கடையநல்லூரில் ஜி.கே வாசன் பிரச்சாரம்

“அதிமுக ஆட்சியில் சாதனை என்பதை நினைத்து பார்த்தால் அது வேதனையான சாதனையாகும்’ என மத்திய அமைச்சர் வாசன் பேசினார். கடையநல்லூர் தொகுதி காங்., வேட்பாளர் பீட்டர் Bactrim online அல்போன்ஸிற்கு கை சின்னத்திற்கு ஓட்டு கேட்டு மத்திய அமைச்சர் வாசன் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். கடையநல்லூர் தொகுதி செங்கோட்டை, விசுவநாதபுரம், தேன்பொத்தை, பண்பொழி, வடகரை, அச்சன்புதூர், காசிதர்மம், கடையநல்லூர் ஆகிய பகுதிகளில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் மத்திய அமைச்சர் வாசன் பேசியதாவது:-

மத்திய அரசின் மூலம் பல கோடி ரூபாய் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. அதேபோன்று விவசாயிகள் நலன்கருதி 7 ஆயிரம் கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டது. கிலோ அரிசி 1 ரூபாய் தந்த மாநிலம் தமிழகம் தான். தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை வரவேற்க ஒத்த கருத்துடைய அரசை தேர்ந்தெடுக்க வேண்டும்.

தமிழகத்தில் கடந்த 2001 முதல் 5 ஆண்டு காலம் அதிமுக ஆண்டது. அந்த ஆட்சியின் சாதனையை நினைத்து பார்த்தால் அது வேதனையான சாதனையாகும். திமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் அதிமுக ஆட்சியில் உழவர் சந்தைகள் மூடப்பட்டன. நெசவாளர்களுக்கு வரி நீக்கம் செய்தது திமுக அரசு. ஆனால் நெசவாளர்களை கஞ்சி தொட்டிக்கு அனுப்பியது அதிமுக அரசு. ஏழை எளிய மகளிர் திருமண உதவித் திட்டங்களை அதிமுக அரசு முடக்கி காட்டியது. எனவே எந்த அரசு சாதனைகளை நிறைவேற்றிய அரசு என எண்ணி பார்க்க வேண்டும். அதன் அடிப்படையில் உங்கள் ஓட்டுக்கள் அமைய வேண்டும்.

இத்தொகுதியில் போட்டியிடும் பீட்டர் அல்போன்ஸ் மீண்டும் உங்களிடம் ஓட்டு கேட்டு வந்துள்ளார். ஐந்து ஆண்டு காலம் மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து அவர் பெற்று தந்த நிதியில் சாதனை, சரித்திரம் மிக்க பணிகள் நடந்துள்ளது. கடையநல்லூர் தொகுதிக்கு என தனிப்பெருமை உள்ளது. 234 தொகுதியில் 12 தொகுதிகளை தேர்வு செய்து பார்த்தால் அவற்றிலும் முதல் நிலை தொகுதியாக கடையநல்லூர் தொகுதி தான் அங்கம் வகிக்கிறது. இதற்கு காரணம் இத்தொகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள மத்திய, மாநில அரசுகளின் திட்டப்பணிகளாகும்.

அனைத்து கிராமங்களும் முன்னேற்றமான நிலை அடைந்துள்ளது. அனைவராலும் போற்றத்தக்கதாக திருமலை கோயிலில் 5 கோடி ரூபாய் செலவில் மலைப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து வசதிகளும் அடித்தளமாக கொண்ட தொகுதியாக கடையநல்லூர் மாற்றப்பட்டுள்ளது. அதற்கு மிக முக்கிய காரணம் பீட்டர் அல்போன்ஸ் தான். எனவே காங்., கட்சிக்கு உங்கள் ஆதரவினை தாருங்கள். தொடர்ந்து இத்தொகுதியை முன்னேற்றமடைய செய்யுங்கள்” என்றார்.

கடையநல்லூரில் நடந்த கூட்டத்தில் காங்., வேட்பாளர் பீட்டர் அல்போன்ஸ், முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், நெல்லை எம்.பி.ராமசுப்பு, முன்னாள் எம்.பி.,ராம்பாபு, மாநில காங்., செயலாளர் ஆலடி சங்கரைய்யா, பொதுக்குழு உறுப்பினர் புலவர் செல்வராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., ரசாக், மாவட்ட திமுக பொருளாளர் சேக்தாவூது, மாவட்ட முஸ்லிம் லீக் செயலாளர் செய்யது முகம்மது, விடுதலை சிறுத்தை மாவட்ட செயலாளர் கார்த்திக், பாமக மாவட்ட செயலாளர் ஆறுமுகசாமி, திமுக ஒன்றிய செயலாளர்கள் காசிதர்மம் துரை, பரமசிவன், நகர செயலாளர் முகம்மதுஅலி, மாவட்ட காங்., துணைத் தலைவர்கள் மாரியப்பன், சிவராமகிருஷ்ணன், முருகேசன், நகராட்சி தலைவர் காளிராஜ், துணைத் தலைவர் விஸ்வாசுல்தான் மற்றும் திமுக கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

செங்கோட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில் நகராட்சி தலைவர் ரஹீம், முன்னாள் நகராட்சி தலைவர் ராஜசரஸ்வதி, பாமக அய்யம்பெருமாள், முஸ்லிம் லீக் இஸ்மாயில், விடுதலை சிறுத்தைகள் செல்வம், மாநில இளைஞர் காங்., முன்னாள் செயலாளர் ராம்மோகன், முத்துசாமி, ஜோதி, வட்டார காங்.,தலைவர் முகம்மது மைதீன், வடகரை ராமர், இலஞ்சி திமுக ஜம்புலிங்கம், ராம்மோகன் உட்பட திமுக கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

Add Comment