தி.மு.க.வை யாரும் அசைக்கவும் முடியாது, வெல்ல முடியாது: மதுரையில் கருணாநிதி முழக்கம்!

தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் மதுரை மேலமாசிவீதி- வடக்கு மாசி வீதி சந்திப்பில் நேற்று இரவு நடந்தது. கூட்டத்திற்கு மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை மந்திரி மு.க.அழகிரி தலைமை தாங்கினார். மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி புறநகர் மாவட்ட செயலாளர் மூர்த்தி எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் முதல்- அமைச்சர் கருணாநிதி கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:- 

அஞ்சாநெஞ்சன் தம்பி அழகிரியை, தென்மண்டல அமைப்புச்செயலாளர் என்று கூறுவதை விட அஞ்சாநெஞ்சன் என்று குறிப்பிடும்போது எனக்கு பட்டுக்கோட்டை அழகிரியின் பெயர்தான் நினைவுக்கு வரும். அண்ணாவின் இயக்கத்தில் என்னை திராவிட இயக்கத்தில் ஒருவனாக உலவவிட்டவர் அழகிரி. அத்தகைய பெயருக்கு களங்கம், மாசு வராமல் நான் காப்பாற்றியது போல என்னுடைய மகன் தம்பி அழகிரியும் அஞ்சாநெஞ்சன் அழகிரியின் வழித்தோன்றலாக விளங்கி வருகிறார் என்பதை காணும்போது நான் மெய்சிலிர்க்கிறேன். எனக்கு புல்லரிக்கிறது.

இங்கே திராவிட இயக்கத்தை வளர்க்க நானும் மதுரை முத்துவும் பட்டபாடு கொஞ்சநஞ்சமல்ல. உருவான திராவிட இயக்கத்தை வளர்க்க மதுரை நகரில் 100 இடங்களில் கொடி ஏற்றுவது என திட்டமிட்டு கொடியேற்றும்போது அந்த கொடிமரத்தின் கயிறை மதுரை முத்து எடுத்துக்கொடுப்பார். அதை வாங்கி நான் ஏற்றுவேன். அப்போது எங்கிருந்தோ அரிவாள், வெட்டுக்கத்தி வந்து விழும். கொடி அறுந்து போகும்.

சில இடங்களில் எனது கை, மதுரை முத்து கையில் காயம் ஏற்படும். ரத்தம் கொட்டும். அதை துண்டில் ஏந்தி தொண்டர்கள் எங்களை மருத்துவமனைக்கு எடுத்துச்செல்வார்கள். அதோடு முடிந்து விடாது. அடுத்த கொடியை ஏற்றுவோம். அடுத்த கொடி… அடுத்த கொடி என்று ஏற்றி ஏற்றித்தான் இன்று விண்முட்டி பறக்கக்கூடிய தி.மு.க.கொடியை நாமெல்லாம் காண முடிகிறது. மதுரை மாநகரில் வளர்ந்திருக்கிற உருவாக்கியிருக்கிற கட்டமைப்புகள் பற்றி இங்கு குறிப்பிட்டார்கள்.

நேற்றைய தினம் சென்னை தீவுத்திடலில் திருமதி சோனியாவுடன் பேசிய மாபெரும் கூட்டத்தில் நான் விடுத்த வேண்டுகோள்; சென்னை வாழ் மக்கள் நீங்களெல்லாம் ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்குகளை வழங்க வேண்டும். என்பதல்ல. அதற்காக கூட்டப்பட்ட கூட்டம் என்று நான் எண்ணவில்லை. ஆறாவது முறையாக நான் முதல்-அமைச்சராக வந்தாலும் ஒரு வேளை வராவிட்டாலும்….ஏன் உனக்கு சந்தேகம் என்று தம்பி அழகிரி என்னை பார்த்து கேட்பது புரிகிறது.

முதல்-அமைச்சராக வந்தாலும், வராவிட்டாலும் நான் செய்ய வேண்டிய முக்கியமான காரியத்தை உற்றார் உறவினர்களுக்காக, சுற்றத்தாருக்காக செய்ய வேண்டிய கடமைகளை செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் குறிப்பிடுகிறேன். நாட்டுக்கும், மண்ணுக்கும், இந்த மொழிக்கும் நாம் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன. எதிர்க்கட்சிகாரர்கள் கருணாநிதி ஆட்சிக்கு வரலாமா? வாக்கு கேட்கலாமா? திருட்டு ரெயில் ஏறி சென்னை வந்தவர் என கூறுகிறார்கள். நான் ரெயிலில் சென்று இருக்கிறேன்.

