அ.தி.மு.கவின் அசுர வெற்றியும், தி.மு.கவின் நாக் அவுட் தோல்வியும்!

மிழகத்தில் அ.தி.மு.க வெற்றி பெறும் என்று கணித்த எக்சிட் போல் கணிப்புகள் கூட இந்த பிரம்மாண்ட வெற்றியை கணிக்க முடியவில்லை. இதுவரை எங்கள் கணிப்புதான் தமிழக தேர்தல் முடிவுகளோடு ஒத்துப் போனது என்று மார்தட்டிய நக்கீரன் பத்திரிகை இப்போது மூக்குடைபட்டிருக்கிறது. மொத்தத்தில் தமிழக மக்களின் முடிவுகளை துல்லியமாக எவராலும் கணிக்க முடியவில்லை. ஆனால் பொதுவில் அ.தி.மு.க வெற்றி பெறும் என்பதை பொதுமக்கள் முதல் பத்திரிகையாளர்கள், சில பதிவர்கள் வரை பேசி வந்தனர். அவர்களும் கூட இந்த அளவு வெற்றியை கணித்திருக்கவில்லை.

இதில் என்.டி.டி.வி ஹிண்டு நிருபர் ஒருவர் டெல்லியில் நடந்த அண்ணா ஹாசாரே போராட்டம் தமிழக வாக்காளர்களின் ஜனநாயக கடமையை எழுப்பி விட்டிருக்கும் என்று கூறினார். இனி இது போன்ற அபத்தங்கள் பல முனைகளிலிருந்தும் வரும். ஜெயலலிதாவின் வெற்றியை சிலாகித்து புதுப்புதுக் கண்டுபிடிப்புகள் குவியலாம்.

தமிழகத்தில் நடந்த அதிக வாக்குப்பதிவு, முதல் முறை வாக்களிப்பவர்கள், விலைவாசி உயர்வு, மின்தடை என்று பல காரணங்களால், அ.தி.மு.க இந்த பெரு வெற்றியை பெற்றிருப்பதாக பத்திரிகையாளர்கள் கூறுகின்றனர். இவற்றில் உண்மை இல்லாமல் இல்லை. எனினும் பலரும் கருணாநிதி குடும்ப ஆட்சி கொள்ளையை மட்டும் முக்கிய பிரச்சினையாக பார்த்திருந்தனர். ஆனால் உள்ளூர் அளவில் பல அமைச்சர்களும், தலைவர்களும், பஞ்சாயத்து தலைவர்கள், வார்டு கவுன்சிலர்கள் அனைவரும் முழு வீச்சில் கொள்ளையடித்தது, ஐந்தாண்டுகளுக்குள் ஏகப்பட்ட பினாமி தொழில்கள், கல்வி நிறுவனங்களை உருவாக்கியது என்று முழு தமிழகத்திலும் தி.மு.க கும்பல் மக்களிடையே மிகுந்த கெட்ட பெயரை சம்பாதித்திருந்தது.

இலவசங்கள், காப்பீட்டு திட்டம் போன்ற சலுகைகளை விட விலைவாசி உயர்வு மக்களை வெகுவாக அச்சுறுத்தி வந்தது. வருமானம் உயர்ந்திருப்பதால் விலைவாசியெல்லாம் பிரச்சினையில்லை என்று தி.மு.க அமைச்சர்கள் திமிராக பேசிவந்தனர். அதே போல கல்வி கட்டண உயர்வு, சுயநிதிக் கல்லூரி கட்டணக் கொள்ளை போன்றவை காரணமாக நடுத்தர வர்க்கமும் இந்த ஆட்சி மீது வெறுப்புற்றிருந்தது. சன்.டி.வி, கலைஞர் டி.வி, உதயநிதி ஸ்டாலின், தயாநிதி அழகிரி இவர்களது ஏகபோகத்தால் சிறைபட்டிருந்த சினிமா உலகிலும் கடும் எதிர்ப்பு இருந்தது.

இத்தகைய கடும் மக்கள் விரோத அரசாங்கத்தை தூக்கியெறிய வைக்குமளவுக்கு இங்கே அ.தி.மு.க எந்த போர்க்குணமிக்க போராட்டத்தையும் நடத்தவில்லை. சில அடையாள போராட்டங்களை நடத்தி விட்டு, அம்மா தரும் அறிக்கைகளை வைத்தே அந்தக் கட்சி செயல்பட்டு வந்தது. இதில் முக்கால்வாசி நாட்கள் கொடநாட்டில் ஓய்விலிருந்த ஜெயலலிதாவின் ‘திறமை, அர்ப்பணிப்பு’ காரணமாக இந்த வெற்றி கிடைக்க வில்லை என்பதை இங்கே வலியுறுத்தி சொல்கிறோம்.

தி.மு.கவின் மீது மக்களுக்கு இருந்த அளவு கடந்த கோபமே இப்படி வெளிப்பட்டிருக்கிறது. ஒரு வேளை இந்தத் தேர்தலில் ஜெயா தோற்று தி.மு.க வெற்றி பெற்றிருந்தால், முழு தமிழகத்தையும் மொட்டையடித்திருப்பார்கள். அதையெல்லாம் மக்கள் எண்ணிப் பார்த்திருக்க வேண்டும். ஆக மொத்தம் அ.தி.மு.கவின் வெற்றி என்பது எதிர்மறையில் கிடைத்த ஒன்றாகும். அதில் அவர்களது சொந்த பங்கு எதுவும் இருக்கவில்லை.

