முடிவுகள் ஆரம்பங்கள் ஆகட்டும் !

இது இரண்டாவது முறை. மெல்லிய தகரத்தைக் காற்றில் வேகமாக அலைத்தது போல, என் ஜன்னலுக்கு வெளியே படபடவென்று பட்டாசுகள் வெடித்து இரவைக் கிழிப்பது இது இரண்டாவது முறை. இரவு முழுக்க இது தொடரும் என்றே எனக்குத் தோன்றியது. ஜனநாயகம் தருகிற சின்னச் சின்ன்ன சந்தோஷங்களில் இதுவும் ஒன்று. பட்டாசுக்குப் பக்கத்துணையாக பாடல்கள் ஒலிக்கத் துவங்கின. சரித்திரம் மாறுதுங்க, எல்லாம் சரியாப் போகுதுங்க என்று சினிமாப் பாடல் சத்தியம் செய்தது.

சரித்திரம் மாறுகிறதா அல்லது மாறுவதே இங்கே சரித்திரமா என மனதுக்குள் ஒரு கேள்வி ஓடுகிறது. 1989 க்குப் பிறகு ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் அரசாங்கத்தை மாற்றிக் கொண்டே வந்திருக்கிறார்கள். நான் நம் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைப்பதற்கு அதுவும் ஒரு காரணம். அதிகாரம் யாருக்கும் நிரந்தரமில்லை என்ற அடித்தளத்தில் எழுந்ததுதான் ஜனநாயக மாளிகை. அது ஆங்காங்கே பூச்சுப் பெயர்ந்தும், சிற்சில இடங்களில் சிதிலமடைந்தும், ஒன்றிரண்டு மூலைகளில் ஒட்டடை சேர்ந்தும் காணப்படுகிறதே தவிர ஒரேயடியாய் இடிந்து விடவில்லை என்பதை இந்தத் தேர்தல் இன்னொருமுறை உறுதி செய்திருக்கிறது.

இந்தத் தேர்தலில் வென்றது யார்? வீழ்ந்தது எது? வெள்ளிப் பணத்தை வீசி எறிந்தால் வாக்குகளை வாங்கிவிடலாம் என்ற அகந்தை வீழ்ந்தது. எவையெல்லாம் மக்களுக்கு இலவசமாகக் கிடைக்க வேண்டுமோ (கல்வி, குடிநீர், நெடுஞ்சாலை வசதி இவை சில உதாரணங்கள்) அவற்றைக் காசு கொடுத்துப் பெற வேண்டும், எவற்றையெல்லாம் காசு கொடுத்து வாங்க வேண்டுமோ (தொலைக்காட்சிப் பெட்டி, காஸ் அடுப்பு இவை சில உதாரணங்கள்) அவையெல்லாம் இலவசம் என்று ஆளுகையின் (gavernance) இலக்கணங்களைத தலைகீழாக மாற்றிய தந்திரங்கள் தோற்றன. நாட்டு மக்களுக்கு நல்லது செய்யுங்கள் என்று அளிக்கப்பட அதிகாரத்தை சொந்தக் குடும்பம் செழிக்கச் செலவிட்ட சுயநலம் தோற்றது. அன்று ஆட்சிக்கு பூஜ்ய மதிப்பெண் கொடுத்துவிட்டு, அதற்கு அடுத்தவருடம், தேர்தல் வந்ததும் அதே ஆளும்கட்சியோடு கூட்டடணி கொள்கிற சந்தர்ப்பவாதம் தோற்றது. ஜாதியக் கட்சிகள் தோற்றிருக்கின்றன.

எந்தப் போட்டியிலும் வெற்றியும் தோல்வியும் இயல்பானது. அவற்றிலிருந்து பாடங்கள் கற்றுக் கொள்வதுதான் வெற்றியைத் தக்க வைத்துக் கொள்வதற்கும் தோல்வியிலிருந்து மீண்டேழுவதர்க்கும் உதவும்.

இன்றைய ஆளும் கட்சி அங்கீகரித்துக் கொள்ள வேண்டிய ஓர் உண்மை, அதற்கு விழுந்த அத்தனை வாக்குகளும் அதற்கு ஆதரவாக விழுந்த வாக்குகள் அல்ல. ஆண்டு கொண்டிருந்தவர்கள் மீதிருந்த கசப்பும் சினமும் எதிர்க்கட்சியாக இருந்து இவர்களுக்கு ஆதரவாகத் திரும்பின. ஏற்கெனவே அதிமுகவிற்கு இருந்த ஆதரவு வாக்குகளோடு திமுகவிற்கு எதிரான வாக்குகளும் சேர்ந்த போது இந்த எழுச்சி ஏற்பட்டது என்பதுதான் நிஜம்.

