திசை திருப்புகிறார்களோ…

இந்தியர்கள் வெளிநாடுகளில் சேமித்து வைத்துள்ள கருப்புப் பணத்தை மீட்டு இந்தியாவுக்குக் கொண்டுவர வேண்டும், அதற்கான அவசரச் சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொள்ளும் முடிவிலிருந்து விலக மாட்டேன்” என்று தன்னைச் சமாதானப்படுத்த முற்பட்ட மத்திய அமைச்சர்களிடம் கூறியுள்ளார் யோகா குரு பாபா ராம்தேவ்.

இரு தினங்களுக்கு முன், லோக்பால் சட்டத்தில் பிரதமர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோரை உள்படுத்தக்கூடாது என்ற அரசின் “பிடிவாதத்துக்கு’ ஆதரவு தெரிவித்த ராம்தேவ், தற்போது, “தான் அவ்வாறு சொல்லவே இல்லை’ என்று முரண்பட்டிருக்கிறார். இதுபோல பல விஷயங்களில் தனது கருத்தில் உறுதியாக இருப்பவர் அல்ல அவர் என்பதால், ஜூன் 4-ம் தேதிக்குள் தனது முடிவை மாற்றிக்கொள்ள மாட்டார் என்றும் உறுதியாகச் சொல்வதற்கில்லை.

அது ஒருபுறம் இருக்கட்டும், பாபா ராம்தேவ் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கிவிடக் கூடாது என்பதில் மத்திய அரசு ஏன் இந்த அளவுக்கு அவசரப்படுகிறது, அச்சப்படுகிறது? மத்தியப் பிரதேசத்திலிருந்து விமானம் மூலம் தில்லிக்கு வந்த பாபா ராம்தேவை, பிரணாப் முகர்ஜி, கபில் சிபல், பவன் குமார் பன்சால், சுபோத் காந்த் சகாய் என்று ஒரு மத்திய அமைச்சர்களின் குழுவே விமான நிலையத்துக்குச் சென்று, அவரைச் சந்தித்து கெஞ்சுகிற அளவுக்கு அவரது போராட்டம் ஆட்சியாளர்களைப் பயமுறுத்துகிறதே அது ஏன்?

முன்னர், அண்ணா ஹஸôரே தில்லியில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டபோது அதற்கு மத்திய அரசு முதலில் முக்கியத்துவம் தரவில்லை. ஊடகங்கள் மூலம் போராட்டம் இந்தியா முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியதால்தான், அதில் தலையிட வேண்டிய கட்டாயம் மத்திய அரசுக்கு ஏற்பட்டது. அண்ணா ஹஸôரே இப்போராட்டத்துக்குப் பின்னர்தான் இந்தியா முழுவதும் அறியப்பட்ட மனிதரானார்.

ஆனால் பாபா ராம்தேவ் அப்படியல்ல. அவர் இந்தியாவின் பல நகரங்களுக்கும் சென்று தனது யோகா வகுப்புகளை நடத்தியவர். ஹிந்தி தொலைக்காட்சி சேனல்கள் மூலம் வடநாட்டில் எல்லோருக்கும் தெரிந்தவர். இந்தியாவின் நடுத்தர மற்றும் படித்த வர்க்கத்தினரிடையே நன்கு அறிமுகமானவர். அவர் தில்லியில் ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதோடு, அவரது அன்பர்களும் இந்தியா முழுவதும் ஆங்காங்கே இதே மாதிரியான போராட்டத்தில் ஈடுபட்டால், இது அரசுக்கு மேலும் ஒரு தர்மசங்கடமான நிலைமையை உருவாக்கிவிடும் என்று மத்திய அரசு நினைத்தால் அது நியாயமானதுதான்.

இருப்பினும் இந்த விஷயத்தில் மத்திய அரசு அஞ்சுகிறதா அல்லது அஞ்சுவதுபோல நடித்து, இந்தப் போராட்டங்கள் மூலம் விஷயங்களைத் திசைதிருப்ப முற்படுகிறதா என்பதையும் சிந்திக்க வேண்டியிருக்கிறது.

அண்ணா ஹஸôரே உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியபோது மேடைக்கு வந்து வாழ்த்தியவர் பாபா ராம்தேவ். ஆனால், லோக்பால் சட்ட மசோதா குழுவில் சாந்திபூஷண் மற்றும் Buy cheap Doxycycline அவரது மகன் இடம்பெற்றபோது, தந்தை, மகன் இருவரையும் ஏன் நியமிக்க வேண்டும் என்று முதல் எதிர்ப்பைத் தெரிவித்தவரும் அவர்தான்.

