இலங்கையிடம் கெஞ்சுதலோ கொஞ்சுதலோ கூடாது!: கி.வீரமணி

சென்னை: சிங்கள ராஜபக்சே ஆட்சிக்கு இந்தியா இதுவரை கொடுத்த உதவிகள் ராணுவ உதவிகளில் தொடங்கி பல்வேறு உதவிகள்தான் இவ்வளவு பெரிய கொலைக்களக் காட்சி சிங்கள அரசால் தங்கு தடையின்றி நடப்பதற்கு மறைமுகமாக உதவியதாகவே அமைந்துவிட்டது என்பது மறுக்கப்பட முடியாத உண்மைகளாகும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டுத் தமிழர்களின் தொப்புள் கொடி உறவுள்ள, 30 கல் தொலைவில் உள்ள அண்டைய நாடான இலங்கையில் தற்போது உள்ள சிங்கள ராஜபக்சே அரசு, பயங்கரவாதத்திற்கு எதிரான தனது போரை நடத்துகிறோம் என்றுகூறி, அந்த மண்ணின் பூர்வீக மைந்தர்களான தமிழர்களின் வாழ்வுரிமையையே பறித்து, அவர்களில் பல லட்சக்கணக்கான அப்பாவித் தமிழர் சிவிலியன்களைக் கொன்றும், அவர்களை முள் வேலிக்குள் அடைத்தும், அவர்களது நிரந்தரக் குடியிருப்புகளைப் பறித்து, சிங்களக் குடியேற்றத்தை தமிழர் பகுதிகளில் திட்டமிட்டு நடத்தியும் வரும் கொடுமைக்கு இன்னமும் ஒரு முற்றுப்புள்ளி அங்கே இல்லை!.

இந்திய அரசின் பொருளாதார உதவிகள், வீடு கட்டும் திட்டம், அரசியல் தீர்வு விரைவில் காண்போம் என்று கொடுத்த வாக்குறுதிக்கு எதிராக, அங்குள்ள ஈழத் தமிழர்களுக்கு அடிப்படை வாழ்வாதாரத்திற்குக்கூட வழிவகை செய்யாதது இவையெல்லாம் இன்று உலகத்தார் கண்களை அகலத் திறந்து பார்த்து, இந்த அவலத்திற்கு முடிவு கட்ட வேண்டும் என்ற நிலையில், ஐ.நா. மாமன்றம் ராஜபக்சேவைப் போர்க் குற்றவாளியாக்கிட நடவடிக்கை வேண்டும் என்று அறிக்கை கொடுத்து, அதன்மீது அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கைக்கு செய்யவிருந்த உதவிகளைக்கூட நிறுத்தி வைத்துள்ளனர்!.

இங்கிலாந்து நாட்டின் சேனல்-4 என்ற தொலைக்காட்சியில் இலங்கையில் நடந்த பல லட்சக்கணக்கான அப்பாவி தாய்மார்கள், குழந்தைகள் முதலியவர்கள் உள்பட பலரைக் கொன்று குவித்த காட்சிகள் பல நாட்டுப் நாடாளுமன்ற உறுப்பினர்களை பார்வையாளர்களான பன்னாட்டு மக்களை குமுறிக் குமுறிக் ‘கோ’வென்று கண்ணீர் விட்டு அழச் செய்துள்ளது என்ற செய்தி மனிதாபிமானம் இன்னும் உலகத்தில் செத்துப் போய் விடவில்லை என்பதை நிரூபித்துக் கொண்டுள்ளது.

இலங்கையின் முன்னாள் அதிபரான திருமதி சந்திரிகா குமாரதுங்கே, ஒரு நிகழ்ச்சியில் நேற்று முன்னாள் பேசுகையில், அந்த தொலைக்காட்சி காட்டிய கொலைக் களக்காட்சி ஈழத் தமிழர்கள் ஈவு இரக்கமின்றிக் கொல்லப்பட்ட கொடூரக்காட்சி குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.

