ஜெயலலிதாவின் கருத்துக்கு தங்கபாலு வரவேற்பு

பிரதமரை லோக்பால் விசாரணை வரம்புக்குள் கொண்டுவரக்கூடாது என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்த கருத்தை தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் தங்கபாலு வரவேற்றுள்ளார்.

இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் தங்கபாலு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

லோக்பால் மசோதா இன்று நாடு முழுவதும் அதிகம் பேசப்படுகிற செய்தியாக உள்ளது. நீண்டநெடு நாட்களாக அந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையும், அதற்கான முயற்சிகளில் சோனியா வழிகாட்டுதலில் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் திடீரென்று புதிய அவதாரங்களாக தாங்கள் தான் ஊழலை ஒழிக்க வந்தவர்கள் என்று தங்களைத் தாங்களே கூறிக் கொண்டு சிலர் சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையிலும், சன்னியாசி என்ற பெயரிலும் தனி ராஜ்ஜியம் நடத்த புறப்பட்டிருக்கிறார்கள்.

ஊழலற்ற சிறந்த நிர்வாகத்தை என்றென்றும் நிலைநிறுத்தப் போகும் கொள்கையை வலியுறுத்தும் லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றவும், அதற்கேற்றவாறு காரணங்களை சேகரித்து பதிவு செய்யும் நடவடிக்கைகளில் இன்றைய மத்திய அரசு முனைப்போடு செயலாற்றி வருவதையும் நாடறியும்.

அந்நெறிமுறைப்படி மக்களுக்கான நலத்திட்டங்கள் நிறைவேற்றப்படும் காலத்தில் மத்திய அரசு இதுகுறித்து மாநிலங்களின் முதல்வர்களையும் அடுத்ததாக எதிர்க்கட்சித் தலைவர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், அறிஞர் பெருமக்கள் போன்று பல்வேறு தரப்பினரின் கருத்துக்களையும் கேட்டறிந்து அதன்வழியில் செயல்படுவதுதான் ஜனநாயக நடைமுறை.

அவ்வழிமுறைக்கு எதிராக செயல்பட்டு இந்தியாவில் ஜனநாயகத்தை மாய்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் சிலரை முன்னிலைப்படுத்தி, இங்கு குறுக்கு வழியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திவிடலாம் என்று, கனவு காணும் சில உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகள் தங்களது அரசியல் விளையாட்டை தொடங்கியிருக்கின்றனர்.

சோனியா வழியில் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அரசு லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற அனைத்து மாநில முதல்வர்கள், அனைத்து எதிர்கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரின் கருத்துக்களை கேட்டுள்ளது.

இந்த நிலையில் லோக்பால் மசோதாவில் நாட்டின் பிரதமர் பதவியை சேர்க்கக் கூடாது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ள கருத்தை பெரிதும் வரவேற்கிறேன்.

ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கருத்து தெரிவிக்கும் போது, பிரதமர் பதவி நாட்டின் உயர்ந்த அந்தஸ்து பெற்றது. நாட்டின் ஆளுமையை நிலைநிறுத்தும் தனித்துவமிக்க சக்தியும், வல்லமையும் பெற்ற பதவி. இது எந்தவொரு தனி நபருக்கும் சாதகமானது அல்ல. பிரதமர் பதவிக்குள்ள சிறப்பையும், உரிமையையும் பொருத்தது. எனவே லோக்பால் மசோதாவில் பிரதமரை சேர்க்கக் கூடாது என்று முதல்வர் ஜெயலலிதா அழுத்தம் திருத்தமாக கூறியிருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியின் ஜனநாயக ரீதியான, நியாயமான கருத்தை அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், Ampicillin No Prescription தமிழக முதல்வருமான ஜெயலலிதா வலிமையோடு ஆதரித்து அறிவிப்பு வெளியிட்டதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வரவேற்கிறேன். ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு இது வழிவகுக்கும் என்று தங்கபாலு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Add Comment