அம்பலப்படுத்தப்பட வேண்டிய ஆன்மிக வியாபாரம்!

பகவான் என்றும் பல மக்கள் நல திட்டங்களை செயல்படுத்திய நல்லவர் என்றும் அப்பாவி பக்தர்களால் ஒரு பக்கமும் மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி தந்திரங்கள் மூலம் அவர்களை ஏமாற்றித் தன்னை வளமாக்கியதோடு அரசியல்வாதிகளை வசியம் செய்து அதிகார தரகராக விளங்கியதாக மறுபக்கமும் பெரும் சர்ச்சைக்குள்ளான சாய்பாபா மரணமடைந்து இரண்டு மாதங்களாகியும் அவர் ஆசிரமத்தைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் திகில் படத்திற்கு ஒப்பாக உள்ளது.

சாய்பாபாவின் சகோதரி மகள் சைதன்யா சமீபத்தில் தன் உயிருக்குப் பாதுகாப்பில்லை என்றும் சாய் பாபா டிரஸ்டின் உறுப்பினர்களாலேயே தன் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது என்றும் கூறிய போது பாபாவை உண்மையான ஆன்மிகவாதியாக கருதிய அப்பாவி பக்தர்களுக்கு அதை நம்புவது கடினமாக இருந்திருக்கும். ஏனென்றால் உலக பற்றில் மூழ்கியிருப்பவர்களைப் பேராசை, பொறாமை போன்ற தீமையிலிருந்து விடுபட வைத்து உலக பற்றற்றவர்களாக மாற்றுவது தான் உண்மையில் ஆன்மிக வாதிகள் செய்ய வேண்டிய காரியம்.

ஆனால் நிலைமை என்னவென்றால், பக்தர்களை உலக பற்றிலிருந்து விடுபட்டு எளிய வாழ்க்கை வாழச் சொல்லும் சாமியார்கள் உலகின் மிகப் பெரும் கோடீஸ்வரர்களாய் மாறியுள்ளார்கள். பிரம்மச்சார்யமே முக்தி பெற சிறந்த வழி என்று உபதேசிப்பவர்கள் சாதாரண சம்சாரியையும் விஞ்சி தன் பக்தர்களையும் அடுத்தவர்களின் மனைவிகளையும் தன் ஆசை நாயகிகளாக அந்தப்புர தோழிகளாக மாற்றி Buy cheap Levitra கொள்ளும் நிலைமையையும் சர்வசாதாரணமாக பார்க்கின்றோம்.

ஏனென்றால் நவீன இந்தியாவில் ஆன்மிகம் என்பது காஸ்ட்லியான வியாபாரம் ஆகி வெகு நாட்களாக ஆகி விட்டது. குறிப்பாக தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சி கண்ட பிறகு அமெரிக்காவில் செட்டில் ஆகி விட்ட இந்தியர்களும், இந்தியாவில் தகவல் தொழில்நுட்பம் உள்பட பல துறைகளிலும் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சியும் ஒரு புதிய தலைமுறை மத்திய தர வர்க்கத்தை உற்பத்தி செய்தன. ஆம். ஒப்பீட்டளவில் பொருளாதார செழிப்புடன் காணப்பட்ட இவர்கள் அதற்காக எவ்வித ஓய்வும் இல்லாமல் மன உளைச்சல், டென்சன், பரபரப்பு, மனசிதைவு என உலா வந்தனர்.

இவர்களின் பலவீனத்தைப் புரிந்து ஆன்மிகத்தை இவர்களுக்கேற்ற வகையில் ஹைடெக்காக “வாழும் கலை” எனும் பெயரில் ஆரம்பித்த ரவி சங்கரின் வர்த்தக வருமானம் ஆண்டுக்கு 400 கோடியாகவும் கட்டி பிடி வைத்தியத்தைப் பிரபலமாக்கி தொலைக்காட்சி சேனல், கல்லூரி என தன் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்திய அமிர்தனாந்த மாயியின் சொத்து மதிப்பு 1200 கோடியாகவும் உள்ளது.

