கடையநல்லூர் அதிமுக வேட்பாளருடன் ஒருநாள்…

உங்களின் ஊழியன், தொகுதிக்கு சொந்தக்காரன் என்றும் கடையநல்லூர் தொகுதியின் உங்களின் ஒருவன் என்றும் கூறியபடி கடையநல்லூர் அதிமுக வேட்பாளர் செந்தூர்பாண்டியன் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.

கடையநல்லூர் சட்டசபை தொகுதியில் அதிமுக வேட்பாளராக புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் செந்தூர்பாண்டியன் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து திமுக கூட்டணியில் காங்., வேட்பாளர் பீட்டர் அல்போன்ஸ் எம்எல்ஏ போட்டியிடுகிறார். இவர்களுடன் பா.ஜ.,வேட்பாளர் பாண்டித்துரை, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் ராமையா மற்றும் எஸ்டிபிஐ வேட்பாளர் நெல்லை முபாரக், சுயேட்சைகளும் களத்தில் உள்ளனர். காங்கிரசுக்கும், அதிமுகவுக்கும் இடையே தான் கடும் போட்டி தேர்தல் களத்தில் காணப்படுகிறது. இரண்டு கட்சிகளுமே அரசியல் அனுபவமிக்கவர்களை வேட்பாளர்களாக களத்தில் இறக்கியுள்ளதால் இரு அணிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தை பல்வேறு யுக்திகளுடன் செய்து வருகின்றன.

இந்நிலையில் கடையநல்லூர் தொகுதி அதிமுக வேட்பாளர் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள அவருடன் சென்றபோது பார்த்து, ரசித்து, கேட்ட சம்பவங்களில் சில…

அதிமுக வேட்பாளராக போட்டியிடும் செந்தூர்பாண்டியன் செங்கோட்டையில் உள்ள அவரது வீட்டில் இருந்து நேற்று காலை குளித்து முடித்து இறைவனை வழிபட்டு வீட்டு மெயின் ஹாலில் காத்திருந்த கட்சியின் நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்களுடன் தொகுதி நிலவரம் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.கடையநல்லூர் தொகுதிக்கு வேட்பாளர் மட்டுமின்றி புறநகர் மாவட்டத்திலுள்ள 8 தொகுதிகளுக்கும் கட்சியின் மாவட்ட செயலாளர் என்ற அடிப்படையில் வந்திருந்த அனைத்து நிர்வாகிகளிடமும் அந்தந்த தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து அப்பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனைகள் வழங்கினர்.பின்னர் செங்கோட்டை நகராட்சி பகுதியில் விடுபட்டிருந்த 1வது வார்டில் தனது தேர்தல் பிரசாரத்தை துவக்கினார். ஒன்றிய செயலாளர் செல்லப்பன், நகர செயலாளர் தங்கவேலு, செங்கோட்டை குருசாமி, வக்கீல் ஐயப்பன்ராஜா மற்றும் சார்பு அணி நிர்வாகிகளுடன் அப்பகுதியில் பிரசாரம் செய்தார். செங்கோட்டை பகுதிக்கு சொந்தக்காரராக இருப்பதால் அப்பகுதி மக்கள் செந்தூர்பாண்டியனுக்கு மிகுந்த உற்சாக வரவேற்பு அளித்தனர். கூட்டணி கட்சியினரையும் தன்னுடன் அழைத்து சென்ற வேட்பாளருக்கு கூட்டணி கட்சி பிரமுகர்களும் மிகுந்த வரவேற்பு அளித்தனர்.