எனக்கு திருட்டு பழக்கம் இல்லை. என்றாலும் அவர்களுக்கு பதில் சொல்லமுடியும். தாக்குதலுக்கு தாக்குதல், பதிலுக்குப்பதில் அவதூறு பேசும் பழக்கம் எனக்கு இல்லை. அறிஞர் அண்ணா வாழ்க வசவாளர்கள் என்று சொன்னார். என்னை இகழ்ந்துரைத்தாலும் எனது ஆட்சியை குறை கூறினாலும் அதைப்பற்றி கவலைப்படவில்லை. என் வேலையை தொடர்ந்து செய்து கொண்டே இருக்கிறேன். நபிகள் நாயகம் ஒவ்வொரு நாளும் தெருவில் நடந்து செல்லும்போது, ஒரு அம்மையார் குப்பைகளை கொட்டுவார். அந்த குப்பை நபிகள்நாயகம் தலைமீது விழும். அவர் அந்த மாடியை மேலே பார்த்துவிட்டு செல்வார்.

ஒருநாள் அந்த அம்மையார் குப்பை கொட்ட வரவில்லை. மாடியை பார்த்துவிட்டு பக்கத்து வீட்டுக்காரரிடம் நபிகள் நாயகம் விசாரித்தார். அப்போது அந்த அம்மையாருக்கு கடுமையான காய்ச்சல், உடல்நலம் பாதிக்கப்பட்டு படுத்திருக்கிறார், அதனால்தான் குப்பை கொட்டவில்லை என்றனர். உடனே நபிகள் நாயகம் மாடிவீட்டுக்கு சென்று பார்த்தார். அங்கு அந்த அம்மையார் போர்வையை போர்த்திக் கொண்டு படுத்திருந்தார். அதைப்பார்த்து அவருக்கு தேவையான மருந்துகளை கொடுத்துவிட்டு சென்றார் என்று சொல்வதுண்டு. குப்பையை கொட்டிய அம்மையார் வெட்கப்பட்டு வேதனை அடைந்தார் என்பது வரலாறு.

குப்பையை கொட்டும் அம்மையாரோ கொட்டிக்கொட்டே இருக்கட்டும். உங்கள் கை அலுத்துப்போகிற வரை கொட்டிக்கொண்டே இருங்கள். ஏன் இதை சொல்கிறேன் என்றால் பொறுத்தார் பூமி ஆள்வார். ஓராண்டல்ல இரண்டாண்டல்ல பொறுத்ததால்தான் பூமியை ஆண்டு கொண்டிருக்கிறோம். ஆனால் இதையெல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாத அம்மையார் என்மீது குற்றச்சாட்டுகளை கூறுகிறார். நான் என்ன குற்றம் செய்தேன்? நான் செய்த ஒரே குற்றம் தமிழ் படித்தது. அதற்கு செம்மொழி பெற வேண்டும் என்றது குற்றம்.

நான் தமிழனாகப் பிறந்தது மற்றொரு குற்றம். ஜெயலலிதா போன்றவர்கள் இவன் தமிழ்நாட்டில் பிறந்திருக்க கூடாது என நினைக்கிறார்கள். நான் பெரியார், அண்ணா வழியில் வளர்ந்து பணிகள் செய்து கொண்டிருக்கிறேன். கடந்த 1957-ம் ஆண்டு குளித்தலையில் தொகுதியில் நின்று, வென்று சட்டசபைக்கு செல்கிறேன். சட்டசபையில் என் எதிரே பெருந்தலைவர் காமராஜர், பெரியவர் பக்தவச்சலம், தியாகி கக்கன் போன்றோர் இருந்தார்கள். நான் போய் உட்கார்ந்தேன். என் முன்னே `பேப்பர் பிளேஸ் ஆன் தி டேபிள்` என்று வைத்தார்கள். அப்போது நான் ஒன்றும் மந்திரி இல்லை. எதிர்க்கட்சியில் உள்ள உறுப்பினர்களின் ஒருவன்.

திராவிட முன்னேற்ற கழகம் என்பது அப்போது ஒரு குழு தான். என் முன்னே வைக்கப்பட்ட பேப்பரை எடுத்து படித்தேன். அதில் தமிழ்நாட்டில் உள்ள பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களின் பட்டியல் என்று இருந்தது. அதை நான் ஆழ்ந்து படித்தேன். அதில் செட்டியார், பிள்ளைமார், முதலியார் என்று இருந்தது. படித்தவுடன் ஒன்றை பார்த்து திடுக்கிட்டேன். வண்ணான்-மருத்துவன் என்று இன் விகுதி போட்டு, சில சாதிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு இருந்தன. நான் உடனே எழுந்து, நின்று எம்.எல்.ஏ. என்ற முறையில் எதிரே இருந்த அமைச்சர் கக்கனை பார்த்து, கேட்கிறேன்.

இந்த பட்டியலில் பல சாதிகளின் பெயர்கள் இருக்கிறன. அதில் அய்யர்-அய்யங்கார் இருக்கிறது. சாணான், வண்ணான் இருக்கின்றது என்றேன். அதில் என்ன சந்தேகம் என்று கக்கன் கேட்டார். நான் சமூகத்தில் தான் சந்தேகம், நீங்கள் விளக்க வேண்டும் என்று என்றேன். வண்ணன், மருத்துவன் என்றெல்லாம் சொல்லி ஒரு சாதியை இன் விகுதியில் உள்ளது. ஆனால் அய்யர்- அய்யங்கார் என்று மரியாதை இருக்கிறதே என்றேன். உடனே காமராஜருக்கு கோபம் வந்து அப்படியா போட்டு இருக்கு? அதனை உடனே அகற்றுங்கள் என்றார்.

