கூட்டணி: காங்கிரசுக்கு உரிய பங்கு பங்கு கிடைக்கும்- ப.சிதம்பரம்

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு உரிய இடம் கிடைக்கும் வகையில் யுக்திகளை வகுக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறினார்.

மறைந்த முன்னாள் அமைச்சர் கக்கனின் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னையில் சத்தியமூர்த்தி பவனில் நடந்தது. அதில் பேசிய சிதம்பரம்,

எழுத்தும், பேச்சும் தான் அரசியல் கட்சிகளுக்கு மிகப்பெரிய ஆயுதம். பேசத் தெரிந்தவர்கள் நிறைய பேச வேண்டும், இளங்கோவனைப் போல. தேர்தல் நேரத்தில் மட்டும் எழுதினால், பேசினால் போதாது.

இளைஞர் காங்கிரஸில் 12 லட்சம் இளைஞர்கள் சேர்ந்திருப்பது சாதாரண விஷயமல்ல, மிகப் பெரிய சாதனை. இவர்களை எப்படி பயன்படுத்தப் போகிறோம் என்பதுதான் முக்கியம். சட்டசபைக்கு தேர்தல் வரவுள்ள நிலையில், இவர்கள் அனைவரையும், கட்சியின் போர் வாள்களாக மாற்ற வேண்டும்.

6 மாதத்தில் இந்தப் பணியை செய்தால் நம்மை மதித்து, காங்கிரஸ் கட்சியின் மதிப்பை உணர்ந்து நமக்கு நியாயமான பங்கை (கூட்டணியில் சீட்கள்) தருவார்கள்.

இலங்கையில் buy Doxycycline online பிரச்சனை:

இலங்கையில் இனப் பிரச்சனை ஆரம்பித்தது முதல் இந்தியாவில் 9 அரசுகள் இருந்துள்ளன. இந்த அரசுகள் அனைத்தும், இந்தியாவில் உள்ளதுபோல் இலங்கையிலும் இறையாண்மையும், ஒருமைப்பாடும் நிலைநாட்டப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வந்துள்ளன.

காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசும் இலங்கையில் தமிழர்களுக்கு பேச்சுரிமை, எழுத்துரிமை, அதிகாரப் பகிர்வு என்ற கொள்கைகளில் இருந்து ஒருபோதும் பின்வாங்கவில்லை.

இலங்கையில் கிழக்கு, வடக்கு மாகாணங்கள் இரண்டாக இருந்தாலும், ஒன்றாக இருந்தாலும் அதிகாரத்தை பகிர்ந்து தர வேண்டும் என்றும், இதற்காக இலங்கையின் 13வது அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டு வர தொடர்ந்து வலியுறுத்தப்படும்.

தனி ஈழத்தைதான் ஏற்கவில்லை. சிலர் நமது கொள்கைகளை ஏற்பதில்லை. அதனால்தான் சில கசப்பான, துயரமான அத்தியாயங்கள் நடந்து முடிந்து விட்டன. அது துயரமானதுதான். அதே நேரத்தில் புதிய அத்தியாயத்தில் என்ன எழுத வேண்டும் என்பதை சிந்திக்க வேண்டும்.

இலங்கை அரசுடன் இப்போது போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி, இலங்கை முகாம்களில் எஞ்சியுள்ள 50,000 தமிழர்கள், 3 முதல் 6 மாதங்களுக்குள் அவர்களுடைய சொந்த இடங்களுக்கு அனுப்ப இலங்கை அரசு ஒப்புக் கொண்டுள்ளது.

தமிழர்களுக்கு வீடு கட்ட ரூ. 1,000 கோடி:

இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு 50,000 வீடுகள் கட்ட தலா ரூ. 2 லட்சம் வீதம் முதல் கட்டமாக ரூ. 1,000 கோடி நிதியுதவி அளிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தப் பணம் வங்கிகள் மூலம் நேரடியாக அந்தந்த குடும்பத் தலைவரை சென்றடைவதற்கான வழிமுறைகள் குறித்து இந்திய அரசு ஆராய்ந்து வருகிறது.

மேலும் யாழ்ப்பாணத்தில் மீண்டும் இந்திய துணைத் தூதரகம் அமைப்பது, பலாலி விமான நிலையத்தை சீரமைப்பது, துறைமுகம் மற்றும் ரயில் பாதைகளை சீரமைக்கும் பொறுப்புகளையும் இந்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. இதற்காக குறைந்த வட்டியில் ரூ. 3,500 கோடி ரூபாயை 20 ஆண்டு கால கடனாக வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்குக் காரணம் அவர்கள் தமிழர்கள், நம்மவர்கள் என்பதற்காகத் தான்.

