லெச்சமெல்லாம், நம்ம ஊர்ல இப்போ.. காக்கா எச்சமாதிரி ஆயிபோச்சு மச்சான்…

“சாவலு மாப்பிளே.., ஒரு சாயா போடுவே.., சாயாவே ஆத்தாம கொஞ்சம் சூடாத்..தாவே..” என்றவாறு தலையில் மப்லரைக் கட்டியவாறு சாயாக்கடை பெஞ்சில் வந்து அமர்ந்தார் மைதீன்.
“வாங்கோ மச்சான். என்ன..வேய் இப்பத்தான் பனியே ஆரம்பிக்குது அதுக்குள்ளே இம்புட்டுத் தண்டி மப்லரை தலையில சுத்திட்டு வந்து நிக்கிறே..” என்று கேட்டார் டீ மாஸ்டர் சாகுல் ஹமீது.
“அடிக்கிற பனிலே நம்மளால தாக்குப் பிடிக்க முடியல மாப்பிளே.., எப்படித்தான் இந்தப் பனியிலும் பசங்க நெனைச்ச நேரத்திற்கு தென்காசி, குற்றாலம், ஐந்தருவி, மணலாறு, திருநெல்வேலினு பைக்கில போயிட்டு வர்றாங்கோனு தெரியலே.., பசங்கதான் பிரண்டோட போயிட்டு வர்றாங்..கோனா.., செல கல்யாணம்  முழுச்சவங்களும் பொண்டாட்டிய பின்னால் வெச்சுக்கிட்டு நெனைச்ச இடத்துக்கு போயிட்டுத்தான் வர்றாங்கோ.., பத்தாதுக்கு சின்னெ புள்ளைகளையும் முன்னால டேங்குல படுக்க வெச்சுக்கிட்டு வேறே போறாங்கோ, என்ன சொல்றியோ மாப்பிளே..” என்று மைதீன் கேட்க.
“அதான் மச்சான் நம்மூர்ல எம்புட்டு சின்ன சின்னப் பசங்கள்லாம் ஆக்ஸன்டெண்டுல காயப்பட்டு கை காலோட ஆண்டுக்கணக்கா ட்ரீட்மெண்டு செய்துக்கிட்டு இருக்காங்க தெரியுமா? கல்யாணம் பண்ற வயசுல அநியாயமா எத்தன பேரு இறந்;து போனாங்க தெரியுமா மச்சான்?. கொஞ்ச நாளைக்கு முன்னாலகூட ஒரு பதினைஞ்சு வயசுப் பையன் ஆய்குடி பக்கத்துல பைக்குல வேகமா போயி சின்னப் பள்ளத்துல விழுந்து அநியாயமா இறந்து போனதா பேசிக்கிட்டாங்க” என்று சாகுல்ஹமீது கூற,
“ஆமா, மாப்பிளே.., நாங்கூட கேள்விப் பட்டேன். பாவம் பத்தாவது வகுப்பு படிச்சிக்கிட்டு இருந்தானாம், ஏதோ வாடகை பைக்குல போனானாம் உடம்புல எந்த அடியுமில்லாம இறந்து போனானாம், அப்பிடினா அவனுக்கு வயசு பதினைஞ்சுதான் ஆச்சு.., எப்படி பதினைஞ்சு வயசுலே பையனை நம்பி லைசென்சு இருக்கா..னு கேக்காம பைக்கே வாடகைக்கு கொடுத்தாங்கனு தெரியலை மாப்பிளே..” என்று மைதீன் கேட்க.
“மச்சான்.., உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா.? இந்தக் கடைய நல்லூருல வெளி நாட்லயிருந்து வர்றவங்களுக்கும், உள்நாட்ல யிருக்கிறவங்களுக்கும் எம்புட்டு பைக்கு வாடகைக்கு கொடுத்துக்கிட்டு சம்பாதிச்சிக்கிட்டு இருக்காங்கோ தெரியுமா?, ஆனா ஒருத்தர்ட்டக்..கூட பைக்கே வாடகைக்கு கொடுக்கிறதுக்கு லைசென்சு இல்லியாம். அதுமட்டும் இல்லே மச்சான்..
