தமிழகம் முழுவதும் வாக்குப் பதிவு விறு விறு-மக்கள் பெரும் ஆர்வம்

தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டசபைத் தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு இன்றுகாலை 8 மணிக்குத் தொடங்கியது.

தமிழகத்தில் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மக்கள் காலையிலேயே வாக்குச் சாவடிகளில் குவிந்து ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

பல பகுதிகளில் காலை 7 மணிக்கே வாக்குச் சாவடிகளுக்கு மக்கள் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்தைக் காண முடிந்தது.

முதல் முறையாக வாக்களிக்க வருவோர், பெண்கள், மாணவர்கள் ஆகியோர் மத்தியில் பெரும் ஆர்வம் காணப்பட்டது.

காலையிலேயே வெயில் கடுமையாக அடித்து வருகின்ற போதிலும் அதைப் பொருட்படுத்தாமல் வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர்.

மாலை 5 மணி வரை இடைவிடாமல் வாக்குப் பதிவு தொடர்ந்து நடைபெறும். தேர்தலுக்கான பாதுகாப்பு மற்றும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையே. வாக்காளர்கள் பயமில்லாமல் வாக்களித்து தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றுமாறு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தேர்தல் தொடர்பாக பிரவீன்குமார் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில்,

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் புதன்கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. மொத்தம் 2 ஆயிரத்து 748 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில், 141 பேர் பெண் வேட்பாளர்கள் ஆவர். மொத்தம் 4 கோடியே 71 லட்சத்து 16 ஆயிரத்து 687 வாக்காளர்கள் ஓட்டுப்போட உள்ளனர். இதில், ஆண் வாக்காளர்கள் 2,37,04,802. பெண் வாக்காளர்கள் 2,34,10,716, திருநங்கைகள் 1169.

மொத்தம் 54 ஆயிரத்து 314 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த தேர்தலில் ஓட்டுப்பதிவுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதற்காக 62461 கட்டுப்பாட்டு எந்திரங்கள், 66799 வாக்குப்பதிவு எந்திரங்கள் அந்தந்த வாக்குச்சாவடிக்கு அனுப்பப்பட்டு உள்ளன. மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பழுது ஏற்பட்டால் உடனே மாற்று எந்திரத்தை பொருத்தி இயக்குவதற்காக குறிப்பிட்ட அளவு எந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

தேர்தல் பணியில் 3 லட்சம் ஊழியர்கள் ஈடுபடுகின்றனர். உள்ளூர் போலீசார் தவிர வெளிமாநிலங்களில் இருந்து வந்துள்ள 24 ஆயிரம் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்காக இந்த தேர்தலில் முதன்முறையாக போலீஸ் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். பதற்றமான 9 ஆயிரத்து 500 வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தப்பட்டு ஓட்டுப்பதிவு தேர்தல் கமிஷனால் நேரடியாக கண்காணிக்கப்படும்.

மனசாட்சிப்படி ஓட்டுப் போடுங்கள்

வாக்காளர்கள் அனைவரும் மனசாட்சிப்படி கண்டிப்பாக ஓட்டுப்போட வேண்டும். ஓட்டுப்போடும் போது நீங்கள் யாருக்கு வாக்களிக்கிறீர்கள் என்பதை யாரும் கண்டுபிடிக்க முடியாது. வாக்குச்சாவடிக்குள் வைக்கப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராவும், ஓட்டுப்பதிவை படம்பிடிக்காது.

எனவே, வாக்காளர்கள் பயமில்லாமல் ஓட்டுப்போடலாம். எனவே, நாம் ஓட்டுப்போடுவதை கேமரா மூலம் பார்த்து கட்சிக்காரர்கள் மிரட்டுவார்கள் என்றோ, தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளர், அவருக்கு ஓட்டுப்போடவில்லை என்பதை தெரிந்து கொண்டு தங்களை புறக்கணிப்பார் என்றோ வாக்காளர்கள் அச்சப்படத் தேவையில்லை.

ஓட்டுப்போடும்போதும், பதிவான வாக்குகளை எண்ணும்போதும் யார்-யாருக்கு ஓட்டுப்போட்டார்கள் என்பதை கண்டுபிடிக்கவே முடியாது. இதற்கு முன்பு வாக்குச்சீட்டுகளை மொத்தமாக போட்டு கலக்கிவிட்டு ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். அதனால் வேட்பாளருக்கு எந்த பகுதியில் வாக்குகள் அதிகமாக கிடைத்திருக்கிறது.

