அறிவாலயத்தில் கட்டிப் போட நானென்ன காயடிக்கப்பட்ட மாடா..?

இது ஒரு திரையுலக அரசியல்வியாதியின் அழுகை கட்டுரை..!

 


தி.மு.க.வின் நட்சத்திரப் பேச்சாளர்களில் ஒருவராக இருந்தவர் நடிகர் தியாகு. ஆனால், சமீபத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் தியாகுவைக் காண முடியவில்லை. ஏன் என்ற கேள்வியோடு தியாகுவைச் சந்தித்தோம். பதிலுக்குக் கண்ணீரும், கம்பலையுமாகக் கொட்டித் தீர்த்துவிட்டார்.

“எம்.ஜி.ஆர்., தி.மு.க.வில் இருந்து விலகிய காலத்தில் இருந்தே மிகவும் தீவிரமாகக் கட்சிக்காக உழைத்துக் கொண்டிருப்பவர்களில் நானும் ஒருவன். இப்போது கட்சியிலேயே இல்லாத வடிவேலுவுக்கு தி.மு.க.வில் உயர்ந்த அங்கீகாரம் அளித்திருக்கிறார்கள். அவருக்கும் கழகத்திற்கும் என்ன தொடர்பு இருக்கிறது..? நேற்று வந்த குஷ்பூவுக்கு ராஜ உபச்சாரம் நடக்கிறது. ஆனால் கட்சிக்காக ஓடாய்த் தேய்ந்த எனக்கு என்ன அங்கீகாரம் அளித்திருக்கிறார்கள்..?

அறிவாலயத்தில் கட்டிப் போடுவதற்கு நானென்ன காயடிக்கப்பட்ட மாடா..? தலைவர் கலைஞரை மட்டும் நம்பி என் வாழ்க்கையை நானே அழித்துக் கொண்டேனோ என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டிருக்கிறது.

ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் எஸ்.எஸ்.சந்திரன் வீட்டில் பெட்ரோல் பாம் போட்டதாக என் மீது பொய்யான புகார் கொடுக்கப்பட்டது. வளசரவாக்கம் பகுதிக்கே சம்பந்தம் இல்லாத அப்போதைய காஞ்சிபுரம் மாவட்ட ரூரல் எஸ்.பி.யான பொன்.மாணிக்கவேல் தலைமையில் போலீஸ் படை என்னை கைது செய்ய என் வீட்டிற்கு முன்னால் வந்து நிற்கிறது.

என் மனைவி “அவரைக் கைது செய்ய வேண்டுமென்றால் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வாருங்கள்” என்று சொல்லிவிட்டார். போலீஸாரின் மிரட்டலைப் பார்த்து என் மகனுக்கு வலிப்பு வந்துவிட்டது. பத்திரிகையாளர்கள் சூழ்ந்துவிட்டார்கள். அந்த நள்ளிரவு நேரத்தில் இல.கணேசன் Buy Doxycycline எனக்கு போன் செய்து பேசுகிறார். ஒரு போலீஸ் அதிகாரி எனக்கு போன் செய்து “பொன்.மாணிக்கவேலுக்கு வளசரவாக்கம் ஏரியா கிடையாதே..? அவர் ஏன் அங்கு வந்தார்?” என்று என்னிடம் கேட்டார்.

நான் அதிகாலை 4 மணிக்கு சுவர் ஏறிக் குதித்து வீட்டின் பின்பக்கமாகத் தப்பி ஊருக்குப் போய்விட்டேன். 22 நாட்களாக அவர்களின் கண்களில் நான் படவில்லை. பின்பு ஐயா மூப்பனார் ஜெயலலிதாவிடம் பேசி என்னை வழக்கில் இருந்து விடுவித்தார். ஆனால், தலைவர் கலைஞர் கைது செய்யப்பட்டபோது முதல் குரல் கொடுத்தவன் நான்தான்.

நான் நினைத்திருந்தால் என் நண்பர் விஜயகாந்த் பக்கம் போயிருக்கலாம். இன்றைக்கு எனக்கு தி.மு.க.வில் ஏற்பட்டிருக்கும் கெட்ட பெயருக்கு உளவுத் துறை அதிகாரியாக இருந்த ஜாபர்சேட்டுதான் காரணம். அவருடைய பேச்சைக் கேட்டு என்னை ஓரம் கட்டுகிறார்கள். தலைவரோ, துணை முதல்வரோ என்னைக் கண்டு கொள்ளவில்லை. அண்ணன் அழகிரி மட்டும்தான் என்னை அழைத்து ஆதரவுடன் பரிவாகப் பேசினார்.

“அவரைப் பார்க்காதே.. இவரிடம் பேசாதே..” என்று பல பிரிவுகளைத் தாண்டித்தான் இன்று தி.மு.க.வில் வாழ வேண்டியிருக்கிறது. ஆகையால், நான் இன்று ஓரம் கட்டப்பட்டிருக்கிறேன். என்னை வாழ வைத்தவர் தலைவர் கலைஞர்.. என்றைக்கும் அவரைவிட்டு வெளியேற மாட்டேன்..” என்கிறார் தியாகு.

இவருக்கும், இவருடைய தம்பிக்கும் நடந்த சொத்துப் பிரச்சினையில் தியாகு ஏமாற்றப்பட்டார். தம்பிக்கு ஆதரவாக ஸ்டாலின் குடும்பத்தார் இருந்ததுதான் இவ்வளவு பிரச்சினைக்கும் காரணம் என்கின்றனர் அறிவாலய வட்டாரத்தினர்.

நன்றி : குமுதம் ரிப்போர்ட்டர்

Add Comment