முதல் வகுப்பு படிக்க மகனுக்கு பீஸ் கட்ட பணம் இல்லாமல் தாய் தீக்குளித்து தற்கொலை-பரபரப்பு மரண வாக்குமூலம்.

முதல் வகுப்பு படிக்க மகனுக்கு பள்ளிக் கட்டணம் செலுத்த முடியாமல் தாய் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். காப்பாற்ற முயன்ற தந்தையும் படுகாயமடைந்தார். ரூ.12 ஆயிரம் கட்டணத்தில் ரூ.5 ஆயிரம் செலுத்திவிட்டோம். ரூ.7 ஆயிரம் செலுத்த வழி தெரியாததால் இந்த முடிவை எடுத்ததாக தாய் மரண வாக்குமூலம் அளித்துள்ளார்.

கோவை பீளமேடு மசக்காளிபாளையத்தை சேர்ந்தவர் தர்மராஜ். பஞ்சு குடோன் கலாசி தொழிலாளி. மனைவி சங்கீதா(29). தனியார் நிறுவன தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு சமையலறையில் சங்கீதா, மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். அவரை தர்மராஜ் காப்பாற்ற முயன்றார். இருவரும் படுகாயமடைந்தனர். கோவை அரசு மருத்துவமனையில் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதில் சங்கீதா சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்தார். முன்னதாக அவர் கோவை கிழக்கு போலீசாரிடம் அளித்த மரண வாக்குமூலம்:

நானும், கணவரும் காதலித்து கலப்பு திருமணம் செய்தோம். இருவரும் வேலைக்கு செல்கிறோம். கடின உழைப்பாளிகள். கணவர் எந்த கெட்டப்பழக்கமும் இல்லாதவர். அவரது சம்பளத்தை அப்படியே என்னிடம் கொடுத்து விடுவார். இருவரின் வருமானத்தை கொண்டு மகன் தர்ஷனை உப்பிலிபாளையத்திலுள்ள ஒரு தனியார் பள்ளியில் எல்கேஜி, யுகேஜி படிக்க வைத்தோம். எங்கள் வருமானத்தின் பெரும்பகுதி பள்ளிக் கட்டணத்துக்கே Lasix No Prescription சென்று விடுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு அதே பள்ளியில் மகன் முதல் வகுப்பு செல்கிறான். ரூ.12 ஆயிரம் கட்டணம் செலுத்துமாறு கூறினர்.

சேமித்த பணத்தில் ரூ.5 ஆயிரம் செலுத்திவிட்டோம். மீதி தொகையை செலுத்த முடியவில்லை. பணத்தைக் கட்ட வழி தெரியவில்லை. இதனால் தீக்குளித்தேன். இவ்வாறு சங்கீதா தெரிவித்துள்ளார். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

பள்ளி கட்டணம் செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Add Comment