சொல்லப்போனால் வைகோவை வெளியேற்றியது, கூட்டணியினரை அவமதிக்கும் வண்ணம் வேட்பாளர் பட்டியலை முந்தி வெளியிட்டது போன்றவற்றால் கெட்ட பெயரைத்தான் அக்கட்சி சம்பாதித்திருந்தது. இருப்பினும் மக்களுக்கு வேறு வழியில்லை என்ற அவலத்தில் ‘புரட்சித் தலைவி’ மீண்டும் ஆட்சி அமைக்க வருகிறார்.

தி.மு.க கூட்டணியில் காங்கிரசின் தோல்வி அனைவரும் எதிர்பார்த்த ஒன்றுதான் என்றாலும், பா.ம.க, வி.சி அனைவரும் மண்ணைக் கவ்வியிருக்கிருக்கிறார்கள். இந்த காரியவாதிகள் தோற்றார்கள் என்று மகிழ்ச்சியடைய முடியாதபடி தே.மு.தி.க எனும் காரியவாதிக் கட்சி பெருவெற்றி பெற்றிருக்கிறது. அதாவது இதுதான் எதிர்க்கட்சியாம்.                                அந்த வகையில் தி.மு.கவை எதிர்க்கட்சி என்ற தகுதியில் வைப்பதற்கு கூட மக்கள் விரும்பவில்லை என்று தெரிகிறது.

இந்தத் தோல்வி அப்பாவி உடன்பிறப்புகளுக்கு வேண்டுமானால் அதிர்ச்சியாக இருக்குமே அன்றி அதே அளவு அதிர்ச்சி தி.மு.க தலைவர்களுக்கு இருக்காது என்றுதான் தோன்றுகிறது. தி.மு.க ஆட்சிக்காலத்தில் உள்ளூர் அளவில் அனைத்து தொழில், காண்ட்ராக்டுகளும் அ.தி.மு.கவினருக்கும் கொடுக்கப்பட்டு நடந்தது போல இந்த ஆட்சியிலும் உள்ளூர் தி.மு.க தலைவர்களை அ.தி.மு.கவினர் கவனிப்பார்கள். அந்த வகையில் தி.மு.க தலைவர்களது தொழில்கள் செவ்வனே நடைபெறும். தி.மு.க அமைச்சர்களெல்லாம் தேவையான கப்பத்தை ஜெயா கும்பலுக்கு கட்டி விட்டு தொழிலை தொடர்ந்து நடத்துவார்கள்.

அசுர பலத்தில் வந்திருக்கும் அ.தி.மு.க ஆட்சி எப்படியிருக்கும் என்பதையும் விளக்கத் தேவையில்லை. ஏற்கனவே ஜெயாவின் இரண்டு இருண்ட காலத்தை தமிழகம் பார்த்திருக்கிறது. கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி தனது தொண்டர்கள் வீட்டின் முன்பு, தெருவில் மக்களோடு மக்களாக கலந்து வெற்றியை பகிர்ந்து கொள்கிறார். ஜெயலலிதாவோ தூங்கிக் களைத்த முகத்தோடு பால்கனியில் மேலிருந்தவாறு கீழே குதிக்கும் தொண்டர்களை பார்த்து இரண்டு விநாடி, இரட்டை விரல்களைக் காட்டிவிட்டு சென்று விடுகிறார். அதன்படி வரும் ஆட்சி இப்படித்தான் இருக்குமென்பதற்கு இந்த படிமமே ஒரு நல்ல விளக்கம்.

கருணாநிதி குடும்பத்தின் ஏகபோக தொழில்களை ஓரளவுக்கு கப்பம் வாங்கி அனுமதித்துவிட்டு ஜெயா சசி கும்பலின் ஏகபோகம் ஆரம்பிக்கும். மறுகாலனியாக்கத்தின் கொள்ளையில் பொறுக்கி தின்பதற்கு தற்போது வாய்ப்பு அதிகமென்பதால் இவர்கள் சட்டபூர்வமாகவும், சட்ட விரோதமாகவம் வெகுவேகமாக கல்லா கட்டுவார்கள். ஐந்து ஆண்டுகள் ஆட்சியிலில்லாத வறட்சியை ஐந்து மாதங்களில் கூட தீர்த்துக் கொள்வார்கள்.

மீண்டும் போலீசின் நேரடி அதிகார Buy Levitra Online No Prescription ஆட்சி வரும். ஜனநாயகம், பத்திரிகை சுதந்திரம், ஈழ ஆதரவு முதலியவையெல்லாம் மிரட்டல் கண்காணிப்பில் வைக்கப்படும். இதற்கு மேல் ஜெயலலிதா, சசிகலா என்ன விரும்புகிறார்கள், எப்போது என்ன செய்வார்கள் என்பது யாருக்கும் தெரியாது. அந்த திகில் நிறைந்த அடக்குமுறைகளுக்கு நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.

அரசு ஊழியர், தொழிலாளர்கள், மாணவர்கள் அனைவரும் தங்களது நலனுக்காக போராடுவது குதிரைக் கொம்பாக மாற்றப்படும். மீறி போராடினால் கடும் அடக்குமுறையை சந்திக்க வேண்டியிருக்கும். ஆண்டுகள் மாறினாலும் ஜெயலலிதா மாறமாட்டார். இது போக துக்ளக் சோ போன்ற குருநாதர்கள் என்ன திட்டமெல்லாம் வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. பார்ப்பனியத்தின் வேலைத்திட்டங்களெல்லாம் மறைமுகமாகவோ,நேரடியாகவோ கொண்டு வருவதற்கும் வாய்ப்புகள் பல உண்டு.

மொத்தத்தில் பிசாசு ஆட்சி அகன்று, பேயாட்சி வந்திருக்கிறது. அதையும் தமிழக மக்கள் விரைவில் புரிந்து கொள்வார்கள்.

நன்றி வினவு.காம்

Add Comment