ஹைடெக், வால்வோ, “ஏசி’ சொகுசு வசதிகள் சரிதான்… பாதுகாப்பு…?

காஞ்சிபுரம் அருகே நடந்த கோர விபத்தை தொடர்ந்து, நீண்ட தூரங்களுக்கு இயக்கப்படும், “ஏசி சொகுசு பஸ்கள்’ பயணிகளுக்கு பாதுகாப்பானவையா, என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத போலீஸ் அதிகாரி கூறியதாவது: விபத்துக்குள்ளான பஸ் முழுவதும் படுக்கை வசதி கொண்டது. இதுபோன்ற பஸ்களில் ஒரே ஒரு கதவு மட்டும் பொருத்தப்படுகிறது. இக்கதவு ஹைட்ராலிக் முறையில் இயங்கக் கூடியது. இதன் சுவிட்ச் டிரைவரிடம் இருக்கும். அவர் நினைத்தால் மட்டுமே கதவை திறக்க முடியும். பஸ் விபத்துக்குள்ளாகும்போது, அவசரத்திற்கு வெளியேற, சிறிய கண்ணாடி ஜன்னல் அமைத்துள்ளனர். “ஏசி’ பஸ் என்பதால், காற்று புக முடியாத அளவிற்கு வாகனம் வடிவமைக்கப்படுகிறது. இதனால், பயணிகள் அவசரத்திற்கு வெளியேற முடியாத நிலை ஏற்படுகிறது. விபத்து ஏற்பட்டால் தடுக்க, சிறு தீயணைப்பு கருவிகளைப் பொருத்தியுள்ளனர். இதனால் எந்தப் பயனும் ஏற்படுவதில்லை. அதை 6 மாதங்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும். அதை பஸ் நிறுவனத்தினர் செய்வதில்லை. இப்பஸ்கள் 60 கிலோ மீட்டர் முதல் 80 கிலோ மீட்டர் வேகம் வரைதான் செல்ல வேண்டும். ஏனெனில், “ஏசி’ வசதி இருப்பதால், இன்ஜின் அதிகமாக சூடாகும். அதிக வேகத்தில் சென்றால், வெப்பம் அதிகரிக்கும். தனியார் ஆம்னி பஸ் டிரைவர்கள், எதைப்பற்றியும் கவலைப்படாமல், 100 கிலோ மீட்டர் வேகத்திற்கு குறையாமல் செல்கின்றனர். விபத்துக்குள்ளான டிரைவரும் அசுர வேகத்தில் வந்ததால், விபத்தை தவிர்க்க முடியவில்லை. பஸ் டீசல் டேங்க், பாலத்தின் மீது உராய்ந்ததால், உடனடியாக தீப்பிடித்துள்ளது. பயணிகளும் வெளியேற முடியாமல் கருகி விட்டனர்.

அரசு பஸ்கள், ரயில்கள் போன்றவற்றில், முன்பதிவு செய்ய விரும்புபவர்கள், தங்களின் முழு முகவரி, அடையாள அட்டை போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், தனியார் ஆம்னி பஸ்களில், யார் வேண்டுமானாலும் முன்பதிவு செய்ய முடியும். அடையாள அட்டை, இருப்பிட சான்று எதுவும் தேவையில்லை. அவர்கள் எந்தப் பொருள்களை ஏற்றிச் செல்கின்றனர் என்பதையும் பார்ப்பதில்லை. வெடிபொருட்கள், எரிபொருட்கள் போன்றவற்றை எடுத்துச் சென்றாலும், தடுப்பாரில்லை. இதுபோன்ற வாகனங்களை போலீசாரும் சோதனை செய்ய அனுமதிப்பதில்லை. ஒரு பஸ்சை சோதனை செய்தால், உடனே இடமாறுதல் வந்துவிடும். படுக்கை வசதி கொண்ட “ஏசி’ பஸ்களில் பாதுகாப்பு இல்லை என்பது உண்மை. இவ்வாறு அந்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

ஆம்னி பஸ்களில் முன்பதிவு செய்யும் போது, முழு முகவரி பெறுவதோடு, பயணம் செய்பவர்களுக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் வீட்டினருக்கு உடனடியாக தகவல் தரும் வகையில் போன் எண் பெறுவதை கட்டாயமாக்க வேண்டும். ஆன்-லைன் மூலம் பதிவு செய்தாலும், முழு முகவரி இருந்தால் மட்டுமே பதிவு என்பதை கட்டாயமாக்க வேண்டும். ஆம்னி பஸ்களில் வரும் பயணிக்கு, “ஹார்ட் அட்டாக்’ போன்ற அசம்பாவிதங்கள் நடந்தால், உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து விட்டு, உறவினர்களுக்கு தகவல் கொடுக்க வேண்டும். கடந்த, 7ம் தேதி நடந்தது போல் ஏதாவது விபத்து நடந்தாலும், உடனடியாக உறவினர்களை தொடர்பு கொள்ள வசதியாக இருக்கும்.