அவங்க பைக்கே வாடகைக்கு வாங்க வர்றவங்கிட்ட லைசென்சு இருக்கா..னு கேக்கிறதுமில்லையாம். இவனுவோ.. லைசென்சு வெச்சு யாபாரம் செஞ்சாத்தானே.. எடுத்திட்டுப் போறவங்கள்ட்டயும் லைசென்ஸ் இருக்கா..னு கேப்பாங்கோ.., எவெனேயும் எடுத்துட்டுப்போயி எப்படியேனும் சாவுறானுவோ..னு நெனைச்சுக்கிட்டுத்தானே இந்த மாதிரியெல்லாம் வாடகைக்கு கொடுக்கிறானுவோ..?
தமிழ் நாட்டிலே நம்ம ஊர்லதான் அதிகமான பைக்கு சேல்ஸ் ஆயிருக்காம் இப்போ புதியதாய் வந்த பைக்குலே வெல உயர்ந்த பைக்குல தமிழ் நாட்டுலேயே நம்ம ஊர்லதான் மூனூ பைக்கு சேல்ஸ் ஆயிருக்காம் வெல என்னானு தெரியுமா.. மச்சான் ஒரு லச்சத்தி முப்பதாயிரம் ரூபாயாம், லெச்சமெல்லாம், நம்ம ஊர்ல இப்போ.. காக்கா எச்சமாதிரி ஆயிபோச்சு மச்சான். என்ன சொல்றியோ” என்றவாரே அடிசாயா ஒன்றை மைதீன் கையில் கொடுத்தார் டீ மாஸ்டர் சாகுல்ஹமீது.
“சரியா சொன்ன மாப்பிளே..,சின்னச் சின்ன பிள்ளையளுக்கெல்லாம் மூவாயிரம் ரூபாயிக்கு மேல பணத்தைக் கொடுத்து சின்னச் சின்ன சைக்கிள் வாங்கி கொடுக்கிறாங்கோ…, கொஞ்ச நாளுல அது வாசல்ல வற்ர பழைய இரும்பு வெலைக்கு வித்துட்டு பாத்திரங்கோ வாங்குறாங்கோ, படிக்கிற மாணவங்களுக்கு அரசாங்கம் இலவசமா சைக்கிள் கொடுக்குது அதுவரைக்கும் பொறுமையில்லாம.., கையில காசுயிருக்கிற தெம்புல விதவிதமான வெலையுயர்ந்த சைக்கிளே வாங்கி கொடுக்கிறாங்கோ.., சைக்கிள் வாங்கி கொடுக்கிறதையோ.., பைக்கு வாங்கி கொடுக்கிறதையோ நான் கொறையா சொல்லலே.., பணம் பொழக்கத்த..தான் சொல்றேன். இன்னொறு விஷயம் உங்களுக்கு தெரியுமா மாப்பிளே..” என்ற மைதீன். டீ மாஸ்டர் கொடுத்த அடி சாயாவை சுட்டு விடுமோ.. என்ற பயத்தோடு உறிஞ்சிக் குடித்தவராய் பேச்சைத் தொடர்ந்தார்.
“பிஜேபி காரங்க கடுமையான நெருக்குதல் கொடுக்கிறாங்களாம் சிபிஐக்கு, என்னானு தெரியுமா? நம்ம ஊர்ல கடுமையான பணப் புழக்கம் இருப்பதாகவும், ஹவாலா பணம் புழங்குவதாகவும், அண்ணிய நாட்டு தீய சக்திகளோடு தொடர்பு இருக்கலாம்னு சந்தேகப்பட்டு பிஜேபி காரங்கோ சிபிஐக்கு பிரஷர் கொடுத்துக்கிட்டு இருக்கிறதா தகவல் கெடைச்சிருக்கு.
