. தீராத விவகாரங்க ஆயிரம், உங்க தலைக்குள்ள கெடக்கும். அந்த வெறி அடங்கும் வரை, என்னைய அடிச்சுக்கொண்ணுடா- தப்பா..- என மனசுக்குள்ளேயே, வாப்பாவிடம் அழுது மன்றாடுவேன். அவர் ரொம்ப ரொம்பக் கொடுமையா நடந்துக்கிறது, மொட்டை போடுற சமயத்தில தான். என் தலை எல்லாரையும் போல, உருண்டையாக இராது. மாங்காக் கொட்டையை லேசா சப்புன மாதிரி இருக்கும். மொட்டை போட்டால் ரொம்ப அசிங்கமாத் தெரியும். ‘ஊசி மண்டை ‘ ‘மாங்கா மண்டை ‘-என, தெருவில் என்னை கேலி பண்ணுவாங்க. எனக்கு இந்த பட்டப் பெயரை வைத்து, அதனை, தெருவிலும், பள்ளிக் கூடத்திலும் பரப்பினவனே, இந்தப் படுவா ராஸ்கல் அஜீஸ் தான். அவன் மொட்டை போட்டால் நிலாப் போலஅழகா இருக்குமாம்-அக்கா சொல்வாள். எனக்கு வெறி கொப்புளிக்கும். அதுக்காகவே திருப்பியும் சொல்வாள். வாப்பா, அக்கா, அண்ணன்மார்-மிருக உலகில், எனக்கே எனக்கான ஒரே ஆதரவு என்னெப் பெத்த தாய் தான். ‘இதுக்குப் போயி யாராவது அழுவாங்களா.. ? சரியான பயந்தாங்கொள்ளியா இருக்கியே ராசா.. இப்படி கோழையா இருந்தா, ஊர் உலகம் உன்னைய வுட்டுட்டு தூரமாப் போயிடும்-ல. தைரியமா இரு தங்கம்… தைரியமா நிமிந்து நிக்கணும்.. அழாதல ராசா.. அழாத ‘-மாற்றாந்தாய் கொடுமையில வதை பட்டு, அதில இருந்து தப்பிச்சோம் பொழச்சோம்-னு கல்யாணம் பண்ணி, வாப்பாவைக் கை புடிச்ச நாள்-ல இருந்து, மாமியார்க்காரியிடமும், வாப்பாவிடமும் நொந்து, நோவுபட்டு அழுவதற்கும் உயிர் இற்றுப்போன அம்மாவின் இதயத்திலிருந்து இரண்டு சொட்டுக்கண்ணீர், அவள் மடியில் குப்புறக்கிடக்கும், இவன் புறங்கழுத்தில் விழும். ‘அம்மா.. வாப்பாவிடம் சொல்லும்மா.. எனக்கு மொட்டை போட வேண்டாம்-னு. சொல்லுவியாம்மா… சொல்லுவியா.. ? ‘

‘தலை அரிக்குதுப்பா..மொட்டை போடணும்-னு ‘, அவ்வப்போது வாப்பாவை, ‘ச்சூ ‘காட்டியவாறே இருப்பான்-அஜீஸ். முந்தின நாள் இரவே, ‘புள்ளைங்களுக்கு முடி வெட்டணும்.. நாளைக்கு வா ‘ -வென, நாவிதன் மம்மதுஷாவிடம் சொல்லிவிடுவார் வாப்பா. காலையில் மம்மதுஷா வருவதை நினைத்தாலே குலை நடுங்கும்.கை கால் பதறும். சாப்பாடு இறங்காது. ஷெய்கனா தர்கா, மசூது நாயகம் தர்காக்களுக்- கெல்லாம் போய், ‘ இறைவா..மம்மதுஷா வரவே கூடாது.. அவன் செத்துப்போகணும். வாப்பாவும் செத்துச் சுண்ணாம்பாப் போவணும் ‘-னு அழுது மன்றாடுவேன். தூக்கத்தில், பயங்கரமான,கோரமான கனவுகளெல்லாம் Ampicillin No Prescription வரும். காலையில் மூணு நாலு மணிகெல்லாம் முழிப்பு வந்துவிடும். தக் தக் தக்.. அடிவயிற்றில் பீதி உருளும். காலை ஆறு மணிக்கே டாண்-னு வந்து நிற்பான், மம்மதுஷா. வாப்பாவைப் பார்த்ததும்,தோள் துண்டை வெடுக் கென இழுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு, குனிந்து சலாம் சொல்வான். இதனை ‘பணிவு ‘-ன்னு நினைத்துக் கொள்கிறார் வாப்பா. ‘மம்மதுஷா மரியாதை தெரிஞ்ச பய ‘-ன்னு, சொல்லவும் செய்வார். மம்மதுஷாவின் பணிவு மரியாதை எல்லாம் வழக்கமாக அவனுக்குத் தரும், வருஷத்துக்கு நாலு மரக்கா நெல், ஹஜ்ஜுப்பெருநாள் கடாத்தலை, வெள்ளிக்கிழமை ராச்சோறு-போக, ஷேவ் செய்ய, வாப்பா, அவனுக்குத் தரும் துட்டுக்காக-ஸ்பெஷல் துட்டுக்காக. இது எப்படி வாப்பாவுக்குத் தெரியாமல் போனது.. ? அல்லது தெரிஞ்சும், அவனோட கள்ள மரியாதையை ஏத்துக்கிற மாதிரி, பொய்யாட்டம் போடுறாரா.. ? இந்தப் பெரியவங்களே இப்படித்தான். எதிலையுமே நேரா இருப்பதில்லை… பொய், கள்ளாட்டம், கோணா-மாணா. ஆனா, சின்னப் பசங்க மட்டும், நெட்ட நெடுகா, நேரா, சீரா இருக்கணும்.