அந்நிகழ்ச்சியில் தழுதழுத்த குரலில், சிறிது நேரம் பேசாமலே அமைதியாக இருந்த பின்னர் தொடர்ந்த உரையில் அவர், இந்த வீடியோ காட்சியை தனது 28 வயது மகன் பார்த்ததாகவும், தான் சிங்களவன் என்று கூற வெட்கப்படுவதாகவும் விம்மி விம்மி அழுதபடி கூறியதாகத் தெரிவித்துள்ளார்!.

இதே கருத்தை தனது மகளும் வெளியிட்டதாகக் கூறி, இலங்கையில் தமிழர்களின் உரிமையை அவர்கள் சிறுபான்மையினராக இருந்தாலும் அங்கீகரித்து, அவர்களையும் கூட்டாட்சியாக நடத்திட ஒரு புதிய தீர்வு காணப்பட வேண்டும்; விடுதலைப் புலிகளை அழித்து விட்டோம் என்று கூறி அத்தோடு பிரச்சனை தீர்ந்தது, சிறுபான்மைத் தமிழர்களை மதிக்காமல், மிதித்தால் ஏற்படும் விளைவுகள் பற்றி சிந்திக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

சிங்கள ஹிட்லர் ராஜபக்சே காதுகளில் இது செவிடன் காதில் ஊதிய சங்காகவே முடியும்.

இலங்கை அரசின்மீது பொருளாதாரத் தடையை விதிக்க இதுவரை அமெரிக்கா போன்ற நாடுகள் முன்வராவிட்டாலும், அது தரவிருந்த பொருளாதார உதவிகளை நிறுத்தி வைக்க, அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வற்புறுத்தியதை ஏற்றுச் செயல்பட்டிருக்கிறது!.

7 கோடி தமிழ்நாட்டுத் தமிழர்களின் உணர்வுகளை மட்டுமல்ல; உலக முழுவதும் உள்ள தமிழர்கள் புலம் பெயர்ந்த தமிழர்கள் உட்பட இந்திய அரசின் தெளிவான, திட்டவட்டமான செயல்பாடுகளில் இனியாவது மனிதாபிமானம் மேலோங்கும் உறுதிப்பாடு வருமா என்று எதிர்பார்க்கின்றனர்!.

சிங்கள ராஜபக்சே ஆட்சிக்கு இந்தியா இதுவரை கொடுத்த உதவிகள் ராணுவ உதவிகளில் தொடங்கி பல்வேறு உதவிகள்தான் இவ்வளவு பெரிய கொலைக்களக்காட்சி சிங்கள அரசால் தங்கு தடையின்றி நடப்பதற்கு மறைமுகமாக உதவியதாகவே அமைந்துவிட்டது என்பது மறுக்கப்பட முடியாத உண்மைகளாகும்.

நடந்தவை எப்படியோ போனாலும் இனி நடப்பவைகளாவது நல்லவைகளாக இந்திய அரசின் நிலைப்பாட்டைப் பொறுத்தவரை அமைய வேண்டாமா?. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் ஓடும் மனிதநேயப் பிரவாக வெள்ளம் சிங்கள சந்திரிகாக்களிடம் ஏற்பட்டுள்ள நெஞ்சின் ஈரம், மத்தியில் ஆட்சியில் உள்ளவர்களுக்கு அதுவும் தமிழ்நாட்டு மக்களின் வாக்குகளால் பெற்ற ஆதரவு காரணமாக அரியணையில் அமர்ந்து ஆட்சி நடத்தும் ஓர் ஆட்சிக்கு வர வேண்டாமா? இன்னும் அமைதியாக வேடிக்கை பார்க்கும் ஆட்சியாக இருக்கலாமா? நியாயந்தானா?.

ஒவ்வொரு தமிழனின் உணர்வு மட்டும் அல்ல இது. மனிதாபிமானம் பொங்கும் உலக மக்களின் அவர்கள் எந்த இனத்தவராக இருந்தபோதிலும், எந்நாட்டவராக இருந்தபோதிலும் எழுப்பும் கேள்விகள் இவைகள்!.

