நாமெல்லாம் மனிதர்கள் தானே…………………?

நாமெல்லாம் மனிதர்கள் தானே…………………?

இப் படங்களைப் பார்க்கும் முன்பு நீங்களும், உங்கள் குழந்தைகளும் எவ்வளவு அதிர்ஷ்டசாலிகளென எண்ணிக் கொள்ளுங்கள்.

உலகில் சிறுவர் தினத்தன்று மட்டும்தான் சிறுவர்களையும், குழந்தைகளையும் கூர்ந்து கவனிப்பவர்களாக நாங்கள் இருக்கிறோம். அவர்கள் சின்னஞ் சிறிய மனிதர்கள். வளர்ந்தவர்களாகிய எம்மைப் பார்த்துத்தான் தங்கள் எதிர்கால அசைவுகளை வளர்த்துக் கொள்பவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். உலகை நல்லதாகவோ, தீயதாகவோ பார்க்கும் பார்வைகளை, சிறுவர்கள் பெரியவர்களிடமிருந்தே பெற்றுக் கொள்கிறார்கள்.

ஆனால், நாம் என்ன செய்கிறோம்? நமது குழந்தைகளின் தேவைகளுக்குக் கூட செவி மடுக்கவியலாதவர்களாக, நமது குழந்தைகளின் கேள்விகளுக்குக் கூட பதிலளிக்கவியலாதவர்களாக மிகுந்த வேலைப்பளுவுள்ளவர்களாக இருக்கிறோம். குழந்தைகளையும் கவனிக்கவியலாமல், தன்னையும் ஒழுங்காகக் கவனிக்கவியலாமல் ஓடியோடி உழைப்பதெல்லாம் யாருக்காக?

எங்களைச் சூழவுள்ள அழகான ஆடைகள், தீப்பெட்டிகள், சப்பாத்துக்கள், இரும்புச் சாமான்கள், உணவுப் பாத்திரங்கள் இப்படி எல்லாப் பொருட்களிலும் அப் பிஞ்சு விரல்களின் மெல்லிய ரேகைகள் படிந்தேயிருக்கின்றன. நாம் தான் அவற்றைக் கண்டு கொள்வதேயில்லை.

கீழேயுள்ள படங்களைப் பாருங்கள். தனது அடுத்த வேளை உணவுக்குக் கூட தானுழைத்துச் சம்பாதிக்க வேண்டிய நிலையிலுள்ள சிறுவர்கள் இவர்கள். சமூகத்தால் மீட்கப்பட வேண்டியவர்கள்.

# 11 வயதான ஜெய்னல் கடந்த மூன்று வருடங்களாக, இந்த வெள்ளி உணவுப் பாத்திரத் தொழிற்சாலையில் வேலை செய்கிறான். காலை 9 மணியிலிருந்து மாலை 6 மணி வரை செய்யும் வேலைக்கு மாதாந்தம்  கிட்டத்தட்ட 10 US$ அளவு பணம் கிடைக்கிறது. இவனது பெற்றோர்கள் மிகவும் வறியவர்களாக இருப்பதனால் இவனைக் கல்வி கற்க அனுப்ப வழியில்லை. இவ் வேலைக்காக பெற்றோரே இவனைச் சேர்த்து விட்டதாகவும் மாதாந்தம் பணத்தை மட்டும் அவர்கள் பெற்றுக் கொள்வதாகவும் இந்தத் தொழிற்சாலை உரிமையாளர் கூறுகிறார்.

# இரும்புத் தொழிற்சாலையில் வேலை செய்யுமொரு சிறுவன்

# எரிக்கப்பட்டு புகையெழும்பும் பாரிய குப்பைக் குவியலை, ஏழே வயதான ஜெஸ்மின், பனிக்கால குளிர் காலையொன்றில் கிளறுகிறாள். இக் குப்பைக்குள்ளிருந்து கிடைக்கும் பேப்பர், இரும்பு போன்ற பொருட்களை சேகரித்து விற்றுக் கிடைக்கும் பணத்தின் மூலம் தனது குடும்பத்துக்கு உதவுவதாகக் கூறுகிறாள்.

# கல்லுடைக்கும் தொழிற்சாலையொன்றில் வேலை செய்யும் சிறுவர்கள்

# செங்கல் தொழிற்சாலையொன்றில் வேலை செய்யும் சிறுவர்கள். ஒருவர் சுமக்கும் ஒவ்வொரு ஆயிரம் செங்கல்களுக்கும் 0.9 US$ கூலியாக் கொடுக்கப்படுகிறது.

# ரிக்ஷா உதிரிப் பாகங்கள் செய்யும் தொழிற்சாலையொன்றில் வேலை பார்க்கும் எட்டே வயதான முன்னாவின் கரங்கள் இவை. ஒரு நாளைக்கு பத்து மணித்தியாலங்கள் வேலை செய்தால், மாதமொன்றுக்கு 8 US$ சம்பளமாக இவனுக்குக் கொடுக்கப்படுகிறது. எப்பொழுதாவது மின்சாரம் தடைப்படும் நாட்களில் தனக்கு விளையாடவும் நேரம் கிடைப்பதாகக் கூறுகிறான்.

# கதவுகளின் இரும்புப் பாகங்களைச் செய்யும் தொழிற்சாலையொன்றில் வேலை செய்கிறான் பத்து வயதான ஸைஃபுர். தனது சக தொழிலாளியைப் போல அல்லாது தன்னால் முகத்தை மறைக்காது வேலை செய்ய முடியுமெனக் கூறுகிறான்.

# 13 வயதான சிறுவன் இஸ்லாம் வேலை செய்வது ஒரு வெள்ளி உணவுப் பாத்திரக் கடையில். கடந்த இரண்டு வருடங்களாக வேலை செய்துவரும் அவனுக்கு ஒரு நாளைக்கு வழங்கப்படும் இரண்டு வேளை உணவைத் தவிர பணமாக ஏதும் வழங்கப்படுவதில்லை.

# ரஸுவுக்கு எட்டு வயது. ரிக்ஷா தொழிற்சாலையில் வேலை செய்யும் இவனுக்கு ஒரு நாளைக்கு 10 மணித்தியாலங்களென ஒரு மாதம் தொடர்ந்து வேலை செய்தால் 7 US$ சம்பளமாக வழங்கப்படுகிறது.

விளையாட்டுக்களின் மூலமும், சமூகத்தைக் கூர்ந்து கவனித்தும் தங்கள் உள விருத்திக்களை அதிகரித்துக் கொள்ள வேண்டிய பருவத்திலுள்ள இவர்களைப் போன்ற பல இலட்சக்கணக்கான சிறுவர்கள் பலர் இன்று பல்வேறு வற்புருத்தல்களின் கீழ் இவ்வாறாகத் தொழில்புரிய நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலருக்கு சம்பளமோ, போதியளவு பாதுகாப்போ இல்லை.

உலகில் அனேகமான பெரிய மனிதர்கள் மனசாட்சி சிறிதேனுமின்றி அதிக இலாபத்துக்காகவும், Buy Cialis இலவச உழைப்புக்காகவும் சிறுவர்களைப் பயன்படுத்தி தங்களை வளர்த்துக் கொள்கின்றனர்.

உலகில் பல்வேறுபட்ட தொழில்களிலும் பல சிறுவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். உங்களுக்காகவே உழைக்கும் இவர்கள் சின்னஞ்சிறிய வேலைக்காரர்கள்.

உள்ளுக்குள் எந்த உறுத்தலுமின்றி இந்தக் கண்களை நேராகப் பார்க்க உங்களால் முடிகிறதா?
Mohamed musthafa…

Add Comment