தமிழ்நாட்டுக்கு தெரியாத அன்னா !

அன்னா ஹஸாரே பற்றி ஆங்கில மீடியா ஓயாமல் பேச ஆரம்பித்திருக்கிறது ஆனால் தமிழ் மீடியாவிற்கு இது எல்லாம் என்ன என்றே தெரியவில்லை. எல்லா இடத்திலும் மக்கள் எப்படி எழுச்சியுடன் இருக்கிறார்கள் என்று காண்பிக்கிறார்கள், , ஜெய்பூர், குஜராத், பெங்களூர், கேரளா, மும்பை, டெல்லி என்று வருகிறதே தவிர சென்னை மட்டும் மிஸ்ஸிங். ஒரு ரூபாய் அரிசி, இலவச கலர் டீவி பார்த்துக்கொண்டு செல்லமே சீரியலில் எப்ப பாம் வெடிக்கும் என்று காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

அரசாங்கம் அதிகார மற்றும் ஊழல் போதையில் திளைத்துக் கிடக்கிறது, மக்கள்தான் அதனை மங்கச் செய்ய வேண்டும்”, என அன்னா ஹஸாரே தனது மூன்றாவது நாள் உண்ணா விரதத்தின் போது மக்களிடையே உரையாற்றினார்.

இவரது பேச்சைக் கேட்க ஜந்தர் மந்தரில் ஆயிரக் கணக்கில் கூடியிருந்த மக்கள் இவ்வார்த்தைகளைக் கேட்டு ஆர்ப்பணித்தனர். அன்னா ஹஸாரேவுக்கு ஆதரவாக இந்தியாவெங்கும் நடக்கும் பேரணிகளில் இதற்குமுன்பு இருந்திராத வகையில் திரளான கூட்டம் கூடுகிறது. பம்பாயில் நடைபெற்ற மாணவர் பேரணியில் அனைவருமே, “நானும் ஒரு அன்னா ஹஸாரே” என்று எழுதப்பட்ட தொப்பிகளை அணிந்திருந்தனர்.

இப்பொழுது ஹஸாரே மற்றும் குழுவினரது கோரிக்கைகள் இரண்டு. அவற்றில் ஒன்று அரசாங்கம் ஊழலுக்கெதிரான கடுமையான சட்ட மசோதாவை இரு அவைகளிலும் நிறைவேற்ற வேண்டும். இரண்டாவதாக, அச்சட்டவடிவை உருவாக்குபவர்கள் குழுவில் சிவில் சொசைட்டியைச் சார்ந்தவர்களும் இடம்பெற வேண்டுமென்பதாகும். இன்றைய தினம் இக்கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால் இக்குழுவிற்கு யார் தலைமையேற்பது என்பதில் சிக்கல் நீடிக்கிறது. சரத் பவார் மற்றும் அழகிரி ஏற்கனவே இந்த குழுவில் இடம்பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.நேற்று பவார் ராஜிநாமா செய்தார். என்ன காமெடி இது ?

ஹஸாரே உண்ணாவிரதம் துவங்கிய நொடி முதலிருந்தே, பிரதமர் உண்ணாவிரதத்தைக் கைவிடும்படி கேட்டுக் கொண்டு வருகிறார். இப்பொழுது அக்கோஷ்டியில் புதிதாக சோனியா காந்தி இணைந்துள்ளார். இன்று மாலை அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஹஸாரேவை உண்ணாவிரதத்தைக் கைவிடும்படி கேட்டுக் கொண்டுள்ளார். அவருக்கு என்ன பயமோ? ஒருவேளை சட்டம் நிறைவேற்றப்பட்டு விட்டால், குவாத்ரோச்சி மாட்டிவிடுவாரோ என்ற பயமாக இருக்கலாம்.

இந்நிலையில், அமீர் கான், ஜூஹி சாவ்லா போன்ற பாலிவுட் நட்சத்திரங்கள் ஹஸரேவைச் சந்தித்து தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர். ஆனால் தமிழகத்தில் அரசியல்வாதிகள் முதல் நடிகர்கள் வரை அனைவருமே கப் சிப். தமிழக முதல்வரும், விழாக்களில் அவருக்கு இருபுறமும் த்வார பாலகர்கள் போல் வீற்றிருக்கும் ரஜினிகாந்த், கமலஹாஸன் வரை அனைவருமே மெளனிகளாக இருக்கிறார்கள். ஓட்டுப் போடுங்கள், வருமானவரி கட்டுங்கள் என கலைஞர் தொலைக்காட்சியில் விளம்பரத்திற்கு வரும் இவர்கள், ஊழலுக்கெதிரான போராட்டத்திற்க்கு குரல் கொடுத்தால், எங்கே கலைஞருக்குக் கோபம் வந்து விடுமோ என்று பயப்படுவதிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. என்ன செய்வது?