1996ல் செய்ததைத்தான் இப்போதும் மக்கள் செய்திருக்கிறார்கள். அன்று ஆட்சியை மாற்றிய அதே காரனங்களுக்காகத்தான் ஊழல், குடும்ப ஆட்சி, அலட்சியமான ஆளுகை – இப்போதும் ஆட்சியை மாற்றியிருக்கிறார்கள். இதை இன்று பதவிக்கட்டிலில் ஏறுகிறவர்கள் நினைவில் கொண்டால் அவர்களுக்கு நல்லது.

அகந்தையைத் தவிர்ப்பது போலவே, ஆடம்பரத்தைக் குறைப்பது நல்லது. உங்கள் சொந்தப் பணத்தில் எப்படி வேண்டுமானாலும் இருந்து கொள்ளுங்கள். ஆனால், வெற்று ஈகோவிற்கும், வறட்டு டாம்பீகத்திற்கும் மக்கள் வரிப்பணத்தை வாரி இறைக்காமல், அதைக் கல்விக்கும், வேலைவாய்ப்புக்கும், மாநிலத்தின் முன்னேற்றத்திற்கும் செலவிடுங்கள். வசதிக்கேதும் குறைவில்லாத சட்டமன்றம் கோட்டையில் இருந்தபோதும், எம்.எல்.ஏ.க்களின் சுகத்திற்கும் சொகுசுக்கும், மக்கள் வரிப்பணத்திலிருந்து கொடிகளைக் கொட்டி, அவசர அவசரமாக, மாநகரின் மத்தியில் அமைக்கப்பட்ட ஆடம்பர மாளிகையை மறுத்து மறுபடியும் ஜார்ஜ் கோட்டையிலிருந்தே செயல்படுவது என்ற முதல் முடிவு வரவேற்கத்தக்கது. அதே எளிமை தொடரட்டும்.

அந்தக் கட்டிடத்தை ஓர் கல்விக் கூடமாக மாற்றுங்கள். சிறப்பான நூலகமாகச் சீரமையுங்கள். அரசின் நிதிநிலை அத்தனை சிறப்பாக இல்லை என்பது எல்லோரும் அறிந்த உண்மை. அந்தக் கட்டிடத்தின் மூலம் அரசின் வருவாயைப் பெருக்க வாய்ப்புகள் உண்டா என்று கூட யோசிக்கலாம்.

எனக்கு ஓய்வு கொடுத்திருக்கிறார்கள் என முன்னாள் முதல்வர் சொல்லியிருக்கிறார். அது முற்றிலும் சரியல்ல. அவரை மீண்டும் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்பதை அவர் மறந்து விடக் கூடாது. ஒரு சட்டமன்ற உறுப்பினராக அவர் ஆற்ற வேண்டிய கடமைகளை அவர் ஆற்றி வர வேண்டும். அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் அவைக்கே வராமல் இருந்ததை போல இருந்துவிடக் கூடாது.

இரண்டு பெரும் இணைந்து முயன்றால் ஒரு புதிய கலாசாரத்தைத் தமிழ்நாட்டில் உருவாக்க முடியும். அதைவிட அடுத்த தலைமுறைக்கு அவர்கள் அளிக்கும் பரிசு வேறேதும் இருந்து விட முடியாது.

புதிய எதிர்கட்சித் தலைவருக்கும் ஒரு வார்த்தை. உங்களை மாற்றும் சக்தியென்று இன்னும் மக்கள் அங்கீரிக்கவில்லை. ஆனால், மாற்று சக்தியென்று மதிப்பிட்டுருக்கிறார்கள். மக்கள் நலனை மனதில் கொண்டு செயல்பட்டால் உங்களை அவர்கள் மேலும் உயர்த்தக் கூடும். ஆட்சிக் குதிரையின் வேகத்தைக் கட்டுப்படுத்தும் கடிவாளமாக மட்டும் இருந்து விடாமல், அவசியமானால் அதை விரைவுப்படுத்தும் சவுக்காகவும் செயல்படுங்கள்.

ஆட்சி மாறுகிறது. அதிகாரம் மாறுகிறது. தலைமைச் செயலகம் மாறுகிறது. இவையெல்லாம் வெறும் அடையாள மாற்றங்களே. நம் அரசியல் கலாசாரம் மாறாமல் அடிப்படைகள் மாறாது. Buy Lasix அந்த மாற்றத்திற்கு நாம் என்ன செய்யப்போகிறோம்.?

புதிய தலைமுறை
26 மே 2011

Add Comment