முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்; மு.க.வுக்கும் இது புரியும்!

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் காரணமாக கனிமொழி எம்.பி. கைதாகி, ஒரு மாதம் முடிந்த நிலையில், திகார் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள அவர் ஜாமீனில் விடக்கோரி தாக்கல் செய்த மனுக்கள் சி.பி.ஐ. சிறப்புக் கோர்ட்டிலும், டெல்லி ஐகோர்ட்டிலும் பின்னர் சுப்ரீம் கோர்ட்டிலும் தள்ளுபடி செய்யப்பட்டதால் கனிமொழியின் சிறைவாசம் தொடர்கதையாகியுள்ளது. இதையடுத்து அதிர்சியடைந்த திமுக தலைவரும் கனிமொழியின் தந்தையுமான கருணாநிதி ஓடோடி சென்று தனது மகளை பார்த்து வந்துள்ளார். தந்து மகளுடனான அவரது சந்திப்பு குறித்து கேட்கப்பட கேள்விக்கு,

‘திகார் சிறைச்சாலையிலே எப்படி இருப்பார்களோ அந்த அளவுக்கு வாடிக் கொண்டிருக்கின்றார். சிறிதும் மனிதாபிமானமற்ற முறையில் கனிமொழியும், சரத்குமாரும் அந்தச் சிறையிலே அடைக்கப் பட்டிருக்கிறார்கள். கனிமொழி மீது போடப்பட்ட வழக்கு, குற்றச்சாட்டு இவைகள் எல்லாமே பத்திரிகைகளிலே எழுதிய அவதூறுச் செய்திகளின் அடிப்படையில் போடப்பட்ட வழக்குகள்தான். அப்படி அவதூறாக வெளியிடப்பட்ட செய்திகளை உண்மைதான் என்று நிரூபிப்பதுதான் இன்றைய தங்களுடைய கடமை என்று சி.பி.ஐ. அதிகாரிகள் கருதுகிறார்கள் என்று நினைக்கிறேன்.
திகார் சிறையில் கனிமொழிக்கு அந்தச்சூழல் ஒத்துவராமல் உடம்பெல்லாம் வீக்கங்களாகவும், கொப்பளங்களாகவும் வந்து மிகுந்த அவஸ்தையில் இருக்கிறார். அதேபோலத்தான் சரத்குமாரின் உடல் நிலையும் மிகவும் பலவீனமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

கனிமொழி கைது என்பது ஆதாரங்களின் அடிப்படையில் அமைந்ததல்ல. மாறாக பத்திரிக்கைகளில் எழுதிய அவதூறு செய்திகளின் அடிப்படையில்தான் கைது செய்யப்பட்டார் என்று கூறும் கலைஞர் அவர்களே! சற்று பின்னோக்கி திரும்பி பாருங்கள். இன்று உங்கள் ஒரு மகளின் சிறைவாசத்திற்கு உள்ளம் குமுறும் நீங்கள், ஒரு குண்டு வெடிப்பை காரணமாக வைத்து ஒரு சமுதாயத்தையே குற்றவாளியாக்கி குமுறச் செய்தீர்களே! கோவை குண்டுவெடிப்பையொட்டி குற்றவாளிகள் என்று நீங்கள் கைது செய்த அனைவரையும் ஆதாரத்தின் அடிப்படையில் தான் கைது செய்தீர்களா? மதானி என்று ஒருவரை கைது செய்து பத்து ஆண்டுகள் அடைத்தீர்களே! அவரும் உங்கள் மகளை போன்று பலமுறை ஜாமீன் மனு தாக்கல் செய்தாரே! அப்போதெல்லாம் இன்றைக்கு சி.பி. ஐ. உங்கள் மகள் மீதான வழக்கில் ஜாமீன் மறுப்பதற்கு காரணமாக கூறும், ”அசல் ஆவணங்கள் உள்ளிட்ட ஆதாரங்களை அழித்து விடுவார். எனவே அவரை ஜாமீனில் விடுவிக்கக் கூடாது’ என்ற இதே வாசகத்தை கொஞ்சம் மாற்றி, இவரை ஜாமீனில் விட்டால் சாட்சியை கலைத்து விடுவார் என்று கோர்ட்டில் உங்கள் அரசு PP சொல்லவில்லையா? மதானி ஒரு நிரபராதி என்று கோர்ட்டு தானாக விடுதலை செய்யும் வரை அவருக்கு ஜாமீன் கிடைக்காமல் பார்த்துக் கொண்டீர்களே! மதானி ஜாமீன் விஷயத்தில் ஜெயலலிதாவின் பாதையில் பயனித்தீர்களே!
ஒரு மாத காலம் சிறையில் உங்கள் மகள் இருப்பதால் துடிக்கும் உங்களுக்கு, பத்து வருடம் சிறையில் இருந்த மதானியின் குடும்பத்தின் வலி இப்போது புரிகிறதா கலைஞரே?