வாப்பா ஷேவ் செய்துகொள்வதைப் பலி ஆடு மாதிரி பார்த்துக் கொண்டிருப் பேன். அங்கிருந்து, தப்பிக்கவே முடியாது. ஒண்ணுக்குப் போனாலும், பின்னாலே வருவான் அஜீஸ். வாப்பா ஷேவ் செய்து முடித்ததும், மம்மதுஷா முன்னால், ஜம்-மென அமர்வான் அஜீஸ். அவன் முகத்தில் குளுமை: உதட்டில் எம்.ஜி.ஆர்.பாட்டு. நாயிக்குப் பொறந்த பய. என் ரத்தம் கொதிக்கும். மம்மதுஷா கையிலிடுந்து கத்தியைப் புடுங்கி, அவன் கண்களைக் குத்திக் குதறும் வெறி வரும். அடுத்து மொட்டை போட வேண்டியது நான். சடா-ரென எழுந்து ஓடுவேன். அஜீஸும், அண்ணனும் தாவிப் பிடிப்பார்கள். ‘முடியாது.. மொட்டை போடமாட்டேன்..மாட்டவே மாட்டேன்..கிணத்தில உழுந்து செத்துப்போயிடுவேன்… ‘- வீடே கிடுகிடுக்கும்படி அலறுவேன். கதவில் சாய்ந்து, என்னையே பார்த்தவாறு நிற்பார்-வாப்பா .அவர் முகம், பார்வை, அசைவு எல்லாம், ரொம்ப அமைதியா, ஆதரவா, அன்பா ‘உனக்கு இந்தத் தடவை மொட்டை இல்லை ‘ என்கிற மாதிரி இருக்கும். ஆசையா அவர் அருகே போவேன். பளார்-னு, செவிட்டில் அறைந்து, ‘போ.. போய் மொட்டை போட்டுக்கோ ‘-உறுமுவார். அவர் கண்முழி, கன்னச்சதை, உதடு, வாய்-என்னை வெறி நாயாய்க் குதறவரும். ‘போ..மொட்டை போடு ‘-அவர் குரல், கூரிய நகங்கள் கொண்ட, முடிமுளைத்த, கரிய கையாய் நீண்டு கண்களைத் தோண்டவரும். ‘ஐயோ..வாப்பா..நீங்க சொல்றதைக் கேக்கிறம்பா.. என்னை அடிக்காதீங்க..வலி தாங்க முடியலேப்பா.. ஒரேயடியா கொண்ணுடுப்பா..அப்புறம் வலிக்கவே வலிக்காது.. ஐயோ.. வேண்டாம்பா.. அடிக்காதப்பா..சரிப்பா..மொட்டை போட்டுக்கிறேம்பா..மொட்டை போட்டுக்கிறேன் ‘

‘சார் சார் என்ன ஆச்சு சார்.. ? ஏன்சார் அழுவுறீங்க.. தூங்கிட்டாங்களா.. ? ஏதாச்சும் கெட்ட கனவா.. ? ‘ -தோளைத்தட்டி உசுப்பினான் முருகேசன். சுய நினைவுக்கு வர கொஞ்ச நேரம் பிடித்தது. இதுநாள் வரை நினைவின் மேற்பரப்பிற்கே வராது, உள்ளேயே அழுந்திக் கிடந்த சிறிய வயது நினைவுகள், முதல் முறையாக வெளிப்பட்டு, சித்திரம் சித்திரமாய் ஒருசினிமா- வைப் போல கண்முன் ஓடிய அனுபவத்தை அசைபோட்டவாறு, நாற்காலியை விட்டு எழுந்தேன்.கண்ணாடியில், பள- பளப்பாக மின்னி மினுங்கிற்று மொட்டைத் தலை. ‘ஏன் சார் அப்படிப் பார்க்கிறீங்க.. திருப்பித் திருப்பிக் கேட்டேன் சார். நீங்க தான் மொட்டை போடு-ன்னு சொன்னீங்க ‘ -என்றான் முருகேசன். வழக்கமாய்த் தரும் கட்டணத்தை விட, எக்ஸ்ட்ரா ஐந்து ரூபாயை, அவன் கையில் வைத்துஅழுத்தினேன். அவன் வினோதமாய் என்னைப் பார்த்தான்.