பிரதமர், தலைமை நீதிபதி, எம்.பி.க்கள் மீதான நாடாளுமன்றம் சார்ந்த குற்றச்சாட்டுகள் லோக்பால் சட்ட வரம்புக்குள் வராது என்று மத்திய அரசு சொல்லிக் கொண்டிருக்க, அண்ணா ஹஸôரே தரப்பில், இதற்கு எதிர்ப்பு இருக்கிறது, மீண்டும் போராட்டத்தில் குதிக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளனர். மாநில அரசுகளின் கருத்தை அறிந்த பிறகு இதுபற்றி மீண்டும் விவாதிக்கலாம் என்று விஷயத்தை ஆறப்போட்டிருக்கிறது மத்திய அரசு.

இந்தவேளையில் பாபா ராம்தேவ் அதே நோக்கத்துக்காகப் போராட்டத்தை நடத்துவதன் மூலம், லோக்பால் விவகாரம் பின் தள்ளக்கூடும். போராட்டத்தைக் கைவிடுங்கள் என்று சொல்லிக்கொண்டே பாபா ராம்தேவை போராட்டத்தில் ஈடுபடுத்தும் அரசின் ராஜதந்திரமாகவும் இது இருக்கக்கூடும்.

நான்கு மத்திய அமைச்சர்களும் பாபா ராம்தேவை விமான நிலையத்திலேயே போய்ச் சந்திப்பதும், “”அவர் மிகவும் முக்கியமான விவகாரங்களைத்தான் வலியுறுத்துகிறார். நாங்கள் தொடர்ந்து அவரிடம் பேசி சமாதானம் செய்ய முயல்வோம்” என்று மத்திய அமைச்சர்கள் பேட்டி அளிப்பதும், விட்டால் இவர்களும் உண்ணாவிரதத்தில் உட்கார்ந்துவிடுவார்கள் போன்ற தோற்றத்தைத் தருவதும் ஏதோவொரு நெருடலை ஏற்படுத்துகிறது.

ஒரு போராட்டம், ஒரு தலைவனின் தலைமையில்தான் நடைபெற முடியும். ஊழலுக்கும் கருப்புப் பணத்துக்கும் எதிரான போராட்டங்கள் அவசியம் நம் நாட்டுக்குத் தேவை. இத்தகைய விழிப்புணர்வு பரவலாக ஏற்பட்டால் மட்டுமே ஊழலையும் கருப்புப் பணத்தையும் ஒழிக்க முடியும் என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், ஊழலுக்கு எதிரான போராட்டம் தனிநபர்களை முன்னிலைப்படுத்துவதாக அமைந்து, பல்வேறு அணிகளாகப் பிரிந்து ஆங்காங்கே நடக்குமேயானால், போராட்டத்தின் குறிக்கோள் பின்தள்ளப்பட்டுவிடும்.

ஒரே நோக்கத்துக்காக அனைவரும் ஒன்று திரளாமல், அவை தனிநபரை முன்னிலைப்படுத்துவதாக அமைந்துவிடக்கூடிய ஆபத்தை பாபா ராம்தேவின் போராட்டம் உருவாக்கியிருக்கிறது. இப்படியே தனிநபரை முன்னிலைப்படுத்தும் ஊழலுக்கு எதிரான போராட்டங்கள் அமையுமேயானால் புகையிலை ஒழிப்பு ஊர்வலம், மனிதச் சங்கிலி போன்று வெறும் சடங்காக அது மாறிவிடும். இப்படி ஆவதைத்தான் நமது அரசும் அரசியல்வாதிகளும் விரும்புவார்கள்.

முதலில் லோக்பால் விவகாரத்துக்குத் தீர்வுகண்ட பின்னர், அடுத்ததாக கருப்புப் பணத்துக்கான போராட்டத்தைத் தொடங்கினால் நன்றாக இருக்குமே!

அண்ணா ஹஸôரே ஆனாலும் சரி, பாபா ராம்தேவ் ஆனாலும் சரி அடிப்படையில் ஊழலுக்கு எதிரான அவர்களது உணர்வை நாம் சந்தேகப்படவில்லை. ஆனால், ராஜதந்திரிகளான நமது ஆட்சியாளர்கள் மிகமிக புத்திசாலிகள். அவர்களது பிரித்தாளும் சூழ்ச்சியால் ஊழலுக்கும் கருப்புப் பணத்துக்கும் எதிராக மக்கள் மத்தியில் எழுந்திருக்கும் எழுச்சி பிசுபிசுத்துப் போய்விடுமோ என்பதுதான் நமது பயம்.

தினமணி

Add Comment