அதனை தொடர்ந்து அச்சன்புதூர் டவுன் பஞ்.,சில் வீதி வீதியாக கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஓட்டு சேகரித்தார். இருபுறமும் வேட்பாளரை பார்க்க நின்று கொண்டிருந்த ஆண், பெண்களிடம் கைகளை கூப்பியபடி இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என ஓட்டு சேகரித்தார். அச்சன்புதூர் பகுதிகளில் ஓட்டு சேகரித்து செந்தூர்பாண்டியன் பேசியதாவது:””உங்கள் ஆதரவுடன் கடையநல்லூர் தொகுதி எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டால் அச்சன்புதூர் பகுதியில் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும். இப்பகுதியில் அதிகமாக நடத்தப்பட்டு வரும் மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். அடவிநயினார் அணைக்கட்டு பகுதியிலிருந்து இப்பகுதிகளுக்கு வரக்கூடிய முறையான தண்ணீர் வருவதற்கான அனைத்து பூர்வாங்க நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இப்பகுதியின் பிரதான தொழிலாக விளங்கும் விவசாயத்திற்கு முன்னுரிமை வழங்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.அச்சன்புதூர் பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட வேட்பாளருடன் முன்னாள் அமைச்சர் நாகூர்மீரான், மாவட்ட சிறுபான்மை பிரிவு ஏ.எம்.கனி, டவுன் பஞ்., தலைவர் அயூப், ஒன்றிய செயலாளர் buy Lasix online செல்லப்பன் மற்றும் அதிமுக கூட்டணி கட்சியினர் உடன் சென்றனர். அப்பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட செந்தூர்பாண்டியனுக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் தனது பிரசாரத்தை வாவாநகரத்தில் முடித்து கொண்ட வேட்பாளர் செந்தூர்பாண்டியன் மாலையில் ஆய்க்குடி, சாம்பவர்வடகரை பகுதிகளில் பிரசாரத்தை துவக்கினார். ஏராளமான ஆண்களும், பெண்களும் கூடி நின்று வேட்பாளருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். இரண்டு டவுன் பஞ்., பகுதிகளிலும் திறந்த வேனில் வீதி வீதியாக சென்று ஓட்டுக்களை சேகரித்தார் செந்தூர்பாண்டியன்.தொடர்ந்து அப்பகுதியில் பீடி சுற்றிக் கொண்டிருந்த பெண்களிடம் வேனில் இருந்து இறங்கி சென்று ஓட்டு சேகரித்தார். “இப்பகுதியில் பீடி சுற்றும் தொழிலில் பெண்கள் அதிகமாக ஈடுபட்டுள்ளனர். பெண்களின் நலம் காக்க ஜெ.,ஆட்சிக்கு வந்தால் தான் நலமாக இருக்கும்’ என கூறி ஓட்டு சேகரித்தார்.

தொடர்ந்து ஆய்க்குடியில் செந்தூர்பாண்டியன் பேசியதாவது:-“”கடையநல்லூர் தொகுதியில் முக்கியம் பெற்ற பகுதியாக ஆய்க்குடி, சாம்பவர்வடகரை டவுன் பஞ்.,கள் இருந்து வருகின்றன. இந்த பஞ்.,களில் மக்களுக்கு தேவையான பல்வேறு அடிப்படை நிரந்தர திட்டங்கள் செயல்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. அத்தகைய திட்டங்கள் எல்லாம் இப்பகுதிக்கு கிடைத்திடும் வகையில் எனக்கு இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு போடுங்கள். கடையநல்லூர் தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றால் பீடித் தொழிலாளர்களின் நலன் தனிக் கவனமாக எடுத்து செல்லப்பட்டு அவர்களுக்கான அத்தனை நலத்திட்டங்களும் கிடைத்திட பாடுபடுவேன்” என்றார்.

ஓட்டு சேகரிப்பில் வேட்பாளருடன் மாவட்ட துணை செயலாளர் மூர்த்தி, தொகுதி செயலாளர் பொய்கை மாரியப்பன், சாம்பவர்வடகரை டவுன் பஞ்., தலைவி செல்வி, ஆய்க்குடி முத்துக்குட்டி, ராமநாதன் மற்றும் அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர்.

Add Comment