நேர்முகத் தேர்வுகளை (Interviews) எதிர்கொள்ள எளிய வழிமுறைகள்

பெருகிவரும் தொழிற்சாலைகள், நிறுவனங்கள், வர்த்தகங்கள் போன்றவைகளால் ஒருபுறம் வேலை வாயப்புகள் அதிகரித்துக் கொண்டே சென்றாலும், தற்போது நல்ல வேலை அமைவது என்பது குதிரைக் கொம்பான ஒன்றாகத்தான் இருக்கிறது. கற்ற கல்வி, பெற்றிருக்கும் முன் அனுபவம் போன்றவற்றைப் பொறுத்து வேலைகள் அமைந்தாலும், நேர்முகத்தேர்வு என்று சென்றுவிட்டால் ஒரு காலியிடத்திற்கு குறைந்தபட்சம் பத்து நபர்களாவது போட்டி போடக்கூடிய சூழ்நிலையாகத்தானிருக்கிறது.

இந்நிலையில் வேலைக்காகத் தெரிவு செய்பவர்கள் மத்தியில் கிடைக்கப்பெறும் சொற்ப நேரத்தில் நம்முடைய திறமைகளை வெளிக்கொணர்ந்தால் மட்டுமே நமக்கான வேலையை தக்க வைத்துக் கொள்ளமுடியும். சில காரணங்களால் கூட நமக்குக் கிடைக்கப்பெறும் வாய்ப்பு நம்மைவிட்டு நழுவி விடலாம். நேர்முகத் தேர்வுகளை எதிர்கொள்பவர்கள் கீழ்கண்ட அணுகு முறைகளை மேற்கொண்டால் வெற்றியை எதிர்பார்க்கலாம் (இறைவன் நாடினால்..).

தோற்றமும், ஆவணங்களும்
நேர்முகத் தேர்வுக்காகச் செல்லும் போது சாதாரண உடைகளை அணிந்து செல்லாமல், அலுவலகத்திற்கு அணிந்து செல்வது போன்ற உடைகளை அணிந்து செல்லுங்கள். புத்தம் புதிய ஆடைகளை அணிந்து செல்வதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் புதிய ஆடைகள் அன்றுதான் நீங்கள் அணிந்து சென்றால் அது எவ்வாறு உங்களுடன் ஒத்துச் செல்லும் என்பதை அறியமாட்டீர்கள். நீங்கள் தலை வாரும் முறையை மாற்றிக் கொள்ளாதீர்கள். ஏனெனில் புதிய ஆடைகளாலும், தலைமுடியை மாற்றிச் சீவிக் கொள்வதாலும் சில சமயம் பொருந்தாமல் உங்களுக்கே அது அருவருப்பானதாக்கிவிடும். நீங்கள் அணிந்து செல்லும் உடைகள் நல்ல வசீகர நிறங்களாகவும், தரமான துணியாகவும் இருக்கும் வண்ணம் பார்த்துக் கொள்ளுங்கள். அதே சமயம் திருவிழாக்கள், பண்டிகைகள் போன்ற தினங்களில் அணியும் உயர்தர ஆடைகளில்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அணிந்து செல்லும் ஆடைகளை முறையே சலவை செய்தும் அழுக்குகள் இல்லாமலும் அணிந்து செல்லுங்கள். இவ்வாறு நீங்கள் அணிந்து செல்லும் ஆடை உங்களுடைய ஒழுங்கு மற்றும் தன்னடக்கத்தை வெளிப்படுத்துமளவுக்குக் கவனமாயிருங்கள்.

மறவாமல் உங்கள் சட்டைப் பையில் பேனாவை எடுத்துச் செல்லுங்கள். எடுத்துச் செல்லவேண்டிய அனைத்து சான்றிதழ்களும் முறையே வரிசைப்படுத்தி ஃபைலில் கொண்டு செல்லுங்கள். கண்டிப்பாக உங்களுடைய சான்றிதழ்களை மாற்றிமாற்றி வைத்து ஓரே போல்டரில் போட்டு எடுத்துச் செல்வதை தவிர்ந்து கொள்ளுங்கள். ஏனெனில் நேர்முகத் தேர்வில் காண்பிக்கப்படும் போது நேரம் அதிகரிப்பது மட்டுமல்லாமல் முறையில்லாமலும் இருக்கும்.