இந்தளவுக்கு ஏன் நம்ம நடந்துடக்கனும். வெளிநாட்டுல எவ்வளவு செரமப்பட்டு சம்பாதிக்கிறாங்கோ, நம்ம ஆள்கள் மட்டுமா சம்பாதிக்கிறாங்கோ. நம்ம ஊர்லயிருந்து வெளி நாட்டுக்கு போயிருக்கிற எல்லா ஜாதிக் காரங்களும்தான் சம்பாதிக்கிறாங்கோ.., எல்லாரும்தான் வீடு கட்டுறாங்கோ சொத்து வாங்குறாங்கோ.., ஆனால் நம்ம ஆள்களுக்கு மேல எப்பவும் எல்லாப் பேருக்கும் ஒரு கண்ணாகத்தான் இருக்கு..,
இந்த நெலையில நம்ம தெருவுல வந்து விக்கிற ஒரு மீனாகட்டும், ஒரு கறியாகட்டும், ஒரு பழமாகட்டும், நம்ம ஊர்ல மத்தப் பகுதியக் காட்டிலும், நம்ம தெருவுல ஒரு வெலதான் ஏன் அப்படி?, நம்ம ஊர்க்காரங்க எந்த ஊருக்கு ட்ரீட்மெண்டுக்குப் போனாலும் தனி கவனிப்புதான்..,  தனி ரூம்புதான், தனிப் பீஸ்தான். கடையநல்லூர்ல எத்தன கார் இருந்தாலும், எத்தன ஆட்டோ இருந்தாலும் நம்ம மக்களுக்கு போதலே..,
திருநெல்வேலியில.. யிருந்து மதுரை வரைக்கும், எந்தக் கடையில போயி பார்த்தாலும்.. கடையநல்லூர் கோஷாதான். திருவனந்தபுரத்திலயிருந்து சென்னை வரைக்கும் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில எங்க போயி பார்த்தாலும் கடையநல்லூர் பேஷண்டுதான். இந்த ஊருக்கு என்ன வந்திற்று மாப்பிளே.., எப்படியிருந்த ஊரு இப்படியாகிப் போச்சேங்கிற.. மனம் வருத்தம்தான்.. மாப்பிளே..” என்று உண்மையிலே மனம் வருந்தியவராய் கூறினார் மைதீன்.
“சரியாத்தான் சொல்றியோ மச்சான்.., ஒரு காலத்துல நம்ம ஊரைப்பத்தி நெனச்சுப் பார்த்தா.., என்னையறியாமலே கண்ணீர் வந்திடும் மச்சான். நெய்ய நூல்யில்லாம, கையில..காசுயில்லாம தவியா தவிச்ச நேரம் ஒரு நேரம், சாப்பிடக்கூளுக்..கெடைக்காம, பட்டினியும் பசியுமா கழிஞ்ச நேரம் ஒரு நேரம், அப்போ இருந்த ஒண்ணுரெண்டு பணக்காரங்ககூட கெவர்மெண்ட் ஆஸ்பத்திரியில போயி.. ட்ரீட்மெண்ட் எடுத்த நேரம் ஒரு நேரம், ட்ரீட்மெண்ட்டுக்கு வெளியூர்ல போயி இறந்து போயிட்டா.. ஜனாஸாவே மாட்டு வில் வண்டியில கொண்டு வந்து அடக்குன நேரம் ஒரு நேரம், காலரா காலத்துல கொத்துக் கொத்தா குடும்பத்துல பலரு செத்து மடிஞ்ச நேரம் ஒரு நேரம், கல்யாணத்துல வெறுஞ்சோறு ஆக்கி கத்தரிக்காணம் காய்ச்சி பருப்பு வெச்சு கல்யாணம் முடிச்சது நேரம் ஒரு நேரம். அதையெல்லாம் மறக்க முடியுமா மச்சான்..” என்று மனதால் மைதீனுடன் கைகோர்த்தார் டீ மாஸ்டர் சாகுல்ஹமிது.
