அப்பா கஷ்டத்தை நினைத்து படித்தேன்

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வில் 495 மார்க் எடுத்த, மாநிலத்தின் முதல் மாணவி ஜாஸ்மின்: சின்ன வயசில இருந்தே, நான் நன்றாக படிப்பேன். அப்பா, எட்டாம் வகுப்பு வரைதான் படிச்சார். அதனால, அவர் அடிக்கடி பேசும்போது, “நன்றாக படிக்கணும்மா… படித்தால்தான் குடும்பம் முன்னேற முடியும்… வேற எந்த நினைப்பும் உங்களுக்கு வேண்டாம்… படிக்கிற வயசுல ஒழுங்கா படிச்சா பிற்காலம் சந்தோஷமாக இருக்கும்’னு, சொல்லுவார். அது ரொம்ப உண்மைன்னு இப்பத் தெரியுது. நான் நன்றாக படித்ததால், எங்களின் இந்த சிறிய வீட்டைத் தேடி அமைச்சர்கள், எம்.எல்.ஏ., – எம்.பி.,க்கள்ன்னு, பலதரப்பட்ட பெரியவர்கள் வந்து, வாழ்த்திட்டுப் போறாங்க. எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு. அப்பா காலைல எம்-80 பைக்ல துணிகளை எடுத்துக் கட்டிட்டு கிளம்புவாங்க. அப்ப நாங்க உதவி செய்வோம். திருநெல்வேலியைச் சுற்றியுள்ள கிராமம் கிராமமா போய் வியாபாரம் பார்ப்பாங்க. சில நேரம் இரண்டு நாள் கழிச்சுதான், திரும்பி வருவாங்க. “கஷ்டப்பட்டு எங்களை படிக்க வைக்கிறாங்களே’ன்னு, மனசுல வச்சுக்கிட்டே படிச்சேன். நான் மாநிலத்தில் முதல் மார்க் வாங்குனதுல என்னை விட எங்க அம்மா, அப்பாதான் ரொம்ப சந்தோஷமா இருக்காங்க. அப்பா வியாபாரம் செய்யப்போகும் பல கிராம மக்கள், பேப்பர்ல எங்க குடும்பப் படத்தைப் பார்த்துட்டு, அப்பாவுக்கு போன் பண்ணி வாழ்த்துச் சொன்னாங்க. அது மறக்க முடியாத சம்பவம். அண்ணன் இம்ரான், “குடல் இறக்கம்’ என்ற நோயால் அவதிப்பட்டார். உடனே ஆபரேஷன் செய்யணும்னு டாக்டர்கள் சொல்லிட்டாங்க. அந்தச் சமயம் அண்ணனுக்கு பத்தாம் வகுப்புத் தேர்வு. எக்ஸாமா? ஆபரேஷனா? என பிரச்னை வந்தது. “எனக்கு நீதான்டா முக்கியம். எக்ஸாம் அப்புறம் எழுதிக்கலாம்’ன்னு, உடனே ஆபரேஷன் செய்யச் சொல்லிட்டார் அப்பா. இனிமேல் அவன் படிக்கிறேன்னு சொன்னது எனக்கு சந்தோஷமா இருக்குது.

நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு தேர்வில் முதல் இடம் பிடித்த நெல்லை மாணவி ஜாஸ்மினுக்கு முதல்வர் கருணாநிதி ரொக்கப்பரிசினை வழங்கியதுடன் அருகில் அழைத்து கன்னத்தில் தட்டிக்கொடுத்து பாராட்டினார்.பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் மாநில அளவில் சாதனை படைத்த 26 மாணவர்களுக்கு ஐந்து லட்சத்து35 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகையும், மாநில அளவில் முதல் ஆயிரம் இடங்கள் பெற்ற 1,100 மாணவர்களுக்கு, முதல்வர் கருணாநிதி, லேப்-டாப் வழங்கினார். தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் தமிழை ஒரு பாடமாகக் கொண்டு படித்து, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவ,மாணவியரின், உயர்கல்விச் செலவுகளை அரசே ஏற்கிறது.இதன்படி, கடந்த ஏப்ரலில் நடந்த பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற பாண்டியனுக்கு 50 ஆயிரம் ரூபாய், இரண்டாம் இடம் பிடித்த சந்தியா, காருண்யா, தினேஷ் ஆகியோருக்கு தலா 30 ஆயிரம், மூன்றாம் இடம் பிடித்த பிரதக்ஷனா, அபிநயா, மனோசித்ரா, ஆண்டோ நசரேன், ஸ்ரீவித்யா சம்பத் ஆகியோருக்கு தலா 20 ரூபாயும் பரிசாக வழங்கப்படுகிறது.

அதேபோல, 10ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பெற்ற ஜாஸ்மினுக்கு 25 ஆயிரம் ரூபாய், இரண்டாம் இடம் பெற்ற நிவேதா,சிவபிரியா, பிரியங்கா ஆகியோருக்கு தலா 20 ஆயிரம், மூன்றாம் இடம் பெற்ற ரம்யா, ஜெய்லின், திலகவதி, பிரதீப்குமார்,ஜெயமுருகன், இந்துஜா, ராஜ் சூரியா, நர்ஷீன் பாத்திமா, Buy Lasix மகேஷ்வரி ஆகியோருக்கு தலா 10 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது.
மேலும், மெட்ரிகுலேஷன் பொதுத் தேர்வில் முதலிடம் பெற்ற பவித்ராவுக்கு 25 ஆயிரம் ரூபாய், இரண்டாம் இடம் பெற்ற வந்தனாவுக்கு 20 ஆயிரம், மூன்றாம் இடம் பெற்ற லாவண்யாவுக்கு 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த 26 மாணவ,மாணவியருக்கும் முதல்வர் கருணாநிதி, மொத்தம் ஐந்து லட்சத்து 35 ஆயிரம் ரூபாயை பரிசுத் தொகையாக, தலைமைச் செயலகத்தில் வழங்கி, மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இதுதவிர, 10ம் வகுப்பில் தமிழ்வழியில் படித்து பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று, மாநில அளவில் முதல் ஆயிரம் இடங்களை பெறும் மாணவ, மாணவியருக்கு லேப்-டாப்களும் வழங்கப்பட்டன. நான்கு கோடியே 12 லட்சத்து 59 ஆயிரம் ரூபாய் செலவில், இந்த ஆண்டு 1,100 மாணவ,மாணவியருக்கு லேப்-டாப் வழங்கப்படுகிறது.

Add Comment