முக்கியமாகக் காண்பிக்கப்பட வேண்டிய சான்றிதழ்களை முன்னுக்கும், முக்கியமில்லாத சான்றிதழ்களை தனியாகவும் வைத்துக்கொள்ளுங்கள். காண்பிக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் முறையே தனித்தனியான லீஃப் பைலில் ஒழுங்குபடுத்தி எடுத்துச் செல்லுங்கள். உங்களிடம் இருக்கும் சான்றிதழ்கள், பயோடேட்டா போன்றவைகளின் நகல்களை இரண்டு செட்களை எப்பொழுதும் இருக்குமாறு கவனித்துக் கொள்ளுங்கள். நீங்கள் எடுத்துச் செலலும் சான்றிதழ்களை நேர்முகத்தேர்வு செய்பவரிடம் அவர்கள் கேட்காதவரை தானாக எதையும் காண்பிக்க வேண்டாம்.

அமர்வும், சந்திப்பும்
அறையை மெதுவாகத் தட்டுங்கள். உங்கள் பெயர் கூறி அழைக்கப்படாதவரை தானாக உள்ளே பிரவேசிக்காதீர்கள். உள்ளே சென்றதும் மறவாமல் முகமன் கூறிவிடுங்கள். அவர்கள் அனுமதிக்காதவரை இருக்கையில் அமராதீர்கள். அவர்கள் அமரச் சொன்னால் அமர்ந்ததும், புன்முறுவலோடு நன்றியை மொழியுங்கள். நீங்கள் அமர்ந்திருக்கும் நாற்காலியை முன்னக்கும் பின்னுக்கும் இழுக்காதீர்கள். அமர்ந்துகொண்டிருக்கும் நாற்காலியை அசைத்துக் கொண்டிருக்காதீர்கள். நீங்கள் அங்கே எதை எடுத்தாலும் கொடுத்தாலும் வலது கையையே பயன்படுத்துங்கள். நாற்காலியின் மீது அமர்ந்திருக்கும் போது உங்கள் ஒருகாலின் மீது மறுகாலை இட்டு அமராதீர்கள். உங்கள் பார்வைகளை கீழ்நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்காமல் நேர்முகத் தேர்வு மேற்கொள்வோரை பார்த்துக் கொண்டிருங்கள்.

நீங்கள் எடுத்துச் செல்லும் பைல்கள், பொருட்கள் எதுவாக இருப்பினும் அவர்களுடைய மேசைமீது வைக்காமல் உங்கள் மடியில் வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் கர்வத்தை அங்கே குறைத்துக் கொள்ளுங்கள். உதாரணமாக மீசையை தடவிக் கொள்வது, மூக்கின் மேல் விரல் கொண்டு தடவுவது, உங்கள் தலைமுடியை கோதிச் சரி செய்வது, அதிகப்படியான பேச்சுக்களை பேசுவது போன்றவை. உங்களுடைய சாவிக் கொத்தை வைத்துக் கொண்டோ, பேனாவைக் கொண்டோ, விரல்களின் நெட்டி முறித்தோ சப்தம் ஏற்படுத்தாதீர்கள். நேர்முகத் தேர்வின் அறையை விட்டு உங்கள் பார்வைகளை ஜன்னல் வழியாக வெளியே செலுத்துவதோ, மற்றவர்களின் மேஜைகளைக் கவனித்துக் கொண்டிருப்பதோ செய்யாதீர்கள்.

நேர்முகத் தேர்வின் இறுதியில் நீங்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்து புன்முறுவலோடு விடைபெறுங்கள். நீங்கள் கொண்டு சென்ற அனைத்தையும் மறவாமல் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அறையை விட்டு வெளியேறும் போது அவர்களை முன்னோக்கி பார்த்த வண்ணம், உங்கள் காலடிகளை பின்வைத்து அறைக்கதவை மெதுவாக மூடிவிட்டு வெளியேறுங்கள்.

