‘மீண்டும் திமுக ஆட்சி’ – ஹெட்லைன்ஸ் டுடே, ஸ்டார் நியூஸ்; ‘அதிமுக ஆட்சி’ – சிஎன்என் ஐபிஎன்

தமிழக சட்டமன்ற தேர்தலில் எந்தக் கூட்டணி பெருவாரியான இடங்களை வென்று ஆட்சியைக் கைப்பற்றும் என்று உறுதியாக கணித்துக் கூற பிரபல செய்தி சேனல் நிறுவனங்களிடையே பெரும் குழப்பமே ஏற்பட்டுள்ளது.

நேற்று வெளியான நான்கு தொலைக்காட்சிகளின் எக்ஸிட் போல் முடிவுகளில் இரண்டு திமுகவுக்கு சாதகமாகவும், இரண்டு அதிமுகவுக்கு சாதகமாகவும் உள்ளது.

தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளில் நக்கீரன் சர்வே தவிர, பிற கருத்துக் கணிப்புகளில் அதிமுக அதிக இடங்களைப் பெறும் என்று கூறப்பட்டது. ஆனால் தேர்தலுக்குப் பிந்தைய ஹெட்லைன்ஸ் டுடே கணிப்பில் திமுகவுக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்று கூறப்பட்டது.

இதற்கிடையே பல்வேறு செய்திச் சேனல்களும் எக்ஸிட் போல் எனப்படும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை எடுத்து வந்தன. நேற்று மாலை வரை தேர்தல் கணிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்ததால், மாலை 5 மணிக்குப் பிறகு கணிப்புகளை வெளியிட ஆரம்பித்துள்ளன.

சிஎன்என் – ஐபிஎன்:

முதல் கட்டமாக சிஎன்என் -ஐபிஎன் – தி வீக் தனது எக்ஸிட் போல் முடிவுகளை வெளியிட ஆரம்பித்துள்ளது. இரவு 9.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த கருத்துக் கணிப்பில் அதிமுக கூட்டணிக்கு 132 இடங்கள் வரை கிடைக்கும் என்றும், திமுக கூட்டணிக்கு 114 இடங்கள் வரை கிடைக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 70 தொகுதிகளில் 4167 வாக்காளர்களைச் சந்தித்து இந்த எக்ஸிட் போலை நடத்தியுள்ளது சிஎன்என் ஐபிஎன் – திவீக் குழு.

இவர்களில் 68 சதவீதம் வாக்காளர்கள் திமுக ஆட்சி திருப்தியாக இருந்ததாக கருத்து தெரிவித்துள்ளனர். 26 சதவீதம் பேர் அதிருப்தி என கூறியுள்ளனர்.

திமுக ஆட்சியில் சாலை வசதி மேம்பட்டிருந்ததாக 82 சதவீதத்தினரும், குடிநீர் வசதி சிறப்பாக செய்யப்பட்டதாக 76 சதவீதத்தினரும், கல்வி விஷயத்தில் அரசின் செயல்பாடு சிறப்பாக இருந்ததாக 77 சதவீதத்தினரும், அரசு மருத்துவமனை செயல்பாடு திருப்தியாக இருந்ததாக 70 சதவீதத்தினரும் கருத்து தெரிவித்திருந்தனர்.

மின்சார வசதி நன்றாக உள்ளது என 52 சதவீதத்தினர் கருத்து கூறியிருந்தனர். 48 சதவீதத்தினர் மோசம் என்று கூறியிருந்தனர்.

அதேபோல சட்டம் ஒழுங்கு குறித்தும் 60 சதவீதத்திற்கு உட்பட்டவர்கள்தான் திருப்தி தெரிவித்திருந்தனர்.

கருணாநிதிக்கு ஆதரவு:

யார் முதல்வராக வரவேண்டும் என்ற கேள்விக்கு கருணாநிதிக்கு சாதகமாக 48 சதவீதத்தினரும், ஜெயலலிதாவுக்கு ஆதரவாக 38 சதவீதத்தினரும் கருத்து தெரிவித்திருந்தனர்.

யார் மோசமான முதல்வர் என்ற கேள்விக்கு ஜெயலலிதா என 34 சதவீதம் பேர் தெரிவித்திருந்தனர். கருணாநிதி என 33 சதவீதத்தினர் கூறியிருந்தனர்.