உடனே கக்கனும் திருத்திவிடுவோமே என்றார். உடனே திருத்தவும் பட்டது.இதை ஏன் சொல்கிறேன் என்றால், சாதி பட்டியலில் கூட சமுதாயத்தை இழிவு படுத்தும் அவன், இவன் என்றும் குறிப்பிட்டது அகற்றப்பட்டு, அய்யர் அய்யங்கார் போலவே அனைத்து சாதியினருக்கும் ர் போட வைத்தவன் இந்த கருணாநிதி தான். வரலாற்றை சொல்கிறேன். 57-ம் ஆண்டு சட்டமன்றத்தில் வைக்கப்பட்ட அந்த குறிப்பில் அந்த புத்தகங்களை buy Lasix online படித்து பார்த்தால், நான் சொன்ன இந்த கருத்துகள் இருக்கும். இதை ஏன் சொல்கிறேன் என்றால், 6 வயதிலேயே வந்தது இந்த பகுத்தறிவு உணர்வு.

எனக்கு இளைமையில் ஏற்பட்ட இந்த உணர்வு அண்ணா ஊட்டிய உணர்வு, பெரியார் ஊட்டிய உணர்வு. அந்த உணர்வுகள்தான் தி.மு.க.தலைவராக முதல்-அமைச்சராக உங்களில் ஒருவனாக உறவு கொள்ள வைத்துள்ளது. இது ரத்தத்தில் ஊறிய உணர்வு. இது என்றைக்கும் மாறாத காரணத்தால்தான் லட்சோபலட்சம் மக்கள் கூடிய கூட்டத்தில் கூட சேதுசமுத்திர திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். தமிழ்மொழி செம்மொழி ஆக்கியதை வரவேற்கிறோம்.

இந்தியாவின் ஆட்சி மொழியாக தமிழ்மொழியை தாருங்கள். நதி நீர் பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டும். காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அமுல்படுத்த வேண்டும். முல்லைப்பெரியாறு பிரச்சினையை தீர்த்து மதுரை உள்ளிட்ட மாவட்டங்களின் தண்ணீர் பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டும் என்று மற்றவர்களுக்காக கோரிக்கைகளை வைத்தேனே தவிர எனக்காக கேட்டவனில்லை. அப்படியெல்லாம் நான் நினைத்திருந்தால் பாளையங்கோட்டையை பார்த்திருக்க மாட்டேன். கல்லக்குடியில் தண்டவாளத்தில் தலைவைத்து படுத்திருக்க மாட்டேன்.

என் தம்பி அடைக்கப்பட்டுள்ள பாளையங்கோட்டை சிறை எனது யாத்திரை தலம் என்று அறிஞர் அண்ணா சொன்னார். அந்த பேரும் புகழும் பாக்கியமும் யாருக்கு கிட்டும்? சிறைச்சாலை என்றால் என்ன? எந்த படம் என்று ஷூட்டிங்கில் பார்த்தவர்களுக்கு சிறைச்சாலை பற்றி அனுபவம் உண்டா என்றால் இருக்காது. நான் என்றென்றும் உங்களுக்காக வாழ்பவன். 87 வயதுக்கு பின் நான் எதைத்தர முடியும். நான் கற்ற பாடங்களை புத்தகமாக தருகிறேன்.

பொதுவாழ்வில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற இலக்கணத்தைத்தான் தர முடியும். மக்களை கவர என்ன செய்ய வேண்டும்? பவுடர் பூசிக்கொண்டு அலங்கார ஆடை அணிந்து கொண்டு மக்களை கவர முடியுமா என்றால் இல்லை. மக்கள் மனதை கவர இதே உணர்வை வெளிப்படுத்த வேண்டும். பகுத்தறிவை வெளிப்படுத்த வேண்டும். எந்த மக்களால் தன் நிலை உயர்ந்ததோ அந்த மக்களின் நிலை உயர பாடுபட வேண்டும். அந்த உணர்வை உறுதியாக கொண்டால் நம்மை யாரும் அசைக்க முடியாது. நம்மை யாரும் வெல்ல முடியாது. நடைபெற உள்ள தேர்தல் ஒரு சம்பவம்.

அந்த சம்பவத்தில் வெற்றிபெற்றால்தான் பெரும் போராட்டத்தில் நம்மால் வெற்றி பெற முடியும். மீண்டும் ஒரு கொடிய ஆட்சி வந்து விடக்கூடாது என்பதற்காக நம்மை நாம் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்காக தொண்டர்கள், தோழர்கள் பாடுபட வேண்டும். உதயசூரியன், கை, மாம்பழம், சிலிண்டர், மெழுகுவர்த்தி ஆகியவை நமது சின்னங்கள். இதை மக்களிடம் கொண்டு சென்றால் வெல்வது திண்ணம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Add Comment