கேள்விகளுக்கு விடையளித்தல்
அவர்கள் கேட்கும் கேள்விகளைக் கவனமாகக் கேளுங்கள். சிலசமயம் அவர்கள் கேட்கும் கேள்விகள் உங்களுக்குப் புரியாமல் போகலாம், அப்போது அழகிய முறையில் திரும்பச் சொல்லும்படி பணிந்து கொள்ளுங்கள். பதிலைச் சொல்லும் போது தேவையான பதிலை மட்டும் சொல்லுங்கள். அவர்கள் அதிகமான விவரங்கள் கேட்டால் மட்டும் விரிவாகச் சொல்லுங்கள். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சற்றும் தாமதிக்காமல் தெளிவான பதிலைச் சொல்லுங்கள். பதிலைச் சொல்லும் போது மறவாமல் கேள்வி கேட்டவரை மட்டும் பார்த்துச் சொல்லாமல் மற்ற அனைவரின் பக்கமும் உங்கள் பார்வைகளை பார்த்துக் கொள்ளுங்கள். சரியான பதில்களை மட்டும் உறுதியாகச் சொல்லுங்கள். உங்களுக்குச் சந்தேகமாக இருப்பவைகளை நான் நினைக்கிறேன்…, எனக்குத் தெரிந்த வரையில்…, என்று ஆரம்பித்துச் சொல்லுங்கள். பதில் கூறும் போது. தெளிவான வார்த்தைகளைக் கொண்டு உச்சரியுங்கள். அந்த அறையில் தேவையான சப்தத்தை மட்டும் உயர்த்துங்கள். உங்கள் பதில்களை உடனடியாக உரையுங்கள் காலதாமதம் செய்யாமல் நகைச்சுவையாகப் பேசுவதையும், பிறரை குறை சுமத்திப் பேசுவதையும் அங்கே தவிர்த்துக் கொள்ளுங்கள்.

அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு உங்களுடைய பயோ-டேட்டாவில் குறிப்பிட்டிருக்கும் செய்திகளை தொடர்புபடுத்தி பதிலைச் சொல்லவும். பதில் சொல்லும் போது உங்கள் கழுத்து டையை இறுகப்படுத்துவதோ அல்லது உங்கள் ஆடைகளை சரி செய்வதோ செய்யாதீர்கள். அவர்கள் மேஜையிலுள்ள பொருட்கள் உங்களுக்கத் தேவைப்பட்டால் அவர் அனுமதி பெற்று பயன்படுத்துங்கள். அவர்கள் கேள்வி கேட்க எந்த அளவிற்கு சப்தத்தை உயர்த்துகிறார்களோ அதே அளவு சப்தத்தைக் கொண்டு பதில்களைக் கூறுங்கள்.

உங்கள் விடைகள் சரியானவை என அவர்களால் வரவேற்கப்படும் போது நன்றியைத் தெரிவியுங்கள். உங்கள் பதில்கள் நிராகரிக்கப்படும்போது ஸாரி என்று வருத்தத்தைத் தெரிவியுங்கள். பதில்களைச் சொல்லும் போது மரியாதையைக் கடைபிடியுங்கள்.

கவனிக்கப்படவேண்டியவைகள்
1. உங்களுடைய பயோ-டேட்டாவில் குறிப்பிட்ட அனைத்தையும் நீங்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும். சரியான தகவல்கள் கொண்டதாகவும், தங்களைத் தொடர்பு கொள்ளும் தகவல்களும் அவசியமாக இருத்தல் வேண்டும்.

2. உங்கள் பயோ-டேட்டா குறுகியதாகவும், உங்கள் ஒப்பம் இட்டதுமாக இருக்க வேண்டும்.

3. நேர்முகத் தேர்வுக்குச் செல்லும் முன் உங்களுக்கான அழைப்பிதழ் கடிதத்தை கண்டிப்பாக எடுத்துச் செல்ல வேண்டும்.

4. அவர்களோடு உங்கள் சந்திப்பின் ஆரம்பத்திலும், கடைசியிலும் கைகுலுக்கி Viagra online இந்த வாய்ப்புக்கு நன்றி கூற வேண்டும்.

5. நேர்முகத்தேர்வின் போது நீங்கள் நிராகரிக்கப்பட்டாலும் அமைதியாக வெளியேறி விடவும்.

6. நேர்முகத் தேர்வின் போது நீங்கள் தேர்வு செய்யப்பட்டதை அவர்கள் அறிவித்தால் உங்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியாத விஷயங்கள் இருந்தால் நீங்கள் உங்கள் நிலைமைகளைச் சொல்லிவிடுங்கள். உதாரணமாக சம்பளம் மற்றும் இதர படிகள் வசதிகளின் விபரம் போன்றவை

இன்ஷா அல்லாஹ் வெற்றி உங்களது ஆகட்டும்.

Add Comment