சொகுசு பயணம் பாதுகாப்பு பயணமா? தமிழக ஆம்னி பஸ் கூட்டமைப்பு நிர்வாகி கூறியதாவது: வெளிநாடுகளில் உள்ள முன்னணி “ஏசி’ நிறுவனங்கள் தயாரிக்கும், “ஏசி’ இயந்திரங்களை இறக்குமதி செய்து, பஸ்களில் பொருத்துகின்றனர். “ஏசி’ இயந்திரம் வாகனத்திற்கு வெளியே பொருத்தப்படுகிறது. இதனால், தீ விபத்து ஏற்பட வாய்ப்பில்லை. தீப்பிடிக்காமல் இருக்கவும், அதிக குளிர்ச்சிக்காகவும் ஆம்னி பஸ்கள் அனைத்திலும், “டோடல் பயர் ப்ரூப் இன்சுலேஷன்’ பொருத்தப்பட்டுள்ளது. “வாகனங்களை வேகமாக ஓட்டக் கூடாது; குடித்து விட்டு வண்டி ஓட்டக் கூடாது’ என்பதற்காக டிரைவர்களுக்கு யோகா வகுப்பு எடுக்கப்படுகிறது. அதை மீறும், டிரைவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நெடுஞ்சாலைகளில், ஒரு இடத்தில் விபத்து நடந்தால், உடனடியாக அப்பகுதியில் பேட்டரியால் இயங்கும் சிவப்பு விளக்குகளை பொருத்த வேண்டும். இதன் மூலம் அவ்வழியே செல்லும், மற்ற வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்வர். இவ்வாறு அவர் கூறினார். காஞ்சிபுரத்தை சேர்ந்த “ஏசி’ மெக்கானிக் ரவிச்சந்திரன் கூறும்போது, “பஸ் தீப்பிடித்ததற்கு டீசல் டேங்கில் ஏற்பட்ட உராய்வே காரணம். “ஏசி’க்கும், விபத்திற்கும் சம்பந்தம் இல்லை. “ஏசி’ பயன்படுத்துவதால் வெளியேறும் வாயு, தீ வேகமாக எரிவதை தடுக்கும். “ஏசி’ இயந்திரங்கள் பல சோதனைகளுக்கு பின், எவ்வித பாதிப்பும் இல்லை என்பதை அறிந்த பின்னரே விற்பனைக்கு வருகின்றன’ என்றார்.

Doxycycline No Prescription justify;”>படுக்கை வசதி கொண்ட பஸ்கள்; தமிழகத்தில் அனுமதி இல்லை: தமிழகத்தில் படுக்கை வசதி கொண்ட பஸ்களுக்கு, இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை. தனியார் டிராவல்ஸ் நிறுவனங்கள், புதுச்சேரி, கர்நாடக மாநிலங்களில் பர்மிட் வாங்கிய பஸ்களை, தமிழகத்தில் இயக்குகின்றன. இருக்கை வசதி கொண்ட பஸ்களில், இருக்கைகள் எவ்வாறு அமைக்கப்பட வேண்டும் என்ற விதி வகுக்கப்பட்டுள்ளது. படுக்கை வசதி கொண்ட பஸ்களில், படுக்கைகள் எவ்வாறு அமைக்கப்பட வேண்டும் என, விதிமுறைகள் எதுவும் இதுவரை வகுக்கப்படவில்லை. எனவே, தமிழக அரசு, படுக்கை வசதி கொண்ட பஸ்களுக்கு, பர்மிட் வழங்க அனுமதி அளிக்கவில்லை என, போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வீடுகளில் “ஏசி’ பயன்படுத்துவோர் கவனத்திற்கு: வீட்டில் பயன்படுத்தப்படும் “ஏசி’ இயந்திரம் பிற எலக்ட்ரானிக் பொருட்கள் போன்றதல்ல. “ஏசி’யில் அதிக மோட்டார்கள் இருப்பதால், மூன்று மாதத்திற்கு ஒரு முறை சர்வீஸ் செய்ய வேண்டும். “ஏசி’யில் பயன்படுத்தப்படும் பியூஸ் பதிலாக, புதிதாக வந்துள்ள இ.எல்.சி.பி.,யை பயன்படுத்த வேண்டும். “ஏசி’க்கு வருகின்ற “பவர் சப்ளையர் பிரேக்கர்’ அளவீடு துல்லியமாக இருக்க வேண்டும். “ஏசி’ பொருத்தப்பட்டுள்ள இடத்திற்கு கீழே படுக்கக் கூடாது. முன்னணி நிறுவனங்களின் “ஏசி’ இயந்திரங்களை வாங்க வேண்டும். “ஏசி’ பொருத்துவதற்கு, நீடித்து உழைக்கக் கூடிய மின் ஒயர்களை பயன்படுத்த வேண்டும்.

தினமலர்

Add Comment