ஆபாச படங்களுக்கு வரி விலக்கு ரத்து:ஜெயலலிதாவுக்கு திரையுலகத்தினர் பாராட்டு!

வன்முறை, ஆபாச படங்களுக்கு வரிவிலக்கு ரத்து செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளதற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு இயக்குநர் தங்கர் பச்சான், அபிராமி ராமநாதன் உள்ளிட்ட திரையுலக பிரமுகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து இயக்குநர் தங்கர் பச்சான் வெளியிட்டுள்ள அறிக்கை:

சினிமா என்னும் திரைப்படக் கலையின் மூலம் எண்ணற்ற நன்மைகள் இருந்தாலும், நமக்கான மரபுகலைகளையும், பழங்கலைகளையும், நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வையும் அது அழித்திருக்கிறது.

இன்று மக்களின் கலையாகவும், அவர்களின் வாழ்வையும் பிரதிபலிக்கிற கலையாகவும் மாறிவிட்ட திரைப்படக் கலையை மிகவும் பொறுப்புடனும், கவனமாகவும் கையாள வேண்டிய கடமை அதனை சார்ந்த உருவாக்குபவர்களுக்கு இருக்கிறது. நம் மொழியையோ, பண்பாட்டையோ, நம் மதிப்பீடுகளையோ பற்றி கவலைப்படாமல் லாபம் சம்பாதிக்க வேண்டும் என்கிற ஒரே நோக்கத்திற்காக மக்கள் விரும்புகிறார்கள் எனச்சொல்லி திரைப்படத்தை உருவாக்குபவர்களும் சமூகத்தின் முன் குற்றவாளிகள்தான்.

தமிழ் படங்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக தான் முந்தைய தமிழக அரசு தமிழில் பெயர் சூட்டும் திரைப்படங்களுக்கு வரிச்சலுகை அளித்தது. ஆனால் அதனை சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டோமா என்பது திரைத்துறையில் உள்ளவர்களுக்கு புரியும்.இதே வரிவிலக்கு தொடர்பாக நேற்று வெளியிடப்பட்டுள்ள தமிழக அரசின் நிபந்தனைகள் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.

தமிழில் பெயரை சூட்டி விட்டு மொழி, பண்பாட்டு, கலாசார கூறுகளை எவ்வளவு வேண்டுமானாலும் சிதைக்கலாம், யதார்த்தம் என்கிற பெயரில் ஆபாசம், வன்முறைக்காட்சிகளை கூசாமல் காட்டி வருங்கால தலைமுறைகளையும் சீரழிக்கலாம் என்கிற போக்குக்கு கடிவாளம் போடப்பட்டிருக்கிறது.

தேவையில்லாமல் அயல் மொழிகளை புகுத்துபவர்களுக்கும், வன்முறை, ஆபாச காட்சிகளை உருவாக்கி பொழுதுபோக்கு என்கிற பெயரில் உருவாகிற திரைப்படங்களுக்கும் வரி விதிக்கப்படும், தமிழ்பண்பாடு, கலாசாரம், மொழியை போற்றுகின்ற படைப்புகளுக்கு வரி விலக்கு அளிக்கப்படும் என்கிற இத்தகைய அறிவிப்பு இந்தியாவில் எந்த மாநிலத்திலும் செயல்படுத்தாத புரட்சிகரமான அறிவிப்பாகும். இது பொறுப்புள்ள கலைஞர்களும், தமிழர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

மொழி, பண்பாடு அடையாளங்களை காப்பதற்கு மேற்கொண்டுள்ள தமிழக அரசு இவை முழுமையாக நிறைவேற வேறொரு நிபந்தனையையும் விதிக்க வேண்டும். ஆங்கிலத்தில் பெயரிட்டாலும், சமஸ்கிருதத்தில் பெயரிட்டாலும் இரண்டுமே வேற்று மொழி தான். கடந்த காலங்களில் வரி விலக்கினைப் பெற்று பலனை அனுபவித்து வெளியான படங்களில் சமஸ்கிருதம் சொற்களை கலந்து வந்தவை ஏராளம்.

தூய தமிழ் சொற்களுடன் சமஸ்கிருதம் கலக்காத பெயர்களை சூட்டுபவர்களுக்கு தான் வரி விலக்கு என்பதை உடனே அறிவிக்க வேண்டும். இதனை தான் தமிழ் அறிஞர்களும், தமிழ் மக்களும் எதிர்பார்க்கின்றனர்.

வரிவிலக்கு தொடர்பான நிபந்தனைகளை செயல்படுத்தும் குழுவில் தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் இடம் பெறுவார்கள் என நம்புகிறோம்.

இந்த அறிவிப்பினை வெளியிட்ட முதல்வர் ஜெயலலிதாவிற்கு கலைஞன் என்ற முறையிலும், தமிழன் என்ற முறையிலும், எனது அளவற்ற மகிழ்ச்சியினையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்,” என்று கூறியுள்ளார்.

அபிராமி ராமநாதன்

இது குறிதுத்து தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் அபிராமி ராமநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை: “தமிழில் பெயரிடப்பட்ட தமிழ் படங்களுக்கு சில நிபந்தனைகளுடன் முழு வரி விலக்கு அளித்தமைக்கு முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி. தணிக்கைக் குழு அனுமதிக்கும் “யு” சான்றிதழ் பெற்ற, அனைவரும் பார்க்கலாம் என்ற தமிழர் பண்பாட்டிற்கேற்ப ஆபாசமற்ற மற்றும் வன்முறை காட்சிகளைத் தவிர்த்து எல்லோரும் குடும்பத்தோடு பார்க்க கூடிய தமிழ்ப் படங்கள் தயாராவதற்கு இதுமிகச் சிறந்த வழி வகுக்கும்.”இவ்வாறு கூறியுள்ளார்.

அண்ணாமலை

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் அண்ணாமலை, பொதுச்செயலாளர் ஆர். பன்னீர்செல்வம், இணைச் செயலாளர் எஸ். ஸ்ரீதர், பொருளாளர் எஸ்.ஹரிகோவிந்த் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்த் திரைப்படங்களுக்கு முழு கேளிக்கை வரி விலக்கு சான்றிதழ் பெறுவதற்கான சில புதிய நிபந்தனைகளை விதித்து வெளியிட்டமைக்கு முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

புதிய நிபந்தனைகள் தமிழ்த் திரையுலகின் தரத்தினை மேலும் உயர்த்தும். இதன் மூலம் தரமான தமிழ்த் திரைப்படங்கள் வெளிவரும். தமிழக அரசின் சார்பாக கேளிக்கை வரி விலக்கு அளிப்பதற்காக Buy Bactrim Online No Prescription ஒரு புதிய குழுவினை அரசு நியமிக்க இருப்பதை அரசாணையின் மூலம் தெரிந்து கொண்டோம்.

தமிழகம் முழுவதுமுள்ள சுமார் 1,500 திரையரங்குகளின் பிரதிநிதியாக விளங்கும் எங்களது சங்கத்திற்கும் அந்த புதிய குழுவில் உரிய பிரதிநிதித்துவம் தரும்படி கேட்டுக் கொள்கிறோம்.

தமிழ் திரைப்பட பாதுகாப்பு கழக தலைவர் கே.ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆபாசம், வன்முறை இல்லாத குடும்ப பாங்கான படங்களுக்கு வரி விலக்கு அளித்த முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டுகிறோம். திருட்டு வி.சி.டி.யை ஒழிக்க குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்,” என்று கூறியுள்ளனர்.

Add Comment