நம் தமிழகத்தையே எடுத்து கொள்வோம். மருத்துவமனை, கல்லூரி, உணவு விடுதிகள் என்று ஓர் ஊரையே தன் வசமாக்கி கொண்ட பங்காரு அடிகளார் ஆகட்டும், பிரம்மச்சார்யத்தை ஊருக்கு போதித்து பிரபலங்களுடன் கொஞ்சி குலவி, ‘கதவை திற காற்று வரும்’ என்று சொல்லி காற்றை மட்டுமல்ல அதை தாண்டியும் உள்ளே விட்ட நித்தியானந்தா ஆகட்டும், சங்கர்ராமன் கொலை வழக்கில் சிறைக்குச் சென்றாலும் இன்னும் மவுசு குறையாமல் இருக்கும் சங்கராச்சாரியாகட்டும், இவர்களனைவரும் சாதாரண பொதுமக்களை விட செல்வ, செழிப்புடன் உலாவருவதைப் பார்த்து கொண்டு தான் இருக்கிறோம்.

ஆன்மிகத்தைப் போதிக்க வேண்டிய சாமியார்கள் தற்போது அரசியல் ரீதியாகவும் களம் இறங்கும் ஆபத்தைச் சந்தித்து வருகிறோம். ராஜீவ் காந்தி கொலையிலேயே சந்தேகிக்கப்பட்ட சந்திராசுவாமி முதல் 1200 கோடிக்கு மேல் சொத்து சேர்த்து தன் ஊழியர்களுக்கே சம்பளம் ஒழுங்காக தராமல் ஊழலுக்கு எதிராக போர் தொடுக்கும் ராம்தேவ் வரை இதற்கு உதாரணங்கள் நீளும். இச்சாமியார்களை இந்தளவு உச்சாணி கொம்புக்கு உயர்த்தியதில் ஊடகங்களின் பங்களிப்பையும் மறுக்க முடியாது.

தன் ரசிகர்களுக்கு ஆன்மீக பகுதியை வழங்குகிறோம் எனக் கூறி குமுதம், நக்கீரன், கல்கி போன்ற இதழ்கள் நித்யானந்தா, ஜக்கி வாசுதேவ் போன்றோரின் ஆன்மீக கட்டுரையை வெளியிட்டு ஒரு காலத்தில் நன்கு காசு பார்த்தன. காலம் மாறி காவி உடைகளின் பின்னணியிலுள்ள காமபைத்தியங்களின் முகம் வெளிச்சமானவுடன், அதே நித்யானந்தா – ரஞ்சிதா உல்லாச காட்சியைக் காண சிறப்பு சந்தா திட்டம் வெளியிட்டு வசூல் செய்தும் காசு சம்பாதித்தன சில ஊடகங்கள். எவ்வித சமூக நோக்குமின்றி தம் வியாபாரத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு அலையும் இதுபோன்ற கீழ்த்தர ஊடகங்களின் ஒத்துழைப்பின்றி, அப்பாவி மக்களை ஏமாற்றி கல்லா கட்டுவது ஆன்மீக வியாபாரம் புரியும் சாமியார்களுக்குச் சாத்தியமில்லை என்பதையும் கவலையுடன் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது!

இப்போது சாய்பாபாவின் மறைவுக்குப் பின் சாய்பாபாவின் அறையினுள் கண்டெடுக்கப்பட்ட கிலோ கணக்கான தங்கங்களும், கோடிக்கணக்கான ரூபாய்களும், வண்டியில் கடத்தி செல்லப்பட்ட கோடிகளும் சாமியார்களின் வெளிப்படையற்ற தன்மையையும் அப்பாவி மக்களைப் பக்தி என்ற பெயரில் ஏமாற்றிக் கோடிகளைச் சுருட்டும் அவர்களின் உண்மையான முகத்தையும் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. பக்தர்களிடமிருந்து முறைகேடாக இவர்களால் பிடுங்கப்பட்ட வரிகட்டப்படாத இந்தக் கறுப்புப் பணத்தை கைப்பற்ற வேண்டிய அரசாங்கங்களோ சாமியார்களின் ட்ரஸ்ட்களுக்கு அணுசரணையாய் நடந்து கொள்கிறது.