அதேசமயம், மக்கள் மத்தியில் செல்வாக்கு உள்ளவர்கள் யார் என்பதில் கருணாநிதியை விட ஜெயலலிதாவுக்கு 5 சதவீத ஆதரவு அதிகம் கிடைத்துள்ளது.

யார் ஆட்சியில் குடும்ப ஆதிக்கம் அதிகம் என்ற கேள்விக்கு கருணாநிதி ஆட்சியில் என 47 சதவீதத்தினரும், ஜெயலலிதா ஆட்சியில் என 18 சதவீதத்தினரும் கூறியிருந்தனர்.

2 ஜி விவகாரம்…

2 ஜி முறைகேட்டை இந்த தேர்தலை பாதிக்கும் விஷயமாக 6 சதவீதத்தினர்தான் Bactrim online எடுத்துக் கொண்டதாக இந்த கணிப்புகளில் தெரிய வந்துள்ளது. 2ஜி காரணமாக தனது வாக்கை அதிமுக அணிக்கு போட்டதாக 7 சதவீதம் பேர் தெரிவித்திருந்தனர்.

இந்த ஊழலுக்கு யார் முக்கிய காரணம் என்ற கேள்விக்கு 53 சதவீதத்தினர் ஏ ராஜா என்றும், 48 சதவீதத்தினர் கனிமொழி என்றும் கூறியிருந்தனர். 34 சதவீதத்தினர் கருணாநிதியையும் 32 சதவீதத்தினர் தயாளு அம்மாளையும் காரணமாக சுட்டிக் காட்டியுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் முடிவுக்கு வரும் கம்யூனிஸ்ட் ஆட்சி…

மே வங்க மாநிலத்தில் 35 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்து வரும் கம்யூனிஸ்டுகளின் ஆதிக்கத்துக்கு இந்தத் தேர்தலில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும், மம்தா பானர்ஜி தலைமையிலான திரினாமூல் காங்கிரஸ் 169 தொகுதிகள் வரை பிடிக்கும் என்று தெரியவந்துள்ளது.

அஸ்ஸாமில் மீண்டும் தருண் கோகாய் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமையும் என்றும், கேரளாவில் அச்சுதானந்தனே மீண்டும் முதல்வராக வர மக்கள் விரும்புவதாகவும் இந்த சேனல் தெரிவித்துள்ளது.

ஹெட்லைன்ஸ் டுடே:

திமுக 130 இடங்கள் வரை பெறும் என்கிறது ஹெட்லைன்ஸ் டுடே – ஓஆர்ஜி கணிப்பு. இதுவரை இவர்கள் மூன்று கருத்துக் கணிப்புகளை நடத்திவிட்டனர். அவற்றில் இரண்டில் திமுகவுக்கு சாதகமான முடிவுகள் வந்துள்ளன.

இவர்கள் கணிப்புப் படி, திமுக கூட்டணி – 115 முதல் 130 வரை இடங்களைப் பெற்று ஆட்சியமைக்கும். அதிமுக கூட்டணிக்கு 105 முதல் 120 வரை கிடைக்க வாய்ப்புள்ளது.

ஆட்சியைப் பிடிப்பதில் திமுக – அதிமுக கூட்டணிகள் இடையே கடும்போட்டி நிலவும் என்றும் ஆனால், திமுகவுக்கு வாய்ப்பு அதிகம் என்றும் கூறப்பட்டுள்ளது.

நியூஸ் எக்ஸ்:

நியூஸ் எக்ஸ் சேனல் முடிவுகளில் அதிமுக கூட்டணிக்கு 176 இடங்கள் வரை கிடைக்கும் என்றும், திமுக கூட்டணிக்கு 64 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. ஆனால் சில நிமிடங்களுக்குப் பிறகு இந்த கணிப்பு முடிவு வெளியிடுவதை நிறுத்திக் கொண்டது இந்த சேனல். 2 ஜிதான் திமுகவுக்கு பெரும் வீழ்ச்சி என்று கூறியது இந்த சேனல்.

ஸ்டார் நியூஸ் – நீல்சன் கணிப்பு:

ஸ்டார் நியூஸ் மற்றும் நீல்சன் மேற்கொண்ட கணிப்பின்படி திமுக கூட்டணி 124 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், அதிமுக கூட்டணி 110 தொகுதிகளில் வெல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது. எப்படியும் மீண்டும் திமுக ஆட்சியே தமிழகத்தில் அமையும் என்கிறது ஸ்டார் நியூஸ் கணிப்பு.

Add Comment