தென்காசி ரயில்வே மேம்பால பணி நிறுத்தம்; பொதுமக்கள் அதிருப்தி

தென்காசி ரயில்வே மேம்பால பணி நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். தென்காசி நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ரயில்வே ரோட்டில் ரயில்வே மேம்பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இக்கோரிக்கையினை அரசு ஏற்றுக் கொண்டு மேம்பால பணிக்காக 27 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ரயில்வே மேம்பால பணி நெடுஞ்சாலைத்துறை சார்பிலும் மத்திய ரயில்வே துறை சார்பிலும் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. நெடுஞ்சாலைத்துறை சார்பில் 660 மீட்டர் தூரம் மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 15.12.2009 அன்று துவங்கியது.

ரயில்வே மேம்பால பணிக்காக ரயில்வே ரோட்டில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. கனரக வாகனங்கள் இலஞ்சி, குத்துக்கல்வலசை வழியாக திருப்பி விடப்பட்டது. இருசக்கர, மூன்று சக்கர, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட இலகுரக வாகனங்கள் ரயில்வே ரோடு, ரயில்வே மேட்டு தெரு வழியாக திருப்பி விடப்பட்டது. ரயில்வே கேட்டிற்கு இருபுறமும் மேம்பாலம் அமைக்கும் பணி துரிதமாக நடந்தது. இருபுறமும் பெரிய அளவிலான பில்லர் எழுப்பப்பட்டு கான்கிரீட் மேல் தளம் அமைக்கப்பட்டது. ரயில்வே மேம்பால பணி முடிந்து கடந்த ஜூன் மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு மேம்பாலம் திறக்கப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் திட்டமிட்டபடி பணிகள் முடிவடையவில்லை.

நெடுஞ்சாலைத்துறை சார்பில் 90 சதவீத பணிகள் முடிந்து விட்டது. ரயில்வே துறை சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் துவக்க நிலையிலேயேதான் இருக்கிறது. ரயில்வே துறை ஒப்புதல் வழங்கிய பிறகுதான் நெடுஞ்சாலைத்துறையினர் வாகன போக்குவரத்தை தடை செய்து பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமாம். ஆனால் நெடுஞ்சாலைத்துறையினர் ரயில்வே அனுமதியை பெறாமலேயே மேம்பால பணியை துவக்கி வாகன போக்குவரத்தை தடை செய்து விட்டனர். இதனால் ரயில்வே துறை உரிய நேரத்தில் அனுமதி கொடுக்காமல் இருப்பதாக கூறப்படுகிறது.

ரயில்வே கேட்டிற்கு மேல் மேம்பாலம் அமைப்பதற்கு டெண்டர் விடப்பட்டது. குறிப்பிட்ட காலத்தில் ரயில்வே துறை உரிய அனுமதியை வழங்காததால் பணி ஒப்பந்தம் பெற்றவர்கள் தங்களது பணியை திரும்ப ஒப்படைத்து விட்டனர். மேம்பால பணி நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். ரயில்வே துறை உரிய அனுமதியை வழங்க இன்னும் 3 மாத காலம் ஆகும் என கூறப்படுகிறது. இதன் பின்னர்தான் புதிதாக டெண்டர் விடப்பட்டு பணிகள் துவக்கப்படும். இப்பணி முடிவடைய குறைந்தது 9 மாதங்கள் ஆகலாம். இதனால் ரயில்வே மேம்பால பணி முழுமை பெற இன்னும் ஓராண்டு ஆகும் என கூறப்படுகிறது.

ரயில்வே கேட் பகுதியில் சப்-வே அமைக்கும் பணி நடந்தது. பிளாட்பாம் 1, 2 பகுதியில் சப்-வே அமைக்கப்பட்டுள்ளது. தற்போது பிளாட்பாம் 3, 4ல் ரயில் போக்குவரத்து உள்ளது. பிளாட்பாம் 1, 2ல் பிராட்கேஜ் பாதை அமைக்கப்பட்டு அதில் ரயில் இயக்கப்பட்ட பின்னர்தான் அடுத்த கட்டமாக சப்-வே அமைக்கும் பணி நடக்கும். விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டாலே இதற்கு ஓரிரு மாதங்கள் ஆகலாம்.

மேம்பாலத்தின் இருபுறமும் சர்வீஸ் ரோடு அமைப்பதற்காக கட்டடங்கள் இடிக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணி முழுமை பெற்ற பிறகுதான் சாலை அமைக்கும் பணி நடக்கும். இதற்கும் சில மாதங்கள் ஆகலாம். மொத்தத்தில் முயல் வேகத்தில் துவங்கிய மேம்பால பணி தற்போது ஆமை வேகம் கூட இல்லாமல் முடங்கி கிடக்கிறது. இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து மேம்பால பணியை பூர்த்தி செய்து மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வர வேண்டும். இதற்கான அனைத்து முயற்சிகளையும் மக்கள் பிரதிநிதிகள் மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினரும் விரும்புகின்றனர்.

buy Lasix online

Add Comment