மத சார்பின்மை நாட்டின் அரசியல்வாதிகள் சாமியார்களின் காலில் விழுவதும், அவர்களின் விழாக்களில் அரசு விமானங்களைப் பயன்படுத்தி கலந்து கொள்வதும் நமக்கு தெரிந்த ஒன்றே. பகுத்தறிவு பேசும் பகலவன்களும் இதற்கு விதிவிலக்கில்லை என்பது தான் வேதனையான செயல். தங்களுக்குக் கிடைக்கும் கோடிக்கணக்கான ரூபாய்களில் சில இலட்சங்களை தர்ம காரியங்களுக்குச் செலவு செய்து மக்களின் குறை தீர்க்கும் அவதாரங்களாக காட்டி கொள்கின்ற காரணத்தால் தான் இச்சாமியார்கள் மாட்டி கொண்டாலும் மவுசு குறையாமல் இருக்கின்றனர்.

மனிதனை நெறிப்படுத்த ஆன்மிகம் அவசியமே. அதே சமயம் மனிதனை நெறிப்படுத்துகிற ஆன்மிகத்தைப் பயன்படுத்தி வியாபாரம் செய்யும் போலி ஆன்மிகவாதிகள் அடையாளப்படுத்துப்படுவதும் அவசியம். வாயில் லிங்கத்தை எடுத்து மேஜிக் காட்டும் சாமியார்களானாலும், சாம்பிராணி புகை போட்டு குறை தீர்ப்பதாக சொல்லும் தர்கா பாபாக்களானாலும், மருத்துவமனைக்குச் செல்ல வேண்டாம் அருளாசியினாலேயே குணமாக்கி விடுவேன் என்று சொல்லும் தினகரன்களானாலும், எம்மதத்தைச் சார்ந்தவர்கள் ஆனாலும் மக்கள் இவர்களிடம் விழிப்புடன் இருக்க வேண்டும்.

அரசியல்வாதிகளும் தங்கள் சுயநலத்துக்காக இவர்களை ஊக்குவிக்காமல் ஒரு அடி தள்ளி நிற்க வேண்டும். மக்களுக்காக பேனாவை கொண்டு போராட வேண்டிய ஊடகத்துறை, தங்கள் வியாபாரத்தை மையப்படுத்தி இயங்காமல் சமூக அக்கறையோடு இத்தகைய ஆன்மிக வியாபாரிகளின் உண்மையான முகத்தை மக்களிடத்தில் தோலுரிக்க வேண்டும். இவற்றிற்கு எல்லாம் மேலாக மக்களும் தங்கள் பிரச்னைகளை தங்களைப் போன்ற இன்னொரு மனிதனால் தீர்க்க முடியாது என்பதை உணர்ந்து உண்மையான ஆன்மிகத்தைக் கடைப்பிடித்தால் இத்தகைய களைகள் பிடுங்கியெறியப்படுவார்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

பரபரப்பான வாழ்க்கையில் லட்சக் கணக்கில் பணம் சம்பாதித்தும் நிம்மதி, மகிழ்ச்சி இல்லாமல் இது போன்ற பெண் பித்தர்களிடமும், மோசடிப் பேர்வழிகளிடமும் சென்று ஏமாறும் அப்பாவி பொதுமக்கள், அரசு மருத்துவமனையில் அடிபட்டு கிடப்பவனிடம் ஒரு கிலோ பழம் வாங்கிக் கொடுத்து அவனிடம் இன்முகத்துடன் நலம் விசாரிக்கும் போது அவன் முகத்தில் தெரியும் மலர்ச்சியில் கிடைக்காத நிம்மதியா, இந்தப் பெண்பித்தர்களிடமும் ஏமாற்றுப்பேர்வழிகளிடமும் கிடைத்து விடப் போகிறது என்பதைச் சிந்தித்து உணரவேண்டும்.

ஒரு ஏழை மாணவனின் கல்விக்கு உதவி; பசியோடு இருப்பவனுக்கு ஒருவேளை வயிறார உண்ண உணவு; சாலையில் அடிப்பட்டு கிடப்பவனுக்கு இயன்ற சிறு உதவி; இப்படி எண்ணற்ற அறக்காரியங்களில் கிடைக்கும் நிம்மதியினையும் மகிழ்ச்சியையும் அனுபவித்தறியாமல், நிம்மதியைத் தேடி என்ற பெயரில் ஆன்மிக வியாபார சாமியார்களைத் தேடிச்சென்று நம் பணத்தை வாரியிறைப்பதன்மூலம் அவனின் மோசடிப் பித்தலாட்டங்களுக்கு ஒரு வழியில் நாமும் காரணமாகிறோம் என்பதை மட்டும் மறந்து விடலாகாது!

Add Comment