இலங்கை தமிழர்களுக்காக நாம் செய்ததை இருநாட்டு கூட்டறிக்கையில் தெளிவாக சொல்லியிருக்கிறோம். ஆனால் அவை சரியாக பரவவில்லை. இவற்றை எல்லாம் நாம் தான் மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும், பிரசாரம் செய்ய வேண்டும், எழுத வேண்டும் என்றார் சிதம்பரம்.

கோஷ்டி பூசல் வேண்டாம்-இளங்கோவன்:

முன்னதாக முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசுகையில், காங்கிரசார் அத்தனை பேரும் ஒரே மேடையில் இருந்தால் எங்கே காங்கிரஸ் என்று சிலர் கேட்பதெல்லாம் அடிபட்டுப் போகும்.

காந்தி, கக்கன், காமராஜர், நேரு, இந்திரா காந்தி போன்ற காங்கிரஸ் தலைவர்கள் சுய அடையாளம் கொண்ட தலைவர்கள். மற்றவர்களைப் போல இங்கர்சால், பெர்னார்ட்ஷா என்று வேறு தலைவர்களை அடையாளம் காட்ட வேண்டிய அவசியமில்லை. இந்த பெருமை காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே உண்டு.

முன்பெல்லாம் ஒரு கோஷ்டி கூட்டம் போட்டால், மற்றொரு கோஷ்டி அடுத்த வாரம் ஒரு கூட்டம் போடுவார்கள். ஆனால் இப்போது ஒரு கோஷ்டி கூட்டம் போட்டால், இன்னொரு கோஷ்டி அந்த கூட்டத்திற்கு போகாதே என்று தடுக்கிறார்கள். இது மாற வேண்டும்.

தமிழ்நாட்டில் ஒரு பெரிய வெற்றிடம் இருக்கிறது. இந்த வாய்ப்பை நாம் தவறவிடக் கூடாது. தலைவர்கள் என்றால் காமராஜர், கக்கன், சி.சுப்பிரமணியம் போல இருக்க வேண்டும் என்று மக்களுக்கு விளக்க வேண்டியவர்கள் நாம் தான் என்றார்.

ஜாதி- மத கலவரங்களை தடுக்க கடும் சட்டம்:

பின்னர் காரைக்குடியில் அம்பேத்கார் மக்கள் கூட்டமைப்பின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அண்ணல் அம்பேத்காரின் முழு உருவ வெண்கலச் சிலையை திறந்து வைத்து சிதம்பரம் பேசுகையில்,

சுதந்திரம் பெறுவது கடினம், பெற்ற சுதந்திரத்தை இழப்பது சுலபம். இந்தியாவைத் தொடர்ந்து 50 நாடுகளுக்கும் மேலாக சுதந்திரம் பெற்றன. ஆனால் விரல் விட்டு எண்ணக்கூடிய நாடுகளில் மட்டும்தான் சுதந்திரம், ஜனநாயகம், பேச்சுரிமை, வாக்குரிமை உள்ளது.

உதாரணத்திற்கு பாகிஸ்தானைக்கூட கூறலாம். சுதந்திரத்திற்குப்பின் பெரும்பாலான ஆண்டுகள் சர்வாதிகாரிகளின் காலடியில்தான் அங்கு ஆட்சி நடைபெற்றது. ஆனால் நம் நாட்டில் மட்டும் சுதந்திரம் பறிபோகாமல் இருக்க காரணம் டாக்டர் அம்பேத்கார் உருவாக்கித் தந்த இந்திய அரசியல் சாசனம் தான்.

பெற்ற சுதந்திரத்தை பேணிக்காக்கும் பெட்டகமாக அரசியல் சாசனத்தை அம்பேத்கார் உருவாக்கித் தந்தார். சாதி மதக் கொடுமைகள், அதனால் ஏற்படும் வன்முறைகள் நமது சமுதாயததிற்கு தலைக்குனிவை ஏற்படுத்தும்.

எனவே ஜாதி, மத, கலவரங்கள், வன்முறைகளை தடுக்க மத்திய அரசு ஜாதி, மத,வன்முறை தடுப்பு சட்டத்தை அரசு கொண்டுவர உள்ளது. இதற்கான மசோதா விரைவில் தாக்கல் செய்யப்படும்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் ஜாதி, மத வன்முறை ஒழிப்பு தொடர்பாக முக்கிய ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார். சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகள் கடந்த பிறகும் சாதி, மதம் தொடர்பாக வன்முறை நீடிப்பது சரியல்ல. காமராஜர், அண்ணா, பெரியார் போன்ற தலைவர்கள் வாழ்ந்த மண்ணில் இதற்கு இடம் இல்லை.

இந்த சட்டம் வந்தால் மத கலவரம் போன்றவை பரவுவதை தடுப்பதுடன் இவற்றில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் அது உதவும் என்றார் சிதம்பரம்.

Add Comment