அன்னா பற்றிய வாழ்க்கை குறிப்பு ( இன்று டைம்ஸ் நாளிதழில் தழுவி எழுதியது நன்றி: யதிராஜ் )

அவர் தம்மை ஒரு ஃபக்கீர் என்று அழைத்துக் கொள்கிறார் – எவ்வித உடமைகளோ, குடும்பமோ,வங்கியிருப்புக்களோ இல்லாத முற்றும் துறந்தவர். புனேவிலிருந்து 110 கிமீ தொலைவிலுள்ள அஹமத் நகர் மாவட்டம், ரலேகான் சித்தி கிராமத்தில் யாதவ் பாபா கோவிலையொட்டியுள்ள 10 x 10 அளவேயுள்ள ஒரு சிறிய அறையில்தான் வசிக்கிறார். கதராடை மட்டுமே உடுத்துவார்.

ஆனால் இந்த 71 வயது இளைஞர் தனது போராட்டத்தைத் துவங்கியவுடன், பம்பாய் முதல் தில்லிவரை அனைத்து தரப்பினரும் இவரைக் கூர்ந்து நோக்கத் துவங்கினர். அரசியல்வாதிகளும், இவரை விமர்சிப்பவர்களும் கூட, இவரால் மட்டுமே தேசிய அளவில் மக்களை ஒருங்கிணைத்து அரசாங்கத்தையே அசைக்க முடியும் என்று குரோதத்துடன் கூறுகின்றனர்.1975 இல் பொதுவாழ்க்கைக்கு வந்தது முதல், இவர் சமூகப் பிரச்சனைகளுக்காக எண்ணற்ற போராட்டங்களையும், பயணங்களையும், உண்ணா விரதங்களையும் மேற்கொண்டுள்ளார்.

மரணத்தைப் பற்றி நான் பயப்படவில்லை. என்னுடைய உயிரிழப்பால் கவலைப்பட எனக்கென்று உற்றார் எவரும் இல்லை, தவிர தேச நன்மைக்காக ஏதேனும் செய்யும்பொழுது உயிர்விடுவதையே நான் பெருமையாக நினைக்கிறேன் என்கிறார் இவர். நாட்டிலுள்ள ஊழலை ஒழிக்கவும், அரசாங்க அலுவலகங்களிலுள்ள மெத்தனத்தையும், தாமதங்களையும் அறவே ஒழிக்கவும், அதிகாரிகள் நியமனங்களில் வெளிப்படைத் தன்மையைக் கடைபிடிக்கவும், நேர்மையான அதிகாரிகள் அடிக்கடி இடமாற்றம் செய்யப்படுவதை எதிர்த்தும், நாம் இரண்டாவது சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கான தருணம் இது என்கிறார்.

அன்னா தனது தாய் லக்ஷ்மிபாயை 2002 ஆம் ஆண்டு இழந்தார். இவருக்கு திருமணமான இரு சகோதரிகளில் ஒருவர் பம்பாயிலும் மற்றொருவர் ஸங்கம்நெரிலும் இருக்கின்றனர். அன்னா ஒவ்வொருமுறையும் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்ளும் பொழுதும், அவர்களுக்குக் கவலைதான். ஆனால் அன்னாவோ பந்தங்களிலிருந்து எப்பொழுதும் தள்ளியே நிற்பதென்று உறுதி பூண்டுள்ளார். தமது தமக்கைகளின் வீட்டிற்கோ மற்ற உறவினர்களின் வீட்டிற்கோ செல்வதே இல்லை. ராலேகான் சித்தியில் அவருக்கு சொந்தமாக ஒரு வீடு இருக்கும்பொழுதிலும், கடந்த நாற்பது ஆண்டுகளில் ஒருமுறை கூட அங்கு அவர் சென்றதில்லை.
அஹமத் நகர் மாவட்டத்திலுள்ள ஃபிங்கர் கிராமத்தில் 1940 ஆம் ஆண்டு ஓர் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் ஹஸாரே. வறுமையின் காரணமாக 1952 இல் தனது பூர்வீக கிராமமான ராலேகான் சித்தியிலுள்ள தனது வீட்டிற்கு இடம்பெயர்ந்தார். அங்கு மக்கட்பேறில்லாத அவரது அத்தை அவரை வளர்த்ததோடு, அவரது படிப்பிற்கும் பொருளாதார ரீதியாக உதவி செய்தார். ஆனாலும் நிரந்தரமில்லாத பொருளாதாரச் சூழ்நிலைகளால் ஏழாம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டு பூ வியாபாரம் செய்து வந்தார்.