“என்ன செய்றது மாப்பிளே.., அப்படியொரு காலம், இப்படியொரு காலம். யாரும் கடந்த காலத்தே திரும்பிப் பாத்து உணரு..ராங்கயில்லே, நம்ம காலங்கள்தான் அப்படி இருந்தது. இப்போ இவங்க காலத்தில இப்படியெல்லாம் வாழுறாங்களேனு போறாமைப் பட்டுச் சொல்லல்லே மாப்பிளே…, புரிஞ்சுக்கிடாம வாழுறாங்களேனுதான் சொல்றேன். அப்படியிருந்த காலம் போயி.., இப்படியொரு காலம் வந்திருக்கிறதே..? இதே மாதிரி திரும்பவும் பழைய மாதிரி ஒரு தகாத காலம் வராதுங்கிறதுக்கு என்ன நிச்சையம்?. சரி அதை விடுங்கோ, இந்த மாதிரி இன்னும் எத்தன காலத்துக்குத்தான் வெளிநாட்டு வாழ்கை கெடைக்கும்னு நெனச்சிக்கிட்டு இருக்காங்கோ..?, என்ன மாப்பிளே.., என்ன சொல்றியோ?” என்று மைதீன் கேட்க,
“நீங்க சொல்றது சரிதான் மச்சான், வெளிநாட்லயிருந்து கொஞ்சப் பேரு முடுச்சிட்டு வருறாங்கோ.., ஒரு கடைய கிடைய போடுறாங்கோ.. கொஞ்ச நாள்லயே.. கடைய முடுச்சிட்டு திரும்ப பாஸ்போட்டே தூக்கிட்டு வெளிநாட்டுக்கு ஓடிப்போறாங்கோ.., ‘என்னானு கேட்டா..’ வியாபாரம் சரியில்லே நஷ்ட்டமாயிடுச்சு, இல்லேண்ணா, “பொண்டாட்டி என்னெ வெளிநாடு போகச் சொல்லி வற்புறுத்துறானு” சொல்றாங்கோ.., இதெக்கெல்லாம் என்ன காரணம்னு நெனைக்கிறியோ? எல்லாம் ஆடம்பரமா வாழனுங்கிற ஆசைதான். இருக்கிறத வெச்சு அல்ஹம்துலில்லாஹ் சொல்லவோ? சிக்கனமாயிருந்து சம்பாதிச்சத காப்பாத்தவோ தெரியாதவங்க மச்சான்” என்று நொந்து போனவராய் கூறினார் டீ மாஸ்டர்.
“அதே.. நீயும் நானும் சொல்லி என்ன புரோஜனம்..வேய், மக்கள்ளோ சிந்திக்கனும், தெங்காசிக்கு பஸ்ல போனா.. பத்து ரூபாய்தான். அதுக்குப்போயி பைக்கே எடுத்துக்கிட்டு பெட்ரோல் விக்கிற வெலையில பெட்ரோல் போட்டுக்கிட்டு, இப்படி உயிர பணயமா புடிச்சிக்கிட்டு இம்புட்டு செரமப்பட்டு போவனும்ங்கிறதும், இப்படி அநியாயமா ஆக்ஷடெண்டாகிறதையும் அவங்கள்ளோ சிந்திக்கனும்…,
சரி.., முடி உள்ளவன் அள்ளி முடுஞ்சுக்கிறானு.. நாம நெனச்சாலும், இல்லாத பயலுவளும் பைக்கு இருக்கிறவன்ட்ட ஓசிக்கு பைக்க வாங்கிட்டு பள்ளிக்கூடம் விட்டும், மதரஸாவிட்டும் பொம்ளப்புள்ளையோ வரயிலேயும், போவயிலேயும் செல பயலுவோ.. என்ன வரத்து வர்றானுவோ தெரியுமா?, எல்லாத் தெருவுலேயும் இது நடக்கத்தான் செய்து. யாராவது அவனுவுளே என்னானு கேக்காவா செய்றோம்? ஒரு எளவுமில்லே, அவங்கவங்க அவங்கவங்க சோலிய பாத்துக்கிட்டுதானே இருக்காங்கோம்.., என்ன செய்றது. அல்லாஹ்தான் இந்த ஊரையும் இந்த ஊரு மக்களையும் காப்பாத்தனும்” என்று அழாத குறையாக கூறினார் மைதீன்.
“ஆமா மச்சான். ஊரே யாரும் காப்பாத்த வேண்டாம் மச்சான். அவங்கவங்க அவங்கவங்க புள்ளையளெ காப்பாத்துனாலே போதும் மச்சான், ஊரு நல்லா ஆயிடும் மச்சான்” என்று ஆறுதலாகக் கூறினார். சாகுல்ஹமீது.
“மாப்பிளே.. பேசிக்கிட்டே.. நீங்க தந்த சாயாவே குடிச்சதே தெரியாம போச்சு, அதே மாதிரி இன்னொரு சாயா போட்டுத் தாங்கோ.., குடிச்சிட்டு ஏஞ்சோலிய பாத்துக்கிட்டு போவட்டும்” என்றார் மைதீன்.

Add Comment