சலூனை விட்டு வெளியே வந்தேன். குளிர்ந்த காற்று மொட்டைத் தலையை வருடிற்று.சுமை நீங்கிய விடுதலையை மனம் உணர, சைக்கிளை எடுத்து நிதானமாய் மிதித்தேன்.
+++++++ ++++++ ++++++

சிறு குறிப்பு:

சிறு வயதில் நடந்த நிகழ்வு / தந்தை இட்ட மிகக் கடூரமான கட்டளை ( மொட்டை போடல் ), கதா நாயகனின் ஆழ்மனதில் அமுங்கிக் கிடக்கிறது. (புரிந்து கொள்வதற்கு வசதியாக, ஆழ்மனம் என்கிறேன். சரியான சொல் ”நனவிலி “: ஆங்கிலப் பதம் the unconscious ). இதனை, அவன் அறிந்திருக்கவில்லை. ஆனால், சலூனில், போட்டாவில் காணும் நேரு தொப்பி-எதேச்சையாக- அகஸ்துமகஸ்தாக, அமுங்கிக் கிடக்கும் அந்த ஆழ்மனதைத்  தொட, சிறுவயது நிகழ்வு முழுவதும்- அவன் மனக்கண் முன் ( நனவு மனதில் ) சட் டென – கோர்வையாக விரிகிறது. அவனையும் மீறி, ஒவ்வொரு தடவையும் நிகழ்ந்த -மொட்டை போடலுக்கான- காரணம், ஆழ்மனதின்  கட்டளையென- முதன் முறையாய்- அப்போது தான் –தெரிந்து கொள்கிறான். இவ்விதம், அமுங்கிக்கிடந்த ஆழ்மனம் அவனுக்குத் தெரியவந்த பின் (awareness of the unconscious), இந்த உலகு புதிதாய் தெரிகிறது. அவனும் அவனுக்குப் புதிதாய் தெரிகிறான். தன்னிடம் புதிய சக்தி வந்து சேர்ந்திருப்பதாய் உணர்கிறான். அதுவரைய தளையின்றும் விடுபடுகிறான். இதனையே- விடுதலை-என, இக்கதை மூலம் சுட்டியுள்ளேன்.

உளவியலின் படி, நமது ஆழ்மனம் தான் (நனவிலி) வாழ்வையே புரட்டிப்போடும் மிக முக்கிய முடிவுகளை – நோக்கி நம்மைச் செலுத்துகிறது. ஆழ்மனம் ( நனவிலி ), கனவுகளில் வெளிப்படலாம்: எதேச்சையாக/அகஸ்துமகஸ்தாக சிதறி விழும் சொற்களில் வெளிப்படலாம்: அபூர்வமாய் – ஏதோ ஓர் மனஓட்டத்திலும் – இது வெளிவரலாம். எந்த ரூபத்தில் வெளிப்பட்டாலும், உளவியலாளர் உதவியில்லாமல், ஆழ்மனதை (நனவிலி) சரியாக, முழுமையாக அறிதல் சாத்தியமில்லை.

ஏதோ ஒரு மனஓட்டத்தில், எவ்வாறோ, ஆழ்மனம் (நனவிலி )
வெளிப்படுவது போலும், அதனை, கதா நாயகன் அவனாகவே அறிவது போலும்- அந்தக் கால கடையனல்லூர்ச் சிறுவன் ஒருவனின் குரலில் இக் கதையை அமைத்துள்ளேன்.

மொட்டை போடுவதைப் பற்றிய கதை அல்ல இது என ஒரு நுட்பமான-தீவிர இலக்கிய வாசகன்- இந்தச் சிறு குறிப்பைப் படிக்காமலும்- புரிந்து கொள்ளக்கூடும்.

இக்கதையும் சமரசம் ஆகஸ்ட் 2000 -இதழில் –வெளிவந்தது. இப்போது சில சொற்கள் நீங்கியுள்ளன.

……….. …………………….. ………………………………….

Add Comment