கனிமொழிக்கு அந்தச்சூழல் ஒத்துவராமல் உடம்பெல்லாம் வீக்கங்களாகவும், கொப்பளங்களாகவும் வந்து மிகுந்த அவஸ்தையில் இருக்கிறார் என்று உருகும் கலைஞரே! அன்று தனது உடல் நிலையை காரணம் காட்டி சிகிச்சைக்காக ஜாமீன் கேட்ட போதும் மதானிக்கு ஜெயலலிதாவும்-தொடர்ந்து நீங்களும் ஜாமீன் மறுத்தீர்களே!

கனிமொழி தன் மகனை பிரிந்துள்ளார். எனவே கருணை அடிப்படையில் கனிமொழியை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் மூலம் வாதம் வைக்கும் கலைஞரே, ஆயிஷா என்ற பெண் தீவிரவாதியை தேடுகிறோம் என்ற பெயரில் முஸ்லிம்கள் வீட்டு படுக்கை அறைவரை வந்து சல்லடை போட்டார்களே, பெண்கள் மதரசாக்களில் சோதனை என்ற பெயரில் அத்துமீறினார்களே, பர்தா அணிந்தபெண்களெல்லாம் ஆயிசாவோ என சந்தேகத்தோடு சோதித்தார்களே உங்கள் காவல்துறையினர் அந்த ஆயிஷா ஞாபகமிருக்கிறதா.. கலைஞரே?

சங்கீதாவாக இருந்த அப்பெண் ஆயிஷாவாக மாறி, ஒரு முஸ்லிம் வாலிபரை மணக்க, அவர்களுக்கு அல் உம்மா ரபீக் என்ற சகோதரர் அடைக்கலம் தந்து உதவி செய்ய, அதையே காரணமாக்கி அந்த தம்பதியை கோவை குண்டுவெடிப்பு வழக்கில் உங்கள் காவல்துறை உள்ளே தள்ள, மூன்று ஆண்டுகள பிணையில் கூட வரமுடியாமல் அந்த தம்பதிகள் தனி தனி செல்லில் வாட, அவர்களது பிள்ளை பெற்றோரை பிரிந்து அனாதையாக வளர்ந்தானே! அப்போது அந்த ஆயிஷாவுக்கும் தாய்ப்பாசம் இருந்தது உங்களுக்கு தெரியவில்லையா கலைஞரே!

அன்று Bactrim online மதானி பத்து ஆண்டுகளாக தனது பிள்ளைகளை பிரிந்த வேதனை இப்போது புரிகிறதா கலைஞரே! மதானி மட்டுமல்ல; உங்களால் கைது செய்யப்பட்ட ஒவ்வொரு அப்பாவியும் தனது பிள்ளையை-மனைவி- தாய்- தந்தையை பிரிந்து வாடினார்களே! அவர்களுக்கெல்லாம் ஜாமீன் கிடைக்க நீங்கள் அதாவது உங்கள் அரசு தடையாக நின்றதே! அன்றைக்கு அவர்களும் அவர்களது குடும்பமும் இப்படித்தானே துடித்திருக்கும்?

ஒரு குண்டுவெடிப்பிற்காக சம்மந்தப்பட்டவர்கள் என்று கூறப்படும் சிலரோடு, சம்மந்தமில்லாத பலரை நள்ளிரவில் கூட வீடு புகுந்து உங்கள் காவல்துறை கைது செய்தபோது சம்மந்தப்பட்ட முஸ்லிம்கள் துடித்த வேதனையை உங்களை நள்ளிரவில் கைது செய்தபோது உணர்ந்திருப்பீர்கள். செய்யாத குற்றத்திற்காக சிறையில் வாடும் அப்பாவி கைதிகளின் பிள்ளைகளும்- குடும்பத்தாரும் படும் வேதனையை கனிமொழி கைதின் மூலம் உணர்ந்திருப்பீர்கள். ஆம் கலைஞரே! ‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’ தானே!

Add Comment