விரைவிலேயே ராணுவத்தில் சேர்ந்த ஹஸாரே, அங்கு ட்ரக் ஓட்டுனராகப் பயிற்சியெடுத்தார். மஹாத்மா காந்தி, ஆசார்ய விநோபா பாவே மற்றும் விவேகானந்தர் ஆகியோரது போதனைகளைப் படிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவராகத் திகழ்ந்தார். இதுதான் இவரை சமூக சிந்தனையின் போக்கில் திருப்பியது. 1965 இல் பாகிஸ்தானுடனான போரில் நிகழ்ந்த இரு துரதிருஷ்டவசமான Buy cheap Ampicillin நிகழ்வுகள், வாழ்வைப் பற்றிய இவரது எண்ணத்தையே முற்றிலுமாக மாற்றியது. பிறகு 1975 இல் ராணுவத்திலிருந்து விருப்ப ஓய்வு பெற்ற இவர் தனது சொந்த கிராமமான ராலேகான் சித்திக்குத் திரும்பினார். அப்போது அக்கிராமம் வறுமை, குற்றங்கள் மற்றும் குடி போதை போன்ற அசாதாரண சமூக விரோத நடவடிக்கைகளின் பிடியில் சிக்கியிருந்தது.

தனது சேமிப்பு அனைத்தையும் கிராமத்தின் வளர்ச்சிப் பணிகளுக்காக அற்பணித்த ஹஸாரே, மக்களிடம் குடிப்பழக்கத்தை விட்டொழிக்க வேண்டுமென பிரமாணமெடுத்துக் கொள்ளச் செய்தததோடு மட்டுமல்லாமல், குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையையு வற்புறுத்தி, சிறிய குடும்பத்தின் நன்மைகளைப் பிரச்சாரம் செய்தார்.

கிராமத்தினரை சுய தொழில் புரிய தூண்டிய ஹஸாரே, மழை நீர் சேகரிப்பின் அவசியத்தை வலியுறுத்தி கால்வாய்களையும், நீர் நிலைகளையும் ஏற்படுத்தச் செய்தார். இதன் மூலம் தண்ணீர் பிரச்சனை பெருமளவில் குறைந்ததோடு மட்டுமல்லாமல், தரிசு நிலங்கள் மேம்படவும் உதவின.

இவர் செய்த சாதனைகள் மூலம், இந்திரா ப்ரியதர்ஷினி வ்ருக்ஷமித்ரா, க்ருஷி பூஷணா, பத்மஸ்ரீ, பத்ம பூஷன், மகஸேசே,கேர் இண்டர்நேஷனல் ஆஃப் த யூஎஸ்ஏ, ட்ரான்ஸ்பேரன்ஸி இண்டர்நேஷனல் போன்ற விருதுகள் இவரைத் தேடி வந்து குவிந்தன. தென் கொரிய அரசாங்கம் கூட இவரது சாதனைகளுக்காக இவரைக் கவுரவித்தது.

ஆகஸ்டு 2003 இல் மஹராஷ்டிரத்தில் சில ஊழல் மந்திரிகளுக்கெதிராக இவர் நடத்திய காலவரையற்ற உண்ணா விரதத்தினால் அசைக்கப்பெற்ற மஹாராஷ்டிர அரசு அம்மந்திரிகளுக்கெதிரான ஊழல் புகார்களை விசாரிக்க ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி பி.எஸ். சாவந்த் தலைமையில் கமிஷன் ஒன்றை அமைத்தது. அக்கமிஷனின் விசாரணை அறிக்கை அம்மந்திரிகள் மீதான ஊழல் புகார்களை நிரூபிக்கவே, அம்மந்திரிகள் பதவி விலக நேர்ந்தது. தகவல் பெறும் உரிமைச் சட்டத்திற்காகவும் இவர் போராட்டங்கள், பிரசாரங்களை மேற்கொண்டுள்ளார். இக்கோரிக்கையின் மீது மஹாராஷ்டிர அரசு பாராமுகமாக நடந்து கொள்ளவே, 1997 இல் பம்பாயின் ஆஸாத் மைதானத்தில் ஒரு பெரிய போராட்டத்தை நிகழ்த்தினார். பிறகு மீண்டும் இதே கோரிக்கையை வலியுறுத்தி 2003 இல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் துவக்கிய பிறகு, கடைசியாக ஜனாதிபதி தகவல் அறியும் உரிமைச்சட்ட மசோதா வடிவில் கையெழுத்திட்டார்.

இவை தவிர, மஹாராஷ்டிர கூட்டுறவு அமைப்பிலுள்ள முறைகேடுகளைக் களைவதற்காக இவர் தொடர்ச்சியாக எட்டு மாதங்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாக சுமார் 125 கோடி ரூபாய் நிலுவையிலிருந்த வாராக் கடன் வசூலிக்கப்பட்டது. இன்னும் சுமார் 400 கோடி ரூபாய்கள் வசூலிக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

போன திங்கட்கிழமை வரை இவரைப் பற்றி பலருக்கும் (என்னையும் சேர்த்து) தெரியாமல், வடிவேலு விஜயகாந்த் தண்ணி பேச்சு பற்றி பேசிக்கொண்டு இருப்பது எவ்வளவு கேவலம் என்று நாம் சிந்திக்க வேண்டும்!

Add Comment