திருத்தமுடியாது… வீழ்த்த முடியும்!

தேர்தல் முடிவுகளும்.. தேறாத கட்சிகளும்…

நடந்து முடிந்திருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வின் அரசியல், வேரோடு வீழ்த்தப்பட்டுள்ளது. அலைக்கற்றை ஊழலை, இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்கி அவர்களே மக்களுக்குப் புரியவைத்துவிட்டார்கள். அரசியல் அதிகார மையமாக, கருணாநிதி குடும்பம் கிளை பரப்பிக் கிடந்ததை மக்கள் ஏற்கவில்லை. விலைவாசி உயர்வு, மின்வெட்டு, மணல் கொள்ளை, மீனவர்கள் படுகொலை, ஈழத்தமிழர் இன அழிப்புக்கு துணை நின்றது, திரைப்படத் துறையில் குடும்ப ஆதிக்கம், சட்டம் ஒழுங்கு கெட்டுப் போனது – இவை எல்லாமே உண்மை.

தி.மு.க.விற்கு முட்டுக் கொடுத்து, தவறுகளுக்கு உடந்தையானதால், விடுதலைச் சிறுத்தைகள், பாட்டாளி மக்கள் கட்சி போன்றவை வீழ்த்தப்பட்டுள்ளன. சார்பு நிலை அரசியலால் திருமாவளவனும், மருத்துவர் ராமதாசும் உடன்கட்டை ஏற வேண்டிய அவலம் நிகழ்ந்து விட்டது. அதே சார்பு நிலை அரசியலால், தேர்தலுக்கு முன்பே வைகோ வீழ்த்தப் பட்டார்.

இடதுசாரிகள் 34 ஆண்டுகள் வெற்றிக்கொடி கட்டிய மேற்கு வங்கம், உலகமயமாக்கலில் தழுவிப்போன குற்றத்திற்காக, பறி போயிருக்கிறது. கேரளமும் தோல்வியைத் தழுவியிருக்கிறது.

இவ்வளவு காலமும், சிறுபான்மை மக்களின் காவலனாக தன்னை காட்டிக் கொண்ட தி.மு.க. இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் துறைமுகம், வாணியம்பாடியிலும்கூட தோற்று இருக்கிறது.

“ஜெயலலிதாதான் வேண்டும்” என்று யாரும் வாக்களிக்கவில்லை. “கலைஞர் அரசே வேண்டாம்” என்றுதான்… நின்றிருந்த எதிரணிக்கே வாக்களித்திருக்கிறார்கள். அ. தி. மு. க. வைப் போலவே, கருணாநிதி எதிர்ப்பு ஒன்றையே மையப்படுத்தி, கொள்கை ஏதுமில்லா… விஜயகாந்தும் வென்று இருக்கிறார்.

இது ஆரோக்கியமான அரசியல் போக்கா என ஆராய வேண்டி உள்ளது. எதிர்க்கட்சித் தலைவராக விஜயகாந்த் தகுதியானவர்தானா என்ற கேள்விகள் முளைப்பது… தவிர்க்க இயலாததாகிறது. Doxycycline online இந்த இடத்தை வைகோ, ராமதாஸ், திருமாவளவன், தா.பாண்டியன் போன்ற தகுதியாளர்களால் நிரப்ப முடியாத சூழல் ஏன் ஏற்பட்டது?

தங்களுக்கான தலைவர்களை இன்னமும் தமிழன், திரைப்பட கொட்டகையில் தேடுவது ஏன்?

நம் சமகாலத்தில் வாழும் தோழர்.நல்லக்கண்ணு போன்ற மகத்தான மாமனிதர்களை அதிகாரம் சென்றடையாதது ஏன்?

கருணாநிதியிடம், ஜெயலலிதாவிடமும் மாறி மாறி சரணடையும் போக்கு எப்போது மாறும்?

கண்முன் உலவும் குற்றவாளிகளில் யாராவது ஒருவர்க்குத்தான், அவரின் கட்சிக்கேதான்… ஓட்டுப் போடுவேன் என்கிற மக்களின் அலட்சிய மனநிலையால் எற்படும் விபரீதங்கள் என்ன?

கொள்கையும், ஆட்சி அதிகாரமும் வேறு வேறு திசைகளில் இயங்குவது ஏன்?

விலைவாசி உயர்வின் உண்மையான ஊற்றுக்கண் எது?

உலகமயமாக்கல் எனும் பன்னாட்டு நிறுவனங்களின் படையெடுப்பின் தீமைகள் என்ன?

இயற்கையை சுரண்டிப் பிழைக்கும் கும்பலிடம் இருந்து, நாட்டை எப்படிக் காப்பது?

இதற்கெல்லாம் விடை காண வேண்டிய பொறுப்பு நம் அனைவர் மீதும் கடமையாகிறது.
நம்மை மீட்க தேவதூதர்கள், தீர்க்கதரிசிகள் வர மாட்டார்கள்.
நம் அரசியல் விடுதலையை நாமே வென்றாக வேண்டும்.

Add Comment