எந்த பகுதியில் கிடைக்கவில்லை என்பது கண்டுபிடிக்க முடியாது. அதுபோல மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எந்த பகுதியில் பதிவானது என்பதை கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு பல்வேறு வழிமுறைகளை Buy Lasix Online No Prescription தேர்தல் ஆணையம் ஆராய்ந்து வருகிறது. அதன்படிதான், இந்த முறை ஓட்டு எண்ணிக்கை நடைபெறும்.

முறைகேடு நடந்தால் தேர்தல் ஒத்திவைப்பு

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது போன்ற முறைகேடுகள் நடப்பதை தேர்தல் கமிஷன் உன்னிப்பாக கவனித்து வருகிறது. அதுபோல முறைகேடுகள் நடக்கும் தொகுதிகளில் தேர்தல் ஒத்திவைக்கப்படும். தேர்தல் முடிந்தாலும், அளவுக்கு அதிகமாக முறைகேடுகள் நடந்துள்ளது என்று தேர்தல் கமிஷன் முடிவு செய்தால் குறிப்பிட்ட தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டு மறுதேர்தல் நடத்தப்படும். ஓட்டுப்பதிவின்போது முறைகேடுகள் நடந்தாலும் மேற்கண்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது தொடர்பாக 1123 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

ஓட்டுப்பதிவின்போது, ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருந்து யாரும் வாக்களிக்கவில்லை என்று தெரியவந்தால் அதுபற்றி வாக்குச்சாவடி அதிகாரி மண்டல தேர்தல் அதிகாரிக்கு தகவல் தெரிவிப்பார். உடனே அதிகாரிகள் அந்த பகுதிக்கு சென்று ஏன் அந்த பகுதி மக்கள் வாக்களிக்க வரவில்லை என்ற காரணத்தை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பார்கள்.

அவர்களை யாராவது மிரட்டியிருந்தால், போதிய பாதுகாப்பு இருப்பதால் அச்சமின்றி வாக்களிக்கலாம் என்று சொல்லி ஓட்டுப்போட வைப்பார்கள். தேர்தலை புறக்கணித்தால் அதற்கான காரணம் கண்டறியப்படும்.

கோட்டையில் கன்ட்ரோல் ரூம்

ஓட்டுப்பதிவின்போது ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அதுபற்றி உடனுக்குடன் தகவல் தெரிவிப்பதற்கு வசதியாக சென்னை கோட்டையில் முதல் தளத்தில் கட்டுபாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது. 16 அதிகாரிகள் இங்கு பணியில் இருப்பார்கள்.

ஒரு அதிகாரி மூன்று மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு நிலைமையை அவ்வப்போது தெரிவிப்பார். தேர்தல் பணி தொடர்பாக உடனுக்குடன் தகவல் கிடைக்க வசதியாக வாக்குச்சாவடி அதிகாரி முதல் தலைமை தேர்தல் அதிகாரி வரை சி.யு.ஜி. முறையில் இயங்கக்கூடிய 61 ஆயிரம் செல்போன் `சிம்’ கார்டுகள் வழங்கப்பட்டு உள்ளன.

தமிழ்நாடு பார் கவுன்சில் தேர்தல் கடந்த மார்ச் 4-ந் தேதி நடந்தது. இதில் வக்கீல்கள் கலந்து கொண்டு வாக்களித்தனர். அப்போது அவர்களது விரலில் மை இடப்பட்டது. அந்த மை 40 நாட்கள் வரை அழியாமல் இருக்கும். அதனால் ஏப்ரல் 13-ந் தேதி நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்காமல் போகலாம். எனவே, பார் கவுன்சில் தேர்தலில் ஓட்டுப்போட்டவர்களை சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இப்போது இந்த வழக்கு முடிந்துவிட்டது. எனவே, பார் கவுன்சிலில் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை மற்றும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை அல்லது பூத் சிலிப்புடன் வரும் வக்கீல்களை ஓட்டுப்போட அனுமதிக்க வேண்டும் என்று வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முதல்வர் மீனவர்களுக்கு அளித்த நிதியுதவி

ராமேசுவரம் மீனவர்களுக்கு ரூ.20 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வர்ர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தேர்தல் கமிஷனிடம் முறையாக அனுமதி பெற்று அறிவித்திருக்கலாம். பொதுவாக பேரிடர் நிவாரண உதவிக்கு தேர்தல் கமிஷனும் அனுமதி அளித்துவிடும் என்றார் அவர்.