இதனை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் தலைவர் திருமதி சோனியா காந்தியும், பிரதமரும், அவரது காங்கிரஸ் கட்சியும் யோசிக்க தயங்கக்கூடாது!.

நேற்று சோனியா காந்தி அவர்கள் பக்கத்து பங்களாதேஷ் நாட்டிற்குச் சென்று, முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கென அந்நாடு தந்த முதல் விருதினை, வங்கதேசம் உருவாவதற்கு அவர்கள் உதவியதற்கான விருது பெற்று நன்றி கூறி திரும்பியிருக்கிறார்! வங்கதேசம் பாகிஸ்தானிலிருந்து பிரிவதற்கு இந்தியாவும், அந்நாள் பிரதமரும், மக்களும் உதவியதற்கான காரணங்களைவிட, பல மடங்கு நியாயமான, அவசியமான, அவசரமான காரணங்கள், அரசியல் ரீதியாகவும், இன ரீதியாகவும், மனிதநேய அடிப்படையிலும் தமிழர்களுக்குத் தனி ஈழம் நிரந்தர வாழ்வுரிமையை அவர்கள் நிம்மதியாக அனுபவிக்க ஒரே தீர்வாக அமைவதற்கு ஆயிரமாயிரம் உண்டு.

எனவே இந்திய அரசு, இனியும் இலங்கை அரசுடன் கொஞ்சுதலோ, கெஞ்சுதலோ செய்யாமல், உத்தரவு போட வேண்டும். அவர்கள் சீனாவுடன், பாகிஸ்தானுடன் போய்ச் சேர்ந்து கொள்வார்கள் என்ற பூச்சாண்டிக்கு இணங்கி ‘‘பாம்புக்குத் தலை; மீனுக்கு வால்’’ என்பதுபோல நடந்து கொள்ளக்கூடாது.

அந்நாள் பிரதமர் திருமதி இந்திராகாந்தி விடுதலைப் புலிகள் போன்ற அமைப்புகளுக்கு இடம் தந்து ஆயுதப் பயிற்சி Buy Cialis தந்தார் என்ற தொலைநோக்கிற்கான அரசியல் காரணங்களை ஆராய்ந்தால், இந்திய பாதுகாப்பும் அதன் முக்கிய அம்சம் என்பது புரியும்.

அரசியல் தீர்வு என்ற பெயரில் இலங்கையில் உள்ள ஈழத் தமிழர்களை மீண்டும் முள்வேலிக்குள் வசித்திடும்படிச் செய்யக் கூடாது.

தமிழ்நாட்டில், ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகள் என்ற பேதங்கள் இப்பிரச்சினையில் இல்லை என்ற நிலைப்பாடு உருவாக, இங்குள்ள நமது அரசியல் கட்சிகள் பொது எதிரி யார் என்று மட்டுமே சிந்தித்து, தமிழர்கள் வாழ்வுரிமையை மையப்படுத்திப் பாடுபட முன்வர வேண்டுமே தவிர குற்றப் பத்திரிகைகளைத் தயாரிக்கும் வீண் வேலையில் ஈடுபட்டு, காரியத்திலிருந்து நழுவி விடக் கூடாது என்பதே நமது அன்பான வேண்டுகோள் அனைவருக்கும்!.

தனி ஈழத்தின் அடிநாதம் போகாது என்பதைத்தான் அண்மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் தமிழர்கள் வெளிப்படுத்திய விவேக முடிவுகளும், வெற்றிகளும் என்ற சுவர் எழுத்துகளையும் பார்த்துப் பாடம் அனைவரும் படிக்க வேண்டும். இந்திய அரசு ஆழ்ந்து சிந்தித்துச் செயல்பட வேண்டும் என்பது நமது வேண்டுகோள் என்று கூறியுள்ளார் வீரமணி

Add Comment