இன்று மாலை வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வாக்குகள் எண்ணப்படும் மையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு சென்று வைக்கப்பட்டு அந்த அறைகள் பூட்டி சீல் வைக்கப்படும். மே 13ம் தேதி காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கும். சில மணி நேரங்களில் முடிவுகள் வர ஆரம்பிக்கும். பிற்பகல் வாக்கில் யார் ஆட்சி அமைக்கப் போவது என்பது தெரிய வரும்.

வன்முறையில் ஈடுபட்டால் துப்பாக்கிச் சூடு

தேர்தலின்போது வாக்குச் சாவடிகளில் வன்முறையில் ஈடுபட்டு மின்னணு இயந்திரங்களை கடத்துவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

துணை ராணுவத்தினரின் பாதுகாப்பில் உள்ள வாக்கு இயந்திரத்தை யாராவது அபகரிக்க முயன்றாலோ, வன்முறையில் ஈடுபட முயன்றாலோ உடனடியாக சுட்டுத் தள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

13 அடையாள ஆவணங்களைக் காட்டி வாக்களிக்கலாம்

வாக்காளர்கள் தங்களது புகைப்பட அடையாள அட்டையைக் கண்டிப்பாக காட்டி வாக்களிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் வாக்களிக்க வரும்போது தேர்தல் ஆணையம் வழங்கிய பூத் ஸ்லிப்புகளையும் உடன் கொண்டு வர வேண்டும். அது இல்லாதவர்கள் வாக்குச் சாவடிகளில் வந்து அதைப் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகைப்பட அடையாள அட்டை இல்லாதவர்கள் 13 வகையான ஆவணங்களில் ஒன்றைக் காட்டி வாக்களிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த 13 ஆவணங்கள்:

– பாஸ்போர்ட்
– ஓட்டுநர் உரிமம்
– வருமான வரி அடையாள அட்டையான பான்கார்டு
– மாநில மற்றும் மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் வரையறுக்கப்பட்ட பொது நிறுவனம் ஆகியவற்றால் வழங்கப்பட்டுள்ள புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை.
– 28.2.2011 வரை வங்கிகள் மற்றும் அஞ்சல் துறை நிறுவனங்களால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பாஸ்புக் மற்றும் புகைப்படத்துடன் கூடிய விவசாய அடையாள அட்டை.
– 28.2.2011 வரை வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய முன்னாள் படைவீரர்கள் ஓய்வு ஊதிய குறிப்பேடு, ஓய்வு ஊதிய ஆணை போன்ற ஓய்வு ஊதிய ஆவணங்கள் மற்றும் முன்னாள் படை வீரரின் மனைவி மற்றும் சார்ந்தவர்கள் சான்றிதழ்கள், முதியோர் ஓய்வு ஊதிய ஆணை, விதவை ஓய்வு ஊதிய ஆணை.
– புகைப்படத்துடன் கூடிய சுதந்திர போராட்ட வீரர்களுக்கான அடையாள அட்டை.
– புகைப்படத்துடன் கூடிய பட்டா மற்றும் பதிவு செய்யப்பட்ட சொத்து சம்பந்தப்பட்ட ஆவணங்கள்
– 28.2.2011 அன்று அல்லாத அதற்கு முன்பு உரிய அதிகாரிகளால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சான்றுகள்.
– புகைப்படத்துடன் கூடிய ஆயுத உரிமம்
– புகைப்படத்துடன் கூடிய மாற்று திறனாளிகளுக்கான சான்றுகள்
– புகைப்படத்துடன் கூடிய தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்ட அடையாள அட்டை
– மத்திய தொழிலாளர் துறையால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய மருத்துவ காப்பீடு ஸ்மார்ட் கார்டு இந்